சுடச்சுட

  

  எட்டுமுறை பிரெஞ்சு ஓபன் நாயகனான ஸ்பெயினின் ரஃபேல் நடால், பாரிஸில் நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபனின் காலிறுதியை எட்டியுள்ளார்.

  திங்கள்கிழமை நடாலின் 28ஆவது பிறந்த தினம். அன்றைய தினத்தில், செர்பியாவின் டுசன் லஜோவிச்சை 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, வெற்றியை தனக்கு பரிசாக அளித்துக் கொண்டார் நடால்.

  இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், "டுசானுக்கு இது சிறந்த தொடர். 3 சுற்றுகளில் அவர் அற்புதமான வெற்றிகளைப் பெற்றுள்ளார்' என்று தெரிவித்தார்.

  பாரிஸில் கடைசியாக விளையாடிய 64 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் நடால் வென்று பெரும் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

  "பிரெஞ்சு ஓபனை 5 முறை தொடர்ந்து வென்ற வீரன்' என்ற பெருமையை பெரும் ஆவலில் நடால் உற்சாகத்துடன் ஒவ்வொரு சுற்றையும் கடந்து வருகிறார்.

  தனது காலிறுதி ஆட்டத்தில் சக நாட்டவரான டேவிட் ஃபெரரை, நடால் எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் இவர்கள் இருவரும்தான் மோதினர். அந்த ஆட்டத்தில் ஃபெரரை எளிதாக வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

  இவர்கள் இருவரும் இதுவரை 27 ஆட்டங்களில் மோதியுள்ளனர். அதில், 21 ஆட்டங்களில் நடாலும், 6 ஆட்டங்களில் ஃபெரரும் வாகை சூடியுள்ளனர்.

  ஜோகோவிச்-ரயோனிக்: ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 4ஆம் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச் 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஃபிரான்ஸின் சோங்கோவை வீழ்த்தினார்.

  மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் மிலோஸ் ரயோனிக் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கிரானோல்லர்ûஸ வீழ்த்தினார். காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சும், ரயோனிக்கும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

  அனைத்தும் சரியாக அமைந்தால் நடாலும், ஜோகோவிச்சும் இறுதிச்சுற்றில் மோத வாய்ப்புள்ளது.

  "காலிறுதி போதாது; அரையிறுதி வேண்டும்'

  ""காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி. இதற்கு முன் பிரெஞ்சு ஓபனின் காலிறுதிக்கு 4 முறை முன்னேறி விட்டேன். ஆனால், ஒருமுறை கூட அதைக் கடக்க முடியவில்லை. அதனால், காலிறுதிச்சுற்றைக் கடந்த பின்பே எனது ஆட்டம் குறித்து கூறுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்'' என்று ஜெர்மனியின் ஆன்ட்ரே பெட்கோவிச் தெரிவித்தார்.

  இவர், 4ஆம் சுற்று ஆட்டத்தில் 1-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ûஸ வீழ்த்தினார்.

  இவர், தனது காலிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ராணியுடன் மோதுகிறார்.

  களிமண் தரையில் வலுவான வீராங்கனை என்று அழைக்கப்படும் எர்ராணி, தனது 4-ம் சுற்றில் 7-6, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியாவின் ஜான்கோவிச்சை வீழ்த்தினார்.

  திங்கள்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹலேப் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ûஸ தோற்கடித்து காலிறுதியை எட்டினார்.

  ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டங்களில் ஸ்பெயினின் முகுருஸாவும், ரஷியாவின் மரியா ஷரபோவாவும் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai