சுடச்சுட

  
  petko

  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு செர்பியாவின் பெட்கோவிச், ருமேனியாவின் சிமோனா ஹாலேப் ஆகியோர் முன்னேறினர்.

  பாரிஸில் புதன்கிழமை மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சாரா எர்ரானியும், 28-வது இடத்தில் உள்ள பெட்கோவிச்சும் மோதினர். 63 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் முன்னணியில் உள்ள வீராங்கனை சாராவை, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார் பெட்கோவிச்.

  மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஹாலேப்பும், தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள ரஷியாவின் குசனெட்சோவாவும் மோதினர். இதில் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ஹாலேப் வெற்றி பெற்றார்.

  அரையிறுதியில் ஜோகோவிச்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு காலிறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோகோவிச் 7-5, 7-6(4), 6-4 என்ற செட் கணக்கில் ரயோனிக்கை வீழ்த்தினார். இதன் மூலம் ஆறாவது முறையாக பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

  முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் வெல்லும் முனைப்பில் உள்ள ஜோகோவிச்சுக்கு அரையிறுதியில் சவால் காத்திருக்கிறது. ஏனெனில், மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசைச் சேர்ந்த தாமஸ் பெர்டிச்சை 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்த லத்வியாவின் இளம் வீரர் எர்னஸ்ட் குல்பிஸ் அச்சுறுத்தலாக உள்ளார்.

  25-வயதாகும் குல்பிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிராண்ட்ஸ்லாம் நாயகன் ஃபெடரரை தோற்கடித்திருந்தார். அதிலிருந்தே குல்பிஸ் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது.

   

  மழையால் தாமதம்

   

  புதன்கிழமை ஆட்டம் தொடங்குவதற்கு முன் கனமழை பொழிந்தது. இதனால் ஆட்டம் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்று மைதானம் தயாரான பின் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ரானியும், செர்பியாவின் பெட்கோவிச்சும் மோதினர்.

  தூண்டினால் கொதிக்கும் ஷரபோவா...

  காலிறுதியில் ரஷியாவின் ஷரபோவா, ஸ்பெயினின் முகுருஸாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றிக்குப் பின் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரேவின் தாயார் ஜூடி முர்ரே, தனது டுவிட்டர் இணையப் பக்கத்தில் ஷரபோவா குறித்து ஒரு வினோதமான கருத்தைப் பதிவு செய்தார்.

  "ஷரபோவா ஒரு "டீதூள் பாக்கெட்' போன்றவர். அவரை சூடான தண்ணீரில் தூக்கிப் போட்டால்தான் அவரது வலிமை தெரியும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த டுவிட் குறித்து ஷரபோவாவிடம் கேட்டதற்கு "மன்னிக்கவும், ஜூடி முர்ரே யார் என்றே தெரியாது. நான் தீவிர தேநீர் பிரியை. இருந்தாலும் அவர் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை' என்றார்.

  பின், ஜூடி தெரிவித்த கருத்தை நிருபர்கள் விளக்கினர். அதன்பின் ஷரபோவா "ஜூடி புதுவிதமான சிந்தனை கொண்டவர்' எனத் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai