பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பார்
By dn | Published on : 31st July 2013 12:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டத்தில் என்.சீனிவாசன் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தில்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையினால், பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து என்.சீனிவாசன் தாற்காலிகமாக விலகினார். வாரியத்தின் இடைக்காலத் தலைவராக ஜக்மோகன் டால்மியா பொறுப்பேற்றார்.
ஐபிஎல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு இரு நபர்கள் அடங்கிய குழுவை பிசிசிஐ அமைத்தது. இக்குழு, இரு நாள்களுக்கு முன்பு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், சீனிவாசன் மீது எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை.
அதனால், அவர் மீண்டும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு வருவார் என்று பரவலாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பிசிசிஐ அமைத்த இரு நபர் குழு இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
இதனால் விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், பிசிசிஐ தலைவர் பதவிக்கு சீனிவாசன் மீண்டும் திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து ஜக்மோகன் டால்மியா கூறுகையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.
அப்போது, தில்லியில் நடைபெறும் பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பார் என்றும் அவர் கூறினார்.
இதனை பிடிஐ செய்தியாளர்களிடம் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தார்.
எந்தப் பதவியின் அடிப்படையில் செயற்குழுக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அங்கு வந்து பாருங்கள். எதன் அடிப்படையில் பங்கேற்கிறேன் என்று உங்களுக்கே தெரியும் என்றார்.
பிசிசிஐ-யின் விசாரணைக்குழுவை சட்டத்துக்கு புறம்பானது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சீனிவாசனிடம் கேட்டதற்கு, அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கோபத்துடன் பதில் அளித்தார்.
பிசிசிஐ செயற்குழுவில் தமிழக கிரிக்கெட் சங்கம் நிரந்தர உறுப்பினராக உள்ளது. தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சீனிவாசன் உள்ளார். எனவே, தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் என்ற அந்தஸ்தில் பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பார் என்று தெரிகிறது.
மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது குறித்து பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தவுடன், பிசிசிஐ உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். சீனிவாசனும் தனது வழக்குரைஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து பிசிசிஐ செயலர் ஜெயவந்த் லீலே கூறுகையில், மும்பை உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை கூறியுள்ளது.
வாரியத்தின் விசாரணைக் குழு அறிக்கை வெறும் கண்துடைப்பு. விசாரணை அமைப்பில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள், சீனிவாசனுக்கு நெருக்கமானவர்கள் என்று தெரிவித்தார்.