சுடச்சுட

  
  new

  ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்ததாக பெரும்பான்மையானோரின் கவனத்தை ஈர்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலின் சா பாலோ நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது. 32 அணிகள், 64 ஆட்டங்கள், 4 வாரங்கள், 12 மைதானங்களில் நடைபெறும் இப்போட்டி களை கட்டியுள்ளது.

  பொதுவாக உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தங்கள் அணிக்கு ஆதரவு தெரிவித்து பிரேசிலில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அந்நாட்டு தேசியக் கொடி பறக்க விடப்பட்டிருக்கும். 1950ஆம் ஆண்டுக்குப் பின் அரை நூற்றாண்டு கழித்து தங்கள் சொந்த மண்ணில் உலகக் கோப்பை நடைபெறுகிறது. ஆனால், இந்த முறை பிரேசிலியர்கள் தங்கள் வீடுகளில் கொடிகளைக் கட்டவில்லை. அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் ஜன்னல் கதவுகளை உடைத்து விடக்கூடும் என்ற அச்சம்தான் அதற்கான காரணம்.

  தாமதம், அதிக செலவீனம், ஊழல், கட்டுமானப் பணிகளின்போது ஏற்பட்ட உயிரிழப்பு, போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பொருளாதார தேக்கம், உள்கட்டமைப்பு திட்ட தாமதம், தேர்தலுக்கு முந்தைய இக்கட்டு என பிரேசிலில் நடைபெறும் இந்த உலகக் கோப்பைக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு விதங்களில் நெருக்கடி ஏற்பட்டது.

  போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்புவரை மைதானம் முழுமையாகாத சூழல் நிலவியது. முந்தைய நாள் வரை சப்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திட்டமிட்டபடி போட்டி நன்றாக நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

  "போராட்டங்களால் உலகக் கோப்பைக்கு பின்னடைவுதான். இருந்தாலும் போட்டி தொடங்கி விட்டால் பிரேசில் நாட்டினர் போராட்டத்தைக் கைவிட்டு தங்கள் அணிக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கி விடுவர்' என கால்பந்து ஜாம்பவான் பீலே தெரிவித்திருந்தார்.அதுபோலவே, பிரேசில் மட்டுமல்லாது உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் மற்றும் கால்பந்து வெறியர்கள் பிரேசிலை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் போட்டி நடைபெறும் 12 நகரங்களும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

  கலவரம், போராட்டம் மிரட்டல் காரணமாக 12 நகரங்களிலும் 1, 50,000 போலீஸார் மற்றும் ராணுவ வீரர்களும், 20 ஆயிரம் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  ஒரு சில நகரங்களில் வெளிநாட்டினர் தங்குமளவு ஹோட்டல்கள் இல்லை. எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பிரேசிலின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோவும் தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். பீலே சொன்னதைப் போலவே பிரச்னைகளை ஏறக்கட்டி விட்டு "பியூட்டிஃபுல் கேம்' என்றழைக்கப்படும் கால்பந்தை ஆராதிக்கத் தொடங்கி விட்டனர் பிரேசிலியர்கள். அவர்கள் மட்டுமா உலகெங்கும் உள்ள கால்பந்து பிரியர்களும்தான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai