சுடச்சுட

  
  brasil

  காயத்திலிருந்து மீண்டார் ரொனால்டோ

  ஃபிளோரம் பார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்திலுளள ஃபிளோரம் பார்க்கில் நடைபெறவுள்ள நட்புரீதியான கால்பந்து ஆட்டத்தில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவுள்ளார்.

  காயம் காரணமாக போர்ச்சுகல் பங்கேற்ற கடந்த 2 நட்புரீதியான ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர் ஃபிளோரம் பார்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஐயர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

  ஆனால் போர்சுக்கல் அணி நிர்வாகத்தினர் இதை உறுதி செய்யவில்லை. ஆனால் ரொனால்டோ விளையாடுவார் என போர்ச்சுகல் அணியின் முன்கள வீரர் வியரினா கருத்து தெரிவித்தார்.

  பயிற்சியில் பங்கேற்க முழு தகுதியுடன் ரொனால்டோ இருக்கும்போது, போட்டியில் விளையாடவும் அவர் தகுதி பெற்றுவிடுவார் என்றார் அவர்.

  உலககக் கோப்பை போட்டி தொடங்க 2 நாள்களே உள்ள நிலையில் ரொனால்டோ அணிக்குத் திரும்பவுள்ளது போர்ச்சுகல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குரூப் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்த்து விளையாடவுள்ளது.

   

  தொடக்க விழாவை 100 கோடி பேர் பார்த்து ரசிப்பர்

  சாவ் பாலோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் உலகெங்கிலுள்ள ரசிகர்கள் 100 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பர் எனத் தெரியவந்துள்ளது.

  உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் ஜூன் 12-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. சாவ் பாலோ மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் உள்ளூர் அணியான பிரேசிலுடன், குரோஷியா மோதவுள்ளது.

  இதற்காக சாவ் பாலோ மைதானம் முழு வீச்சில் தயாராகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

  சாவ் பாலோ மைதானத்தில் 65 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து தொடக்க விழா, போட்டியைக் கண்டுகளிக்கலாம்.தொடக்க விழாவை 100 கோடி பேர் தொலைக்காட்சி வழியாக கண்டு ரசிப்பர் என போட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

   

   

  இறுதிப் போட்டிக்கு பிரேசில்-உருகுவே முன்னேறவேண்டும்: பீலே

   

  சாவ் பாலோ: உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு பிரேசில், உருகுவே அணிகள் முன்னேறவேண்டும் என்று கால்பந்து ஜாம்பவானும், பிரேசில் அணியின் முன்னாள் வீரருமான பீலே தெரிவித்தார்.

  கருப்பு வைரம் என்று அழைக்கப்படும் பீலே, பிரேசில் அணிக்கு மூன்று முறை உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர்.

  சாவ் பாலோவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 1950-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணியை உருகுவே வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த முறையும் உருகுவே, பிரேசில் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவேண்டும். ஆனால் 1950-ஆம் ஆண்டு போட்டிக்கு பழிவாங்கும் விதமாக இந்த முறை உருகுவேயை பிரேசில் வீழ்த்தி பழிவாங்கவேண்டும். இதுதான் எனது ஆசை. 1958-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நான் முதன்முதலாக விளையாடினேன். அப்போது எனக்கு 17 வயது. அப்போது எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஒரு பத்திரிகையாளர் கூட எங்களை வந்து பேட்டி காணவில்லை. பிரேசில் கோப்பையை வெல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் அதைச் செய்தோம். இந்த உலகக் கோப்பையை எங்களால் மறக்க முடியாது என்றார் அவர்.

   

  "உலகக் கோப்பை கால்பந்து இந்தியாவுக்கு கனவுதான்'

  புதுதில்லி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்பது கனவாகவே முடியும் போலிருக்கிறது என்று இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி கூறினார்.

  தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்காலத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதை நாம் நினைத்துப் பார்க்கவே முடியாது போலிருக்கிறது.

  இது கனவாகத் தான் முடியும் என்று எண்ணுகிறேன். கால்பந்து தரவரிசையில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai