Enable Javscript for better performance
தெற்கு ஆசிய கால்பந்து: இந்தியா சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    Football

    பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், போட்டியை நடத்தும் நேபாள அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி பட்டத்தை வென்றது.

    மழை பெய்து மைதானம் ஈரப்பதத்துடன் காணப்பட்டபோதும், இந்திய வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்தியாவின் ஜெர்ரி லால்ரின்சுவாலா, 18-வது நிமிடத்தில் நீண்ட தூரத்தில் இருந்து அடித்து, பந்தை அழகாக வலைக்குள் செலுத்தி இந்தியாவை முன்னிலை பெற வைத்தார். பிறகு அந்த கோலே வெற்றி கோலாகவும் அமைந்தது. இது ஜெர்ரிக்கு பிறந்த நாள் பரிசாகவும் அமைந்தது.

    அதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத் தொடரில் இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

    வாழ்த்துகள்: கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. "வீரர்கள், இந்தியாவுக்கு பெருமையை ஏற்படுத்தித் தந்துள்ளனர். இளைஞர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதே சம்மேளனத்தின் பிரதான நோக்கம் என்று கால்பந்து சம்மேளனத் தலைவர் பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளார்.

    16 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு, இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சத்திரியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தெற்கு ஆசிய கால்பந்து போட்டியில் இந்திய தேசிய கால்பந்து அணி அடுத்த மாதம் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai