ஆசியப் போட்டிகளில் ஊஷூ எனப்படும் ஒருவகை தற்காப்பு ஆட்டத்தில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
மகளிருக்கான சாண்டா 52 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தௌடம் சனதோய் தேவியும், சீனாவின் ஜங் லுயானும் மோதினர். முன்னணி வீராங்கனையான ஜங் லுயானுக்கு நிகராக, இந்திய வீராங்கனையால் போராட முடியவில்லை. இறுதியில் மணிப்பூரைச் சேர்ந்த சனதோய் தேவி 0-2 என தோல்வியடைந்தார்.
அதேபோல, ஆடவருக்கான சாண்டா 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நரேந்தர் கிரேவால், பிலிப்பைன்ஸின் ஜீன்கிளேட் சக்லேக்கிடம் தோல்வியடைந்தார்.
இருப்பினும், இருவரும் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் இருவருக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்தன. 2010 ஆசியப் போட்டியிலும் ஊஷூ பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சதீஷ் குமார் சுகவீனம்
காமன்வெல்த்தில் ஆடவருக்கான பளு தூக்குதல் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்தின், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகினார்.
"காய்ச்சல் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சதீஷ்குமார் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இரண்டு நாள்களுக்கு முன் அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். இதற்கிடையே உடல்நிலை தேறியதால் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், செவ்வாய்க்கிழமை அவர் மீண்டும் சுகவீனம் அடைந்தார். மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை' என, இந்திய அணியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அட்லீ சுமரிவாலா தெரிவித்தார்.
படகுப் போட்டி: பதக்கப் பிரிவில் இந்தியர்கள்
படகுப் போட்டியில் இந்திய வீரர்கள் மூன்று பிரிவுகளில் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கும் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆடவருக்கான ஒற்றையர் துடுப்பு பிரிவில் சவர்ன் சிங் விர்க்கும், இரு நபர்களுக்கான துடுப்பு பிரிவில் ஓம் பிரகாஷ் தத்து பபன் போகனலும், நான்கு நபர்களுக்கான துடுப்பு பிரிவில் ராகேஷ் ரலியா, விக்ரம் சிங், சோனு லட்சுமி நாராயண், சோகேந்தர் தோமர் ஆகியோரும் பதக்கம் வெல்லும் சுற்றுக்கு முன்னேறினர்.