சுடச்சுட

  
  joco

  இந்த சீசனின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடாலும், 2-வது இடத்தில் உள்ள ஜோகோவிச்சும் முன்னேறினார்.

  களிமண் தரையின் நாயகனும், எட்டு முறை பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றவருமான நடால், 2-வது முறையாக முறையாக இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச்சை தோற்கடித்து 9-வது முறையாக பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு கனிந்துள்ளது.

  பாரிஸில் களிமண் தரையில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், லத்வியா வீரர் எர்னஸ்ட் குல்பிûஸ எதிர்கொண்டார்.

  தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள குல்பிஸ் முந்தைய சுற்றுகளில் கிராண்ட்ஸாம் நாயகன் ரோஜர் ஃபெடரர் மற்றும் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி இருந்ததால் அவர் மீது எதிர்பார்ப்பு நிலவியது.

  ஆனால், 13-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் கவனமாக ஆடிய ஜோகோவிச் முதலிரண்டு செட்களை 6-3, 6-3 என கைப்பற்றினார். குல்பிûஸ அவர் நேர் செட்டில் தோற்கடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3-வது செட்டில் எழுச்சி பெற்ற குல்பிஸ் 6-3 என அந்த செட்டை தனதாக்கினார். 4-வது செட் ஜோகோவிச் வசமானது. முடிவில் 6-3, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

  வெற்றிக்குப் பின் ஜோகோவிச் கூறுகையில் "முதல் இரண்டு செட்களில் கவனத்துடன் சிறப்பாக ஆடினேன். பின்னர் நிலவிய வெப்பநிலை இருவருக்கும் கடினமானதாக அமைந்தது' என்றார்.

  "நாயகன்' நடால்: மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த நடாலும், பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரேவும் மோதினர். பிரெஞ்சு ஓபனில் இதுவரை ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ள நடாலை, முர்ரே தோற்கடிப்பது சிரமம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், 77 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டனைச் சேர்ந்த வீரர் ஒருவர் பிரெஞ்சு ஓபனை வெல்ல கிடைத்திருக்கும் வாய்ப்பை முர்ரே சரியாக பயன்படுத்திக் கொள்வார் என பிரிட்டன் ரசிகர்கள் நம்பினர்.

  இதற்கு வாய்ப்பு அளிக்காமல் தனது வெற்றி நடையைத் தொடர்ந்தார் நடால்.

  உடல் மொழியில் எவ்வித பதட்டத்தையும் வெளிப்படுத்தாமல் ஆட்டத்தைத் தொடர்ந்த நடால் முதலிரண்டு செட்களை வசப்படுத்தினார். குறிப்பாக 2-வது செட்டில் முர்ரேவின் சர்வ்களை பிரேக் செய்வதில் நடால் பெரிதாக சிரமப்படவில்லை. இந்த செட்டில் முர்ரே சோர்வாக இருந்ததை உணர்ந்த நடால், அசத்தலான சர்வ், ஷார்ப்பான ஷாட்கள் மூலம் முர்ரேவைத் திணறடித்தார். மூன்றாவது செட்டை நடால் எளிதில் கைப்பற்றினார்.

  100 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

  வெற்றிக்குப் பின் நடால் கூறுகையில் ""இந்த ஆண்டில் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன். பத்து ஆண்டுகளுக்கு முன் இங்கு விளையாட வந்தேன். 9-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளேன். என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. ஜோகோவிச் அசாதாரணமான வீரர். எப்போதும் அவர் எனக்கு கடும் சவால் அளிப்பார். சமீபத்திய ஆட்டங்களில் அவர் என்னை தோற்கடித்துள்ளார். எனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்'' என்றார்.

  தொடர்ந்து ஐந்தாவது முறை: ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் நடால் வெற்றிபெறும் பட்சத்தில் ஜோன் போர்க்கை பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து ஐந்து முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெறுவார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai