காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஃபிரான்ஸ் - ஈகுவேடார் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. இருப்பினும், ஏழு புள்ளிகளுடன் குரூப் இ பிரிவில் முதலிடத்தில் உள்ள ஃபிரான்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து
Published on
Updated on
2 min read

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஃபிரான்ஸ் - ஈகுவேடார் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. இருப்பினும், ஏழு புள்ளிகளுடன் குரூப் இ பிரிவில் முதலிடத்தில் உள்ள ஃபிரான்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் ஷகிரி ஹாட்ரிக் கோல் அடித்து உதவ ஹோண்டுரஸூக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்ற ஈகுவேடார் தொடரில் இருந்து வெளியேறியது. இந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய முதல் தென் அமெரிக்க நாடு ஈகுவேடார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிரான்ஸ் - ஈகுவேடார் அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் ரியோ டீ ஜெனீரோவில் உள்ள மரகானா மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. 90 நிமிடங்கள் போராடியும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. ஹோண்டுராஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கு எதிராக எளிதில் கோல் அடித்த கரீம் பென்ஸிமா உள்ளிட்ட ஃபிரான்ஸ் வீரர்கள் யாரும் கோல் அடிக்க முடியவில்லை. ஈகுவேடார் அணியின் அலெக்ஸாண்டர் டொமிங்கஸ் அற்புதமாக கோல்களைத் தடுத்ததே இந்த முடிவுக்குக் காரணம்.

ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ஃபிரான்ஸ் வீரர் லூகாஸ் டிக்னே உடன் மோதலில் ஈடுபட்ட ஈகுவேடார் கேப்டன் அந்தோனியா வேலன்சியாவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. ஈகுவேடார் அணி பத்து பேருடன் ஆடியபோதும் ஃபிரான்ஸ் வீரர்களை கோல் அடிக்க விடாமல் தடுத்தது. இதனால் 0-0 என ஆட்டம் டிரா ஆனது.

டிரா ஆன போதிலும் ஃபிரான்ஸ் அடுத்து சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அந்த அணி நைஜீரியாவை எதிர்கொள்கிறது.

"எதிரணியின் கோல் கீப்பர் எங்கள் வாய்ப்புகளை தடுத்து விட்டார். இருப்பினும் நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டதால், எங்கள் சந்தோஷத்தில் குறைவில்லை' என ஃபிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் தெரிவித்தார். ஆனால், வேலன்சியாவுக்கு சிவப்பு அட்டை காண்பித்ததை ஈகுவேடார் பயிற்சியாளர் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் "நடந்த சம்பவம் வெட்கமளிக்கிறது. முக்கியமான வீரர் வெளியேறியபோதும் மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி ஆட்டத்தை டிராவில் முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் நடுவரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைப்பது குறித்து யோசிக்க வேண்டும்' என்றார்.

ஸ்விட்சர்லாந்து வெற்றி: மனாஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தும், ஹோண்டுராஸூம் மேதின. ஆட்டத்தின் 6,31 மற்றும் 71-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஷகிரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் ஜெர்மனியின் தாமஸ் முல்லர் போர்ச்சுகல் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தார்.

கடைசி வரை போராடியும் ஹோண்டுராஸ் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்றது. மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்த ஹோண்டுரஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

குரூப்-16 சுற்றில் ஸ்விட்சர்லாந்து அணி, மெஸ்ஸியின் தலைமையிலான ஆர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது.

தோல்வியால் பதவி விலகியவர்கள்

*ஹோண்டுராஸ் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் லூயிஸ் ஃபெர்ணான்டோ செளரஸ் பதவி விலகினார். "மன்னித்து விடுங்கள், என்னால் வெற்றிபெற முடியவில்லை. உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது என் கனவு. இது நனவாகாதது வருத்தம் அளிக்கிறது' என லூயிஸ் தெரிவித்தார்.

*ஆசிய சாம்பியனான ஜப்பானும் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதற்குப் பொறுப்பேற்று ஜப்பான் பயிற்சியாளர் ஆல்பெர்டோ ஜசெரோனி பதவி விலகினார். "இந்த முடிவு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது. இரண்டாவது சுற்றுக்கு முன்னேற போராடியும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்' என்றார்.

ஆனால், 1958-க்குப் பின் உலகக் கோப்பையில் மோசமான தோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து அணியின் மேலாளர் ராய் ஹட்ஜ்சன் மட்டும் பதவி விலக மறுத்துள்ளார்.

ஆட்டங்கள்

ஜூன் 28: பிரேசில் - சிலி

(இரவு 9.30)

ஜூன் 29: கொலம்பியா - உருகுவே

(அதிகாலை 1.30)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.