சுடச்சுட

  
  nadal

  விம்பிள்டனில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன் என்று ஸ்பெயின் வீரரும், பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான ரபேல் நடால் கூறினார்.

  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நடால் 3-6, 7-5, 6-2, 6-4 என்ற கணக்கில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

  வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரெஞ்சு ஓபனில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பிரெஞ்சு ஓபனைத் தொடர்ந்து விம்பிள்டனில் பங்கேற்கவுள்ளேன். ஆனால் விம்பிள்டனிலும் பட்டம் வெல்வேனா என்பது தெரியாது. விம்பிள்டனில் முதன்முதலாக 2008-ல்தான் பட்டம் வென்றேன். அதன்பிறகு 2010-ல் விம்பிள்டனில் வாகை சூடினேன். ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டனில் பட்டம் வெல்ல முடியாமல் போனது. இந்த முறை பட்டம் வெல்வதற்காக பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளேன். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

  முதல் கட்டமாக ஜெர்மனியிலுள்ள ஹாலே நகருக்குச் செல்கிறேன். அங்கு நடைபெறும் புல்தரை டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறேன். இது விம்பிள்டன் வெற்றிக்கு உதவும். நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். டென்னிஸ் வாழ்க்கைக்கு அது மிகவும் முக்கியம். மூட்டு வலி பிரச்னை எனக்கு விம்பிள்டனில் இருக்காது என்றே நினைக்கிறேன்.

  ஆனாலும் களிமண் தரை டென்னிஸ் போட்டிகளை விட புல்தரை டென்னிஸ் போட்டிகள் எனக்கு சற்று கடினமானதுதான். மூட்டு வலி பிரச்னை வந்தபிறகுதான் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. கடந்த ஆண்டும் விம்பிள்டனில் முடிந்தவரை போராடினேன். ஆனால் முடியாமல் போய்விட்டது. இந்த ஆண்டு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

  இப்போது பீட் சாம்ப்ராஸின் சாதனையை (14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்) சமன் செய்துள்ளேன். இந்த ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாமின் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்து விட்டேன். அந்த ஆட்டத்தில் ஸ்டான் வாவ்ரிங்கா அருமையாக விளையாடினார். ஆனால் வெற்றிக்குப் போதுமான வரையில் நான் விளையாடவில்லை. அதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும்.

  ஆனால் பிரெஞ்சு ஓபன் வெற்றி மூலம் நான் மீண்டுவிட்டேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai