சுடச்சுட

  
  brasil_cup

  ஸ்பெயினுக்கே கோப்பை: டாரஸ்

  மாட்ரிட்: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின்தான் பட்டம் வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டாரஸ் கூறினார்.

  உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் பிரேசிலில் ஜூன் 12-ஆம் தேதி தொடங்கவுள்ளன. 2010 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியின் 2 ஆட்டங்களிலும் கோலடித்து சாதனை புரிந்தவர் டாரஸ்.

  2008-ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கெதிராக கோலடித்து ஸ்பெயினை கோப்பை வெல்லச் செய்தவரும் இவரே.

  இந்த உலகக் கோப்பை போட்டி குறித்து டாரஸ் கூறியதாவது: இந்த உலகக் கோப்பையிலும் ஸ்பெயின் அணிதான் பட்டம் வெல்லும். அணிக்கு கோப்பையை வென்று தரக்கூடிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு காயங்கள் காரணமாக சில காலம் அணியில் இடம்பெற முடியாமல் போய்விட்டது. இது எனக்கு சோதனையான காலம். மீண்டும் அணியில் இடம்பெற முயற்சித்து வருகிறேன். போட்டியில் விளையாட முழுத் தகுதியுடன் இருக்கிறேன் என்றார் அவர்.

   

  நெதர்லாந்தின் ராபின் வான் பெர்சி காயம்

  ரியோ டி ஜெனிரோ: நெதர்லாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ராபின் வான் பெர்சி காயமடைந்துள்ளார்.

  அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருவதால் அவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது சந்தேகம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

  நெதர்லாந்து அணியின் முன்கள ஆட்டக்காரர் பெர்சி. 3 நாள்களுக்கு முன்னதாக பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டன. அவரைத் தவிர மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் அவர் இந்த உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற வேல்ஸ் அணிக்கெதிரான நட்பு ஆட்டத்திலும் அவர் பாதியில் விலகிக் கொண்டார்.

  ஆனால் இந்தத் தகவலை நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் மறுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: வான் பெசி நன்றாகவே இருக்கிறார். சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி குறுகிய நேரம் கொண்டது. அதனால்தான் அவர் பங்கேற்கவில்லை. அவரது உடல் தகுதி குறித்து நாங்கள் விரைவில் மதிப்பிடுவோம் என்றார் அவர். ஜூன் 13-ஆம் தேதி சால்வடாரில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் ஸ்பெயினுடன் மோதவுள்ளது நெதர்லாந்து.

   

  தில்லி ஹோட்டல்களில் சிறப்பு ஏற்பாடுகள்

  புதுதில்லி: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்க பெரிய திரை டி.வி.களை தில்லியிலுள்ள ஹோட்டல்கள், பார்கள் ஏற்பாடு செய்துள்ளன.

  வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும், போட்டிகளை அவர்கள் காண்பதற்கு வசதியாகவும் இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தில்லியுள்ள பாசி ரெஸ்டாரண்ட் உரிமையாளர் வீரேந்தர் சிங் வோஹ்ரா தெரிவித்தார். இரவு 9.30, 12.30, அதிகாலை 1.30, 3.30, காலை 6.30-க்கு நடைபெறும் ஆட்டங்களை காண பெரிய திரை கொண்ட டி.வி.களை ஹோட்டல்களில் வைத்துள்ளோம் என்றார் அவர்.

  இதேபோல குல்மொஹர் ஸ்போர்ட்ஸ் கிளப், ஜானி ராக்கெட் ரெஸ்டாரண்ட், சிட்டி ஷாப்பிங் மால்கள் என பலஇடங்களில் கால்பந்து ஆட்டங்களைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  இதேபோல ஹோட்டல்களுக்கு வரும் ரசிகர்களுக்காக விதவிதமான உணவு வகைகள், கால்பந்து வீரர்களின் பெயர்களைக் கொண்ட உணவுகளும் வழங்கப்பட உள்ளன.

   

  ஃபிஃபாவில் லஞ்சம்: மரடோனா வேதனை

  அபுதாபி: உலகக் கோப்பை கால்பந்து சம்மேளனத்துக்குள்ளேயே (ஃபிஃபா) லஞ்சம், ஊழல்கள் தலைவிரித்தாடுவதாக முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டியூகோ மரடோனா தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்காக மிகப் பெரிய ஊழல் நடைபெறவுள்ளது. இது ஃபிஃபாவுக்குள்ளேயே நடந்ததுதான் வேதனை. இந்த ஊழலில் கிடைத்த பணத்தை யார் பெற்றார்கள்? பணம் எங்கு போனது என்றே தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai