ரகுநாத் எட்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலடிக்கத் தவறியபோதும், ரூபிந்தர் பால் சிங் காயம் காரணமாக வெளியேறிய போதிலும், ஆடவர் ஹாக்கி பிரிவின் குரூப் சுற்றில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது.
இந்திய அணிக்கு 18, 19-வது நிமிடங்களில் கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர்களையும் ரூபிந்தர் பால் சிங் கோலாக மாற்ற இந்திய அணி முன்னிலை பெற்றது. துரதிருஷ்டவசமாக 2-வது பெனால்டி கார்னரை கோலாக மாற்றிய அடுத்த நொடி, வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ரூபிந்தர் சிங் களத்தில் இருந்து வெளியேறினார்.
அதன்பின், அதிர்ஷ்டவசமாக இந்திய அணிக்கு 9 பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. ஆனால், ரகுநாத் ஒரு வாய்ப்பை மட்டுமே கோலாக மாற்றினார். மற்றவை எல்லாம் வீணடிக்கப்பட்டன. இருப்பினும் ஒரு பெனால்டி ஸ்ட்ரோக்கை வலைக்குள் செலுத்தினார்.
முடிவில், ரகுநாத் தரப்பில் இரண்டு கோல்கள் (39, 60) அடிக்கப்பட்டன. ஆகாஷ்தீப் சிங் (33-வது நிமிடம்), ரமன்தீப் சிங் (54-வது நிமிடண்), தனிஷ் முஜ்தமா (60-வது நிமிடம்) ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்திருந்தனர். கத்துக்குட்டியான ஓமன் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்திய அணி வெற்றி பெற்றாலும், 5 நிமிடத்தில் 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் இவை அனைத்தையும் ரகுநாத் வீணடித்தது ரசிகர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. ஓமனிடமே இத்தனை கோல் வாய்ப்புகளை "மிஸ்' செய்தனர் என்றால், பாகிஸ்தான் போன்ற அணிகளிடம் எப்படி கோல் அடிப்பர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.