சுடச்சுட

  

  இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்

  By dn  |   Published on : 09th June 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vengsarkar

  இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் கூறினார்.

  இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:

  நீண்ட நாள்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா விளையாடவுள்ளது. ஜூலை முதல் இந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  மொத்தம் நடைபெறவுள்ள 5 டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக 2 பயிற்சி ஆட்டங்கள் மட்டுமே நடைபெறவுள்ளன. இந்த பயிற்சி ஆட்டங்கள்தான் இந்திய பந்துவீச்சாளர்கள் எப்படி அங்கு பரிமளிக்கப் போகிறார்கள் என்பதை அறிவிக்கும் ஆட்டங்களாக இருக்கும்.

  ஒரு டெஸ்ட் போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்களுக்கு கடுமையான விஷயமாக இருக்கும்.

  இப்போதுள்ள அணியில் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உள்ள ஒரே வீரர் இஷாந்த் சர்மா மட்டுமே. மேலும் அணியில் உள்ள முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், வருண் ஆரோன் ஆகியோர் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவங்களை மட்டுமே பெற்றவர்கள். புதுமுக வீரர்களான ஈஸ்வர் பாண்டே, பங்கஜ் சிங் ஆகியோர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதே இல்லை. இவர்களைக் கொண்டு இங்கிலாந்து வீரர்களைச் சமாளிப்பது என்பது கடும் சவாலான விஷயமாக கேப்டன் தோனிக்கு இருக்கும்.

  ஒரே வீரரை டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்கச் செய்யும் திறன்மிக்க பெளலர்கள் நமக்குத் தேவை. ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனுள்ள 2 பந்துவீச்சாளர்கள் நமக்கு வேண்டும். ஆனால் அப்படி யாரையும் நான் அணியில் காண முடியவில்லை.

  முதல் 2 டெஸ்ட் ஆட்டங்கள் இந்திய அணிக்கு மிகவும் சோதனையானவை. இங்கிலாந்து ஆடுகளங்களின் தன்மை, அங்குள்ள சீதோஷண நிலை ஆகியவை தொடர்பாக அறிந்துகொண்டு அதற்கேற்ப நமது வீரர்கள் தயாராக வேண்டும்.

  முதலில் நடைபெறவுள்ள 2 பயிற்சி ஆட்டங்களை இந்தியா நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். என்னைக் கேட்டால் இந்த 2 பயிற்சி ஆட்டங்கள் போதாதென்று நான் சொல்வேன். முதல் டெஸ்டுக்கு முன்னதாக குறைந்தபட்சம் 4 அல்லது 5 பயிற்சி ஆட்டங்களிலாவது இந்திய வீரர்கள் விளையாடவேண்டும்.

  இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை. மேலும் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். இந்த நிலைமையை இந்திய வீரர்கள் நன்கு உணர்ந்து அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

  ஆஸ்திரேலியாவில் பெளன்ஸ் ஆகும் பந்துகளை எதிர்கொள்ளத் தயாரானது போல, இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்துகளை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai