Enable Javscript for better performance
பிரேசிலியர்களின் எதிர்பார்ப்பு- Dinamani

சுடச்சுட

  

  பிரேசிலியர்களின் எதிர்பார்ப்பு

  By ம.பண்டரிநாதன்  |   Published on : 03rd June 2014 12:47 AM  |   அ+அ அ-   |    |  

  சில மாதங்களுக்கு முன்புவரை, பிரேசில் ஊடகங்களில் பிரதான செய்தியாக வந்தது அந்நாட்டின் பொருளாதார சரிவு மட்டுமே. ஆனால், ஃபிஃபா உலகக் கோப்பைக்கான நாள்கள் நெருங்க நெருங்க, உலகக் கோப்பை தொடர் முதன்மைச் செய்தியாகவும், பொருளாதார நிலை இரண்டாவது இடத்துக்கும் தள்ளப்பட்டது.

  இரு நாடுகளுக்கு இடையே பல கட்ட பேச்சுவார்த்தையில் காண முடியாத ஒரு சூழலை, விளையாட்டுப் போக்கில் ஏற்படுத்தக் கூடியது வலிமை விளையாட்டுக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு இருக்கையில், சர்வதேச அளவிலான ஒரு போட்டி, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவாதா என்று கேள்வியிலேயே பதிலை ஒளித்து கேட்கிறது பிரேசில் அரசு.

  5 உலகக் கோப்பைகளை வென்று விட்டோம். அப்படி இருந்தும் பொருளாதாரத்தில் மாற்றம் இல்லையே என்று உலகக் கோப்பைக்கு எதிரான போராட்டக்காரர்களின் குரலிலும் நியாயம் இருப்பதாகத்  தோன்றுகிறது.

  இருப்பினும், பிரேசிலில் பிறந்தாலோ போதும், கால்பந்து ஒருவருக்கு பரிச்சயமாகிவிடும் என்ற பிரேசிலயரின் கூற்றுடன் ஒப்பிடும்போது, உலகக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பை அந்நாடு விட்டுவிடுமா என்ன? என்ன விலை கொடுத்தாவது அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது என்ற அவர்களின் முயற்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

  பிரேசிலில் நடைபெறும் போட்டியில், பிரேசிலே கோப்பையை வெல்லும் என்ற பரவலான கணிப்பு, அந்நாட்டு மக்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.

  இந்த திருவிழாவுக்காக அனைத்து வகையிலும் அவர்கள் தயாராகி விட்டனர்.  கால்பந்து ஆட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் காண்பதற்கு ஏதுவாக, அரசுத் துறை முதல் தனியார் துறை வரை விடுமுறைப் பட்டியலை வெளியிட்டு விட்டது.

  பயணிகளைக் கவர பேருந்துகளில் பல்வேறு வர்ணங்களில் வீரர்களின் உருவப்படங்கள் வரையப்பட்டுள்ளன.

  போட்டி நடைபெறும் இரவில் பீர் விற்பனை உச்சத்தைத் தொடும் என்றும், அடுத்தநாள் காலையில், முந்தைய நாள் போட்டி குறித்து விவாதத்தின்போது காஃபி விற்பனை எகிறும் என்றும் கடைக்காரர்கள் உற்சாகம் பொங்க தெரிவிக்கின்றனர்.

  "எங்கள் அணி பலமாகத்தான் உள்ளது. அதேசமயம், எனது வியாபாரமும் பெருகுமென நம்புகிறேன்' என்று இனிப்பு பாப்-கார்ன் விற்பனையாளரான மார்செலோ மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

  பிரேசில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அணியின் சீருடை நிறத்திலேயே கேக் விற்பனைக்கு இருப்பதை பிரேசில் வீதிகளில் சாதாரணமாகக் காண முடியும்.

  இது தவிர, வாடகைக் கார்கள், சிறு வணிகர்களும் தங்களது இலக்கை எட்ட ஆயத்தமாகியுள்ளனர். இவை, உலகக் கோப்பை தொடரின் மூலம் கிடைக்கும் மறைமுக வேலை வாய்ப்புகளாகும்.

  இந்த உலகக் கோப்பைக்கு பல ஆண்டுகளாக பிரேசில் அரசு கடும் உழைப்பை அளித்து வந்தது. அதன்பலன், அடுத்த பல ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும் என்று அதிபர் ரூசெஃப் தலைமையிலான அரசு உறுதியாக நம்புகிறது.

  ""உலகக் கோப்பை தொடர் நடத்துவதால், 2019ஆம் ஆண்டுவரை எங்களது பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் 0.4 சதவீதம் உயரும்.  வரி வசூல் மூலம் அரசு கருவூலத்துக்கு கூடுதல் நிதி கிடைக்கும். ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களைத் தவிர, இதர பகுதிகளுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளால் கிடைக்கும் பயனையும் நாங்கள் அறுவடை செய்ய உள்ளோம்'' என்று பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆல்டோ ரபெல்லோ கூறுவதில் நிதர்சனம் அடங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

  ""2010ஆம் ஆண்டு உலக்க் கோப்பையை நடத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வருமானத்தை விட 20 மடங்கு அதிகமாக இந்த உலகக் கோப்பை மூலம் பிரேசிலுக்கு கிடைக்கும்'' என்று அந்நாட்டு சுற்றுலா இன்ஸ்டிட்யூட் கூறுவது கவனிக்கத்தக்கது.

  பிரேசிலியர்கள் பீர் பிரியர்கள் என்று கூறப்படுவது உண்டு. அதனால், இத்தொடரின்போது மட்டும் பிரேசிலில் பீர் விற்பனை 37 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அதன்மூலம் 816 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  பிரேசில் அணி அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமென, ரசிகர்களை விட வணிகர்களே அதிகம் பிரார்த்தனை நடத்துவர் என்று தெரிகிறது. எப்படியும் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகளுள் ஒன்றாக பிரேசிலும் இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

  வரவும் செலவும்

  12 மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக 14 பில்லியன் டாலர்

  பிரேசிலில் ஃபிஃபாவின் செலவு 2 பில்லியன் டாலர்

  ஃபிஃபா எதிர்பார்க்கும் வருமானம் 4 பில்லியன் டாலர்

  சாம்பியன் அணிக்கான பரிசுத் தொகை 35 மில்லியன் டாலர்

  இதர 31 அணிகளுக்கான பரிசுத்தொகை 323 மில்லியன் டாலர்

  சுற்றுலாப் பயணிகளால் பிரேசில் எதிர்பார்க்கும் வருமானம் 3 பில்லியன் டாலர்.

  "தேவை ஃபுட்பால் அல்ல; ஃபுட்'

  2 வார்த்தைகள் தற்போது பிரேசில் மக்களுக்கு பரிச்சயமாகியிருக்கும். முதலாவது ஃபிஃபா உலகக் கோப்பை. இரண்டாவது கிராஃப்பிட்டி எனும் சுவரில் வரையப்படும் ஓவியம்.

  நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில் உலகக் கோப்பை போட்டி வேண்டாம் என்று உரக்க குரல் கொடுப்பவர்களை பிரேசில் வீதிகளில் காண முடியும். அவர்கள் தங்களின் போராட்டத்தை பரப்ப, கிராஃப்பிட்டியை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, சா பாலோ தெருக்களில் நடந்து சென்றால் இந்த கிராஃப்பிட்டி ஓவியத்தை ரசிக்கவும் முடியும். அதன் உட்பொருளை அறியும்போது காண்போரை அது வருத்தம் அடையவும் வைக்கும்.

  பிரேசில் அரசு எப்படி உள்ளூர் மக்களின் நலனை புறக்கணித்துள்ளது என்பதை வெளிநாட்டவர் இந்த ஓவியங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

  ஒட்டு மொத்த போட்டிக்கு செய்யும் 11 பில்லியன் டாலரை, தரமான சாலை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு செலவிடலாமே என்பது போராட்டக்காரர்களின் குரலாகும். ""இந்த போராட்டங்களின் மூலம், நற்பணிகளை அரசு மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. எங்களது ஆர்வமும் அதுவே'' என்று கிராஃப்பிட்டி ஓவியர் பாவோ தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

  டிக்கெட் விற்பனை
  4 வாரங்கள் நடைபெறும் கால்பந்து திருவிழாவில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்காக சுமார் 33 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதுவரையிலான டிக்கெட் விற்பனை சாதனையை இத்தொடர் முறியடித்துள்ளது. மரகானா மைதானத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தைக் காண்பதற்கான டிக்கெட் தொகை 990 டாலர்(சுமார் ரூ. 58,000). ""தொடரைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியில் ஏற்கெனவே வெற்றி அடைந்து விட்டது. இதுவரையில் இல்லாத அளவுக்கு டிக்கெட் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது'' என்று ஃபிஃபாவின் இயக்குநர் ஜெனரல் ஜெரோமா வால்கோ தெரிவிக்கிறார்.

  kattana sevai