Enable Javscript for better performance
அணிக்கு அரண்: எதிரணிக்கு முரண்- Dinamani

சுடச்சுட

  

  அணிக்கு அரண்: எதிரணிக்கு முரண்

  By தா.இரமேஷ்  |   Published on : 06th June 2014 05:37 AM  |   அ+அ அ-   |    |  

  ramesh

  மரணம், ஒரு மோசமான சதுரங்கம். எத்தனை பேர் சுற்றி நின்று பாதுகாத்தாலும், அது எங்கள் பிரியத்துக்குரிய அரசனை அழைத்துச் சென்றுவிட்டது

  மரணத்தையும், சதுரங்கத்தையும் முடிச்சுப்போட்டு நா.முத்துக்குமார் எழுதிய இந்த வரிகள் ஏனோ கால்பந்து களத்துக்கும் பொருந்திப் போவதாக ஒரு பிரமை. மரணத்தை கோலாகவும், கோல் கீப்பரை ராஜாவாகவும் நினைத்து, பின்கள வீரர்களை (டிஃபண்டர்ஸ்) ஏனைய காய்களாகவும் பாவித்து பார்த்தால் ஓரளவுக்கு இந்த உவமை புலப்படும்.

  "என்ன மீறி தொடுரா பாக்கலாம்...' இந்த ஒற்றை வார்த்தை போதும் பின்கள வீரர்களின் பணி என்னவென்பதைச் சொல்ல. சென்டர் பேக், ரைட் பேக், லெஃப்ட் பேக் என அணி வகுத்து நிற்கும் டிஃபண்டர்ஸ்கள்தான் அணியின் பாதுகாப்பு அரண்; எதிரணி முன்கள வீரர்களின் சிம்ம சொப்பனம்.

  கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களையும், கால்பந்தில் டிஃபண்டர்ஸ்களையும் ஒரு கயிற்றில் கட்டலாம். என்னதான் பந்து வீச்சாளர் 4 விக்கெட் எடுத்தாலும் 2 இமாலய சிக்ஸர்களில் ஒரு பேட்ஸ்மேன் பெயரெடுப்பதைப் போலத்தான், டிஃபண்டர்ஸ்களின் நிலையும். மெஸ்ஸி, ரொனால்டோ, டீகோ கோஸ்டா என பார் மெச்சும் இந்த வீரர்கள் அனைவரும் முன்கள வீரர்கள். கால்பந்தைப் பற்றி அரசல் புரசலாக தெரிந்தவர்களுக்கும் இவர்களது பெயர் பரிச்சயமாகி இருக்கும். ஆனால், உலகின் சிறந்த பின்கள வீரர்கள் யார் என்ற கேள்விக்கு, விடை கிடைக்க சிறிது நிமிடம் ஆகலாம். அரிதனும் அரிதாக செகண்ட் ஹீரோயின், நடிகர்களுக்குப் பின்னால் நடனமாடுபவர்கள் கவனிக்கப்படுவது போல, சில சமயம் டிஃபண்டர்ஸ்கள் மெச்சப்படுகிறார்கள். அதேநேரத்தில் கோல் மழை பொழியும்போது டிஃபன்ஸ் வீக் என்ற விமர்சனமும் பாயாமல் இருப்பதில்லை.

  ஃப்ரி கிக், பெனால்டி கிக் அடிக்கும்போது தலையால் முட்டியோ அல்லது எதிரணி வீரர்கள் தம் கோல் எல்லையை நெருங்கும்போது ஊடுருவியோ அல்லது எதிரணி வீரர்கள் பந்தை பாஸ் செய்ய விடாத அளவுக்கு இடைவெளியைக் குறைத்தோ அல்லது சறுக்கி விழுந்தோ அல்லது கால்களைத் தட்டி விட்டோ எப்படியேனும் பந்தை கம்பத்துக்குள் சென்று விடாமல் தடுத்தாக வேண்டும். இல்லையேல், "அவன் கடத்தி வந்துட்டே இருக்கான். இவன் பாத்துட்டே இருக்கான்' என ரசிகர்களின் ஏளனப் பேச்சுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

  அது மட்டுமல்ல, பந்தைப் பிடுங்கிய மாத்திரத்தில் சக வீரர்களுக்கு நொடியில் பாஸ் செய்ய வேண்டும் என்பது உள்பட டிஃபண்டர்ஸ்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம், ஏராளம்.

  இதோ உலகக் கோப்பை நெருங்கி விட்டது. இந்த சீசனில் கிளப் அணிகளின் அரணாக நின்றவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்காக எப்படி செயல்படப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. லா லிகா, சாம்பியன்ஸ் லீக், இங்கிலீஷ் பிரிமியர் லீக் தொடர்களில் கிளப் அணிகளுக்காக ஜொலித்த பின்கள வீரர்கள் பற்றிய ஒரு பார்வை.

   

  மார்சிலோ

  நாடு: பிரேசில்

  இடம்: லெஃப்ட் பேக்

  கிளப் : ரியல் மாட்ரிட்

  ரியல் மாட்ரிட் அணியின் நம்பிக்கை நாயகன். செம ஷார்ப். இடது கார்னரில் இவரைத் தாண்டி எதுவும் நடக்காது. சில சமயங்களில் லெஃப்ட் விங்கராகவும் செயல்படுவார். பந்தை லாவகமாக கடத்துவது, பாஸ் செய்வது இவரது ஸ்பெஷல். இவரை பிரேசிலின் முன்னாள் வீரர் ராபெர்டோ கார்லஸýடன் ஒப்பிடுவர். பாலோ மால்டின், மாரடானோ ஆகியோரைக் கவர்ந்தவர்.

   

  ஜெரார்டு பிக்யூ

  நாடு: ஸ்பெயின்

  இடம்: சென்டர் பேக் கிளப்: பார்சிலோனா

  பார்சிலோனா அணியின் பாதுகாப்பு அரண். ஸ்பெயின் 2010-இல் உலகக் கோப்பை, 2012-இல் யூரோ கோப்பை வாங்கியபோது அணியில் இடம்பெற்றிருந்தவர். தலையால் முட்டி கோலைத் தடுப்பது இவருக்குப் பிடித்தமானது. பாடகி ஷகீராவின் காதலன் என்பது கொசுறு தகவல்.

   

  லூக் ஷா

  நாடு: இங்கிலாந்து

  இடம்: ரைட் பேக்

  கிளப்: செüதம்ப்டன் கிளப்

  2013 சீசனில் சிறந்த பின்கள வீரர் என பெயரெடுத்தவர். 18 வயதாகும் இந்த பாலகனை செüதாம்ப்டன் கிளப் 2018 வரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதிலேயே தெரியும் அவரது திறமை. எதிர்காலத்தில் சிறந்த வீரராக உருவாகும் அனைத்து தகுதியும் உண்டு. மான்செஸ்டர் யுனைடெட் அணி இவரை வாங்க முயற்சிப்பதாகவும் ஒரு தகவல் பரவுகிறது.

   

  செர்ஜியோ ரமோஸ்

  நாடு: ஸ்பெயின்

  இடம்: சென்டர் பேக்

  கிளப் : ரியல் மாட்ரிட்

  அனுபவமும், கெட்டிக்காரத்தனமும் நிறைந்த டிஃபண்டர். சிறந்த டிஃபண்டர் யார் என்ற வாதத்தில் இவர் பெயரைத் தவிர்த்து விட முடியாது. நிகழ்கால கால்பந்தில் சிறந்த பின்கள வீரர் யார் என யூ-டியுப்பில் தேடினால் கோல்களைத் தடுக்க இவர் மேற்கொண்ட முயற்சிகள் அடங்கிய வீடியோக்கள் அணி வகுத்து நிற்கின்றன. 18 வயதில் ஸ்பெயின் அணியில் இடம் பிடித்தவர். 3 உலகக் கோப்பை, இரண்டு முறை ஐரோப்பிய கோப்பையில் பங்கேற்றவர். 100 ஆட்டங்களில் ஆடிய இளம் வயது வீரர் என்று பெயரெடுத்தவர்.

   

  தியாகோ சில்வா

  நாடு: பிரேசில்

  இடம்: சென்டர் பேக்

  கிளப்: பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன்

  சிறந்த டிஃபண்டர்ஸ் யார் என சமூக இணயதளத்தில் கேள்வி எழுப்பினால் ரமோஸýக்கும், தியாகோ சில்வாவுக்கும் இடையேதான் கடும் போட்டி. ரமோஸ் தலையால் முட்டி கோலைத் தடுப்பவர் அல்ல. ஆனால், சில்வா அதில் வல்லவர் என தியாகோவின் சாகசங்களை அடுக்குகின்றனர். அதோடு, "சில்வா எப்படியெல்லாம் கோல்களைத் தடுக்க மெனக்கிடுகிறார் என்ற பதிவுகள் அடங்கிய வீடியோவுக்கான இணையதள முகவரியையும் பார்க்க வற்புறுத்துகின்றனர்.

   

  வின்சென்ட் கோம்பெனி

  நாடு: பெல்ஜியம்

  இடம்: சென்டர் பேக்

  கிளப்: மான்செஸ்டர் சிட்டி

  மான்செஸ்டர் அணியின் கேப்டன்.

  டிஃபன்டராக இருந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவது இவரது ஸ்டைல்.

  இவரது தலைமையில்தான் மான்செஸ்டர் சிட்டி அணி 2011-2012 சீசனில் 44 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக பட்டம் வென்றது.

   

  டீகோ கோடின்

  நாடு: உருகுவே

  இடம்: சென்டர் பேக்

  கிளப்: அட்லெடிகோ மாட்ரிட்

  அட்லெடிகோ மாட்ரிட் அணியின்

  டிஃபன்ஸ் வலுவாக இருப்பதற்கு இவரும் ஒரு காரணம்.

  லா லிகா தொடரில் அட்லெடிகோ மாட்ரிட் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியவர்.

  சில சமயம் முன்களத்திலும் புகுந்து விளையாடுவார்.

   

  பிலிப் லாம்

  நாடு:ஜெர்மனி

  இடம்: ரைட் பேக்

  கிளப்: பேயர்ன் முனிச்

  ஜெர்மனி, பேயர்ன் முனிச் அணியின் கேப்டன். உலகின் சிறந்த ரைட் பேக். இவர் சிறந்த டிஃபண்டர் மட்டுமல்லாது வேகமாக பந்தைக் கடத்திச் சென்று, தானே கோல் அடிப்பதிலும் வல்லவர். சில நேரங்களில் முன்கள வீரர்களுக்கு துரிதமாக பந்தை பாஸ் செய்வதிலும் கைதேர்ந்தவர். அனைத்து பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் இவர் இந்தமுறை பின்களத்தில் கோலோச்சுவார் எனத் தெரிகிறது.

   

  இவர்கள் தவிர்த்து ஜெர்மனியின் மேட்ஸ் ஹம்மல்ஸ் (டார்ட்முண்ட்), இத்தாலியின் ஜார்ஜியோ ஜெலினி, ஃபிரான்ûஸச் சேர்ந்த லாரன்ஸ் கொசைன்லி (ஆர்சனல்),

  ஃபிரான்சின் ரஃபெல் வரானே, யூனஸ் காபெüல், ஜெர்மனியின் ஜொனதன் டா, போர்ச்சுகலின் ஃபேபியோ கொனட்ரா ஆகியோரும் சிறந்த டிஃபண்டர்களாக அறியப்படுகின்றனர்.

  kattana sevai