சுடச்சுட

  

  மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏழாவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் திறமை மற்றும் அதிர்ஷ்டத்துடன் வெற்றி பெற்று 2ஆவது முறையாக கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

  "சிறப்பான தொடக்கம், பாதி வெற்றிக்குச் சமம்' என்ற பழமொழி பஞ்சாபுக்கு இத்தொடரில் பொருந்தவில்லை. இத்தொடரில் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வந்த பஞ்சாபுக்கு முதலாவது தகுதிச்சுற்றும், இறுதிச்சுற்றும் கைகொடுக்கவில்லை. அதனால், முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை அந்த அணி இழந்தது.

  பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் நிர்ணயித்த 200 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா எட்டியது.

  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 2ஆவது தகுதிச்சுற்றில் சதம் அடித்து தோனியின் சென்னை அணியை வெளியேற்றிய சேவாக், இம்முறை 7 ரன்களிலும், பெய்லி 1 ரன்னிலும் பெவிலியன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

  அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை மனன் வோராவும், ரித்திமான் சாஹாவும் தடுத்து நிறுத்தினர்.

  3ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்களை எடுத்தது. வோரா, 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

  சாஹா சதம்: 29 பந்துகளில் அரை சதம் அடித்திருந்த சாஹா, தனது பேட்டை தொடர்ந்து சுழற்றியதால், 49 பந்துகளில் சதம் அடித்து மட்டையை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

  20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை எடுத்தது.

  இறுதிவரை ஆட்டமிழக்காத அவர் 55 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். இதில், 8 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும்.

  கொல்கத்தா தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், யாதவ் மற்றும் நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  பாண்டேவின் நாள்: அதிக ஸ்கோரை சேஸ் செய்யும் முயற்சியில் ஷாரூக்கானின் கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், முக்கியமான ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பேட் செய்ய வந்த பாண்டே, இந்த நாளை தனக்கான நாளாக உருவாக்கிக் கொண்டார்.

  சிறிதும் பதற்றமின்றி காணப்பட்ட அவர், களத்தில் இறங்கியதுமுதல் அதிரடியை வெளிப்படுத்தி வந்தார்.

  அவருக்கு பக்க பலமாக விளையாடிய பதான் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் தனி ஆளாக அவர் போராடினார். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அவர் வெளியேற்றப்பட்டார். அவர் 50 பந்துகளில் 94 ரன்கள் (6 சிக்ஸர், 7 பவுண்டரி) எடுத்தார்.

  பரபரப்பு: வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டம். 19ஆவது ஓவரை வீச ஜான்சன் வந்தார். தனக்கு பெய்லி விடுத்த பணியை அந்த ஓவரின் 5ஆவது பந்து வரை சிறப்பாகச் செய்த ஜான்சன், கடைசி பந்தில் கோட்டை விட்டார். அதனை சாவ்லா சிக்ஸருக்கு விரட்டினார். அப்போதே வெற்றிக் கோட்டை எட்டும் தூரத்துக்கு கொல்கத்தா சென்று விட்டது. கடைசி ஓவரின் 2 பந்துகளில் 1 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்த அவானா, 3-வது பந்தில் பவுண்டரியை அளிக்க, வெற்றியை எட்டியது கொல்கத்தா அணி.

  தொடரின் தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த கொல்கத்தா அணி, தொடரில் கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் தொடர்ந்து வென்றது. இது, கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்பதை நிரூபித்துள்ளதாக அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரம் பெருமிதத்துடன் தெரிவித்தார். கொல்கத்தா அணிக்கு தொடரின் தொடக்கம் சரிவாக இருந்தாலும், முடிவை அந்த அணி வீரர்கள் சுபமாக்கினர்.

   

  இத்தொடரில்

  தனிப்பட்ட நபரின் அதிகபட்சம்

  சேவாக் 122

  சாஹா 115*

  சிம்மன்ஸ் 100*

   

  அதிக ரன்கள்

  உத்தப்பா 660

  ஸ்மித் 566

  மேக்ஸ்வெல் 552

   

  அதிக சிக்ஸர்கள்

  மேக்ஸ்வெல் 36

  ஸ்மித் 34

  யுவராஜ் 28

   

  அதிக விக்கெட்

  மொஹித் சர்மா 23

  சுனில் நரைன் 21

  புவனேஸ்வர் குமார் 20

   

  சிறந்த பந்து வீச்சு

  ஜடேஜா 4வி/12

  பாலாஜி 4வி/13

  மொஹித் 4வி/14

   

  வேகமான சதம்

  சாஹா 49 பந்துகள்

  (8 சிக்ஸர், 10 பவுண்டரி)

  சேவாக் 50 பந்துகள்

  (8 சிக்ஸர், 12 பவுண்டரி)

  சிம்மன்ஸ் 61 பந்துகள்

  (2 சிக்ஸர், 14 பவுண்டரி)

   

  வேகமான அரை சதம்

  பதான் 15 பந்துகள்

  (7 சிக்ஸர், 5 பவுண்டரி)

  ரெய்னா 16 பந்துகள்

  (6 சிக்ஸர், 12 பவுண்டரி)

  மில்லர் 19 பந்துகள்

  (6 சிக்ஸர்)

   

  வேகமான பந்து

  ஸ்டெயின் 152.44 கி.மீ/மணி

  மோர்கல் 151.34   கி.மீ/மணி

  மோர்கல் 151.18   கி.மீ/மணி

   

  பரிசுத் தொகை

  கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 15 கோடி பரிசளிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai