சுடச்சுட

  

  ஃபிஃபா உலக கோப்பை: முதுமையும் இளமையும்... இன்னும்10 நாள்கள் 

  By dn  |   Published on : 02nd June 2014 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt1

  பல்வேறு சிறப்புகளுக்காக ஃபிஃபா-2014 உலகக் கோப்பை முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளபோது இந்த விளையாட்டுக்கு இத்தனை ஆடம்பரம் தேவைதானா என்று பிரேசிலிலேயே ஒரு கூட்டம் எதிர்ப்பு தெரிவித்து வரும்போதும், போட்டியின் மீது சர்வதேச அளவிலான ஆர்வம் மட்டும் குறையவில்லை.

  கால்பந்து ஆட்டத்தில் கோல் அடிக்கப்படுகிறதோ, இல்லையோ, 90 நிமிடங்கள் மைதானம் முழுவதும் ஓடியாக வேண்டிய கட்டாயம். இத்தகைய ஓட்டத்தில் முதுமையும், இளமையும் இணைந்து ஒரு பந்தை துரத்திக் கொண்டு ஓடுவதுதான் கூடுதல் சிறப்பு.

  இத்தாலி கோல் கீப்பரான டினோ úஸாஃப், முதல் உலகக் கோப்பையை வெல்வதற்காக 40 ஆண்டுகள் காத்துக் கிடந்தாராம். ஆனால், தங்களது முதல் உலகக் கோப்பைகளிலேயே பீலே முதல் மைக்கேல் ஓவன் வரை சிறப்பு பெற்றும் திகழ்ந்தனர்.

  இந்த உலகக் கோப்பையில் முதுமை, இளமை ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை ஆடுகளத்தில் பார்ப்போம். அதற்கு முன் அவர்களைப் பற்றி சிறிது அலசுவோம்.

   

  மிரோஸ்லவ் க்ளோஸ் (ஜெர்மனி)

  வயது: 36

  ஜெர்மனியின் முன்கள வீரரான க்ளோஸ், உலக சாதனையை சமன் செய்வதற்காக அல்லது முறியடிப்பதற்காக இத்தொடரில் குதிக்கிறார். பிரேசிலின் முன்னாள் வீரரான ரொனால்டோவின் 15 உலகக் கோப்பை கோல்களை எட்ட, க்ளோஸூக்குத் தேவை மேலும் ஒரே ஒரு கோல்.

  ஜெர்மனிக்காக 68 கோல்களை அடித்துள்ள க்ளோஸ் கூறுகையில், "சாதனை மீது ஈர்ப்பு இல்லை என்று கூற முடியாது. அது குறித்த ஆர்வம் எனக்கும் உண்டு. ஆனால், அணியின் நலனே முக்கியம்' என்று தனது அடக்கத்தை வெளிப்படுத்துகிறார்.

  மேலும், ஒரு கோல் அடித்தால் ரொனால்டோ சாதனையை முறியடிப்பதுடன் அதிக கோல் அடித்த ஜெர்மனி வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

  இது, க்ளோஸூக்கு கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்பதால் சாதனைகளை விட உலகக் கோப்பையை நோக்கி அவர் ஓடுவார் என்று நம்பலாம்.

  வில்லியம் கார்வல்ஹோ (போர்ச்சுகல்)

  வயது: 22

  போர்ச்சுகலில் புகழ்பெற்ற லிஸ்பான் கால்பந்து அகாதெமி கண்டெடுத்த சமீபத்திய முத்தாக கார்வல்ஹோ கருதப்படுகிறார். அங்கிருந்துதான் லூயிஸ் ஃபிகோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உற்பத்தியாகினர். இந்த உலகக் கோப்பையில் ஸ்வீடனுக்கு எதிரான முக்கியமான தகுதிச்சுற்றில் கோலடித்து, பிரதான சுற்றுக்கு அணியை முன்னேற வைத்தவர் கார்வல்ஹோ. "ஊடகங்களால் எதிர்காலத்தில் கொண்டாடப்படும் வீரராக இவர் உருவெடுப்பார்' என்று சக வீரர் கெபல் தெரிவிக்கிறார்.

   

  திதியர் டிராக்பா (ஐவரி கோஸ்ட்)

  வயது: 36

  செல்சியா கிளப் அணிக்கு விளையாடும்போது பெரும் புகழ் பெற்றவர்; இருமுறை ஆப்பிரிக்க கால்பந்து வீரருக்கான விருதை வென்றவர். அவ்வாறு இருப்பினும், சர்வதேச அளவில் பெரிய வெற்றிகளைப் பெறாததால் ஏமாற்றுத்துடன் உள்ளார் டிராக்பா.

  ஐவரி கோஸ்ட் அணியின் கேப்டனான இவர், 2006- உலகக் கோப்பையில் ஜெர்மனிக்கு எதிராக முதல் கோலை அடித்தார். இதுவே, உலகக் கோப்பை தொடரில் ஐவரி கோஸ்ட் சார்பில் அடிக்கப்பட்ட முதல் கோலாகும்.

  இருப்பினும் அந்த உலகக் கோப்பையிலும், அடுத்த உலகக் கோப்பையிலும் முதல் சுற்றையே ஐவரி கோஸ்ட் தாண்டவில்லை என்பது ஏமாற்றம். ஆனால், இந்த முறை முதல் சுற்றைக் கடந்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் டிராக்பா.

  இவர், தனது நாட்டுக்காக 60 கோல்களை அடித்துள்ளார்.

  ஸேவி ஹெர்ணான்டஸ் (ஸ்பெயின்)

  வயது: 34

  2008 ஐரோப்பிய சாம்பியன், 2010 உலகக் கோப்பை, 2012 ஐரோப்பிய சாம்பியன் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கும் ஸேவி, இம்முறையும் ஜொலிப்பார் என்பதில் ஐயமில்லை. பந்தை கடத்துவதும், எதிரணி வீரரிடம் பறிகொடுக்காமல் தட்டிச் செல்வதிலும் இவர் வல்லவர். இந்த சீசனலில் பார்சிலோனா கிளப் அணியில் சந்தித்த ஏமாற்றத்துக்கு உலகக் கோப்பையில் பதில் தர காத்திருக்கிறார்.

  அட்னன் ஜனுஸஜ் (பெல்ஜியம்)

  வயது: 19

  மான்செஸ்டர் யுனைடெட் அணியில் அசாத்திய ஆற்றலை வெளிப்படுத்தி பெல்ஜியம் அணியின் பயிற்சியாளர் மார்த் வில்மோட்ஸின் கவனத்தை ஈர்த்தவர் அட்னன். "பந்துடன் ஓடுவதில் திறமைசாலியான அட்னனின் ஆட்டம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும்' என்று மான்செஸ்டர் அணியின் ரியான் ஜிக்ஸ் தெரிவிக்கிறார்.

  பெளல் போக்பா (ஃபிரான்ஸ்)

  வயது: 23

  "அணிக்குத் தேவையான அனைத்தையும் போக்பா அளிப்பார்' என்று அவரது திறமையின்மேல் நம்பிக்கை வைத்து கூறுகிறார் ஃபிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ். இத்தாலியில் நடைபெற்ற ஓர் ஆட்டத்தில், நீண்ட தூரத்தில் இருந்து கோலடித்தது, பெரும் மரியாதையை அவருக்கு ஈட்டித் தந்தது. அதுவே, அவரை உலகக் கோப்பை வரையும் இழுத்து வந்துள்ளது.

  ரஹீம் ஸ்டெர்லிங் (இங்கிலாந்து)

  வயது: 19

  பிரீமியர் லீக் தொடரில் லிவர்புல் அணிக்காக பல கோல்களை அடித்து பிரகாசித்தவர் ஸ்டெர்லிங். காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய தியோ வால்கட்டுக்குப் பதிலாக, உலகக் கோப்பை எனும் கடலில் இவர் குதிக்க நேரிட்டது. "சரிவிகிதத்தில் விளையாடக் கூடிய ஸ்டெர்லிங்கை எதிரணியினர் எளிதாக எடை போட்டுவிடக் கூடாது' என்று இங்கிலாந்து பயிற்சியாளர் ராய் ஹட்ஜ்சன் எச்சரிக்கிறார்.

  ஸ்டீவன் ஜெரார்டு (இங்கிலாந்து)

  வயது: 34

  இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜெரார்டு, தனது தேசிய அணிக்காக பல ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீரர்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆகவே, இது அவரது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதற்குமுன், உலகக் கோப்பைத் தொடர்களில் இவர் களம் கண்டிருந்தாலும், காலிறுதிச்சுற்றைத் தாண்ட முடியாதது தனது கால்பந்து வரலாற்றில் உள்ள குறையாக அவர் கருதுகிறார். அக்குறை இத்தொடரில் போக்க அவர் முயற்சிப்பார்.

  இருப்பினும், "நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று கூறுவது முட்டாள்தனமானது. பிரேசிலில் 100 சதவீத உழைப்பை அளிப்போம் என்பதற்கு வேண்டுமானால் நான் உறுதி அளிக்கிறேன்' என்ற ஜெரார்டின் கூற்று கவனிக்க வேண்டியது.

   

  செர்ஜி அரியர் (ஐவரி கோஸ்ட்)

  வயது: 22

  ஐவரி கோஸ்ட் கேப்டன் டிராக்பாவுக்கு பக்க பலமாக பலம் சேர்ப்பவர் அரியர். 16ஆவது வயதில் கிளப் அணியில் இணைந்த இவர், தனது பலத்தால் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டவர். "இளம் வீரர் என்பதால், இன்னும் நிறைய இவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், அரியரிடம் போதுமான ஆற்றல் உள்ளது' என்று பயிற்சியாளர் கேசனோவா தெரிவிக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai