சுடச்சுட

  
  Casillas

  ஹாக்கியைப் போலவே, கால்பந்து விளையாட்டில் மிக முக்கியமான நபராகக் கவனிக்கப்படுவது கோல் கீப்பர். ஆட்டத்தின்போது சக வீரர்கள் செய்யும் சிறிய தவறுகளைக் கூட சரி செய்யும் பொறுப்பு கோல் கீப்பருக்கே உள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் முக்கியமான ஆட்டத்தில், 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாது அல்லது இரு அணிகளின் கோல்களும் சமநிலையில் இருக்கும். அப்போதுதான் கோல் கீப்பரின் மதிப்பு என்ன என்பது தெரியவரும். ஆடுகளத்தில் மற்ற வீரர்களைப் போல் கோல் கீப்பர் என்பவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ அல்லது பதற்றத்துடனோ காணப்படக் கூடாது.

  எதிரணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தால், அந்த அணியின் எந்த வீரர் பெனால்டி கிக் செய்வார், கோல் கம்பத்தினுள் எப்பகுதியில் பந்தை அவர் அடிப்பார், பந்தை உதைக்கும் வேகம் ஆகிய முக்கியக் காரணிகளை கோல் கீப்பர் அறிந்து வைத்திருந்தால், 75 சதவீதத்துக்கும் மேல் பெனால்டி வாய்ப்பை கோல் கீப்பர் தடுக்க முடியும் என்று கால்பந்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  கடந்த காலங்களில் ஜொலித்த, இந்த உலகக் கோப்பையில் பிரகாசிக்க உள்ள கீப்பர்களைப் பற்றி காண்போம்.

   

  ஐகர் கேஸிலெஸ் (ஸ்பெயின்)

  மற்ற அணிகளில் ஓரிரு நட்சத்திர வீரர்கள் மட்டுமே இருப்பர். ஆனால், ஸ்பெயின் அணியில் இருப்பவர்களில் பெரும்பாலான வீரர்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளனர். அதற்கு முத்தாய்ப்பாக அந்த அணியின் கோல் கீப்பர், சர்வதேச அளவில் சிறந்த கீப்பராக விளங்குகிறார். நடப்புச் சாம்பியனான ஸ்பெயின், இம்முறை கோப்பையை தக்க வைக்க கடும் முயற்சி செய்யும். ஸ்பெயினுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக் தந்தவர் என்ற பெருமை கொண்ட கேஸிலெஸ், அதனை இம்முறை எளிதில் விடமாட்டார். கோல் கீப்பரே அணியின் கேப்டனாக இருந்து, உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிறந்த கீப்பருக்கான தங்க கையுறையையும் அவர் பரிசாகப் பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் கேஸிலெஸ், கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தொடர்ச்சியாக 5 முறை சிறந்த கீப்பருக்கான விருதையும் வென்றுள்ளார்.

   

  யொகோ லோரிஸ் (ஃபிரான்ஸ்)

  "மின்னல் போன்று செயல்படுபவர்; துல்லியமாக முடிவெடுப்பவர்', "ஒருவருக்கு ஒருவர் (பெனால்டி வாய்ப்பு) என்ற சூழலில் எதிரணி வீரருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர்', "தனது எல்லையை ஆள்பவர்' என்று பல்வேறு புகழைக் கொண்டவர் யொகோ லோரிஸ். அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதால், 2006ஆம் ஆண்டு பிரான்ஸýக்கு கிடைத்த ஏமாற்றத்தை இம்முறையும் லோரிஸ் தொடர விடமாட்டார்.

   

  ஜூலியோ சீசர் (பிரேசில்)

  2004-ம் ஆண்டு பிரேசில் அணிக்கு அறிமுகமானார். தனது முதல் தொடரான கோபா அமெரிக்க கால்பந்து தொடரில், ஆர்ஜெண்டினாவுக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட் முறையில் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவர். அதன்பின் சீசரின் புகழ் பிரேசில் நாட்டில் மலரத் தொடங்கியது. 2006 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றார். இருப்பினும், உலகக் கோப்பையை வென்று தர முடியவில்லை என்ற தாக்கத்தை, தனது மண்ணிலே நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

  ஜியான்லுகி பஃபன் (இத்தாலி)

  அணியில் புதிய முகங்கள் இல்லை. அதனால், உலகக் கோப்பை பந்தயத்தில் பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி, ஆர்ஜெண்டினா ஆகிய அணிகளுக்குப் பின்தான் எங்கள் அணி உள்ளது என்று மதிப்பிடுகிறார் இத்தாலி அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான பஃபன். தேசிய அணிக்காக அதிக முறை விளையாடியவர் என்ற பெருமை பெற்ற பஃபன், "உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் இறுதிச்சுற்றுக்கு செல்வோம் என்று கூற மாட்டேன். காலிறுதியில் ஸ்பெயினிடம் தோற்றாலும் கெளரவமாக வெளியேறுவோம்' என்று உண்மையை பகிரங்கமாகவே தெரிவிக்கிறார்.

   

  மேனுயல் நியூயெர் (ஜெர்மனி)

  2 வயதாக இருக்கும்போது கால்பந்தை விளையாட ஆரம்பித்தவர் மேனுயல் நியூயெர். தற்போது பலம் வாய்ந்த ஜெர்மனி அணியில் கோல் கீப்பர். காரணம், இவர் படித்த பள்ளி, சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த கால்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளதுதான். தற்போது ஜெர்மன் அணியில் முன்கள வீரரான மேசட் ஓஸில், இவரது வகுப்புத் தோழர். உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் 10இல், 5 ஆட்டங்களில் எதிரணியின் கோல் கனவை முற்றிலும் தகர்த்ததால், பிரதான சுற்றில் இவர் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai