சுடச்சுட

  
  cup

  கால்பந்து என்றால் களத்தில் வீரர்கள் மோதிக்கொள்வதும், முறைத்துக் கொள்வதும் சகஜம். ஆனால், உலகக் கோப்பை என்று வந்து விட்டால் பத்திரிகையாளரில் இருந்து வர்ணனையாளர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிக்கத் தொடங்கி விடுவர். முந்தைய உலகக் கோப்பையில் நடைபெற்ற சில சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ.

   

  மார்கரெட் தாட்சரே... நான் பேசுவது கேட்கிறதா?

  1982 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நார்வே அணி இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தி விட்டது. அப்போது நார்வே நாட்டைச் சேர்ந்த வர்ணனையாளர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். இதோ அவரது பேச்சு:

  நாங்கள்தான் இந்த உலகில் சிறந்தவர்கள், கால்பந்தின் பிறப்பிடமான இங்கிலாந்தை நாங்கள் வீழ்த்தி விட்டோம். என்னால் இதை நம்பவே முடியவில்லை. லார்ட் நெல்சன், லார்ட் பீவர்புரூக், வின்ஸ்டன் சர்ச்சில், அந்தோனி ஈடன், கிளமெண்ட் அட்லீ, ஹென்றி கூப்பர், லேடி டயானா இவர்கள் எல்லோரையும் நாங்கள் தோற்கடித்து விட்டோம். ஆம், தோற்கடித்து விட்டோம். மார்கரெட் தாட்சரே நான் பேசுவது கேட்கிறதா?

  தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் மார்கரெட் தாட்சரே உங்களுக்கு ஒரு சேதி. நாங்கள் உலகக் கோப்பையில் இருந்து இங்கிலாந்தை வெளியேற்றி விட்டோம். உங்கள் வார்த்தையில் சொல்வதானால் மேடிசன் சதுக்க கார்டன் மைதானத்தில் உங்கள் வீரர்கள் கேவலமாக தோற்று விட்டனர். ஹா ஹா ஹா ஹா.....

   

  நாக்கில் வெடித்த கலவரம்: "ஆர்ஜெண்டினா விலங்குகள்'

  1966 உலகக் கோப்பை காலிறுதிச் சுற்று. இங்கிலாந்துக்கும் ஆர்ஜெண்டினாவுக்கும் மோதல். ஆர்ஜெண்டினா கேப்டன் ஆண்டோனியா ரேட்டின், எதிரணி வீரர்களைப் பார்த்து இனரீதியாக திட்டி விட்டார். நடுவர் அவரை சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றுகிறார். இதற்கு ஆர்ஜெண்டினா வீரர்கள் கடும் எதிர்ப்பு. ஒரு வழியாக 10 பேருடன் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. தலைவன் இல்லாமல் ஆடியதால் முடிவில் 0-1 என ஆர்ஜெண்டினா தோல்வி. ஆட்டம் முடிந்த பின் இங்கிலாந்து பயிற்சியாளர் சர் ஆல்ஃப் ராம்சே பதிலுக்கு வார்த்தைகளில் தாளித்தார்.

  "இன்னமும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கிறோம். ஆனால், எதிரணி கால்பந்து ஆட விரும்பும் அணியாக இருக்க வேண்டும். விலங்கினங்கள் போல நடக்கும் அணி இருக்கும் வரை எங்கள் முயற்சி சாத்தியப்படாது' என்றார். உண்மையில் அந்த ஆட்டத்தில் ஆர்ஜெண்டினாவை விட இங்கிலாந்து வீரர்கள்தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.

   

  இங்கிலாந்து உலகை ஆளும் - தி சன்

   

  இத்தாலியில் 1990-இல் நடந்த உலகக் கோப்பையில், அரையிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கு ஜெர்மனி. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் காஸா என்றழைக்கப்படும் கேஸ்காய்க்னிக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. ஏற்கெனவே முந்தைய ஆட்டத்திலும் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தால் இறுதிச் சுற்றில் காஸா ஆட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். ஆனால், அதற்கு இங்கிலாந்து வீரர்கள் வாய்ப்பளிக்காமல் அரையிறுதியிலேயே வெளியேறி விட்டனர். அதோடு பெனால்டி ஷூட் அவுட் என்று வந்தாலே இங்கிலாந்து தோல்வி என்று துணிந்து எழுதலாம் என்ற அவப்பெயரும் இருந்தது.

  ஆனால், பிரிட்டனில் இருந்து வெளியாகும் "தி சன்' பத்திரிகை மட்டும் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் இங்கிலாந்து அணியின் எதிர்காலத்தை பாராட்டி எழுதி இருந்தது.

  "இளம் வீரர்களே, நாம் உலகத்தை ஆளும் அணியை உருவாக்க வேண்டும். இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. அடுத்த உலகக் கோப்பையில் நாம் சாம்பியன் பட்டம் வெல்வோம். அப்போது நீங்கள் "தி சன்' பத்திரிகை அன்றே இதைச்சொன்னது என நினைத்துப் பார்ப்பீர்கள்' என செய்தி வெளியிட்டது.

  ஆனால், அமெரிக்காவில் 1994-இல் நடந்த உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து தகுதிபெறவே இல்லை.

   

   

  பிரேசிலில் ஜூன் 12-ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கவுள்ளது. போட்டி தொடங்க இன்னும் நான்கு நாள்களே இருப்பதால் உலகெங்கும் உலகக் கோப்பை குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த உலகக் கோப்பை, முந்தைய உலகக் கோப்பையில் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இதோ.

  ஒன்று மட்டும் உறுதி. நான் ஆடாததால் இந்த உலகக் கோப்பையைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. உலகக் கோப்பைக்காக காத்திருக்கப் போவதும் இல்லை.

  இம்ராஹிமோவிச், ஸ்வீடன் வீரர். (ஸ்வீடன் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத விரக்தியில்)

  நான் பல திறமையான வீரர்களுக்கு எதிராக ஆடியுள்ளேன். ஆனால், அவர்கள் எல்லோரையும் விட பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ சிறந்தவர். அவரை விட சிறந்த வீரர் யாருமில்லை.

   

  இப்ராஹிமோவிச்.

   

  நாங்கள் தோற்று விட்டோம், ஏனெனில் நாங்கள் வெற்றிபெறவில்லை.

  1998 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ஃபிரான்ஸிடம் தோல்வியடைந்த பின் பிரேசிலின்

  நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறியது.

  நாங்கள் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், நாங்கள் நினைத்ததை விட அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

  1999 உலகக் கோப்பையில் கேமரூன் அணியிடம் தோற்றபின் இங்கிலாந்தின் பாபி ராம்சன் சொன்ன விளக்கம் இது.

  தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக சிறிய அணிகளுக்கு எதிராக எல்லாம் ஆடுவது என்பது அர்த்தமற்றது.

   

  டிரான்கிலோ பெர்னட்டா, ஸ்விட்சர்லாந்து நடுகள வீரர்.

   

   

  1950 உலகக் கோப்பைதான் எனக்கு நினைவு தெரிந்த பின் நடந்த முதல் உலகக் கோப்பை. எனக்கு அப்போது 9 அல்லது 10 வயது இருக்கலாம். என் தந்தை ஒரு கால்பந்து வீரர்.

  அந்த உலகக் கோப்பையில் உருகுவேயிடம் பிரேசில் தோல்வியடைந்து விட்டது. அப்போது என் தந்தை அழுது கொண்டு இருந்தார்.

  திறமையான வீரர்களை மதிப்பிடுவதற்கு உலகக் கோப்பைதான் சிறந்த வழி. இது சிறந்த வீரர்களுக்கான தேர்வு.

  பீலே, கால்பந்து ஜாம்பவான் நான் 23 காட்டுப்பூனைகளை களத்தில் இறக்குவதற்காக தயாராக வைத்திருக்கிறேன்.

  2010 உலகக் கோப்பைக்கு தயாராகும் முன் ஆர்ஜெண்டினா பயிற்சியாளராக இருந்த மாரடோனா கூறியது.

  மெஸ்ஸி, உலகக் கோப்பையில் கோல்கள் அடித்துதான் தன்னை சிறந்த வீரர் என்று நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் ஏற்கெனவே தன்னை நிரூபித்து விட்டார்.

   

  மாரடோனா, கால்பந்து ஜாம்பவான்

   

  பிரேசில் அணி ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன்தான் செல்கிறது. இந்தமுறை சொந்த மண்ணில் நடப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகக் கோப்பை எங்கள் நாட்டுக்கானது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.

   

  ரொனால்டினோ, முன்னாள் பிரேசில் வீரர்.

   

   

  2006 மற்றும் 2010 உலகக் கோப்பை போட்டியில் பாடுவதற்கு என்னை அழைத்தனர். தற்போது மீண்டும் அழைப்பு வந்துள்ளது. இதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

   

  ஷகிரா, பாப் பாடகி.

   

  உலகக் கோப்பை கால்பந்து போட்டியை விட சிறந்தது வேறு எதுவுமில்லை. இந்தமுறை ஆர்ஜெண்டினாவின் முன்களம் வலுவாக உள்ளது. எனவே அந்த அணிதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

   

  மைக்கேல் ஓவன், இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர்.

   

  ஒரு கால்பந்து ஆட்டக்காரன் உலகக் கோப்பையில் தன்னை யார் என்பதை நிரூபித்தாக வேண்டும். ஆனால், உலகக் கோப்பையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

   

  மெஸ்ஸி, ஆர்ஜெண்டினா வீரர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai