சுடச்சுட

  

  "நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தோமய்யா' என மினுமினுப்பான உடையில் முகத்தில் ரோஸ் பவுடரும் லிப்ஸ்டிக்கும் அப்பிக் கொண்டு பபூன் வள்ளி திருமணம் நாடகத்தை தொடக்கி வைப்பது போல ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கி விட்டது உலகக் கோப்பை கால்பந்து. பியானோவின் முதல் கட்டையை சட்டென அழுத்தியதும் அதன் ஓசை அடங்க சிறிது நேரம் பிடிப்பதைப் போல பிரேசிலும் - குரோஷியாவும் ஆடும் முதல் ஆட்டத்தில் தெறிக்கும் ஆரவாரம் அடங்க ஒரு மாத காலமாகும். இது அதிகப்படியான மிகைப்படுத்தலாகக் கூட இருக்கலாம் தவறில்லை.

  2006 உலகக் கோப்பை ஃபைனல். இறுதிச் சுற்றில் இத்தாலி - ஃபிரான்ஸ் மோதல். இதைக் காண பெர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியனில் 69 ஆயிரம் பேர் கூடியுள்ளனர். அரங்கமே ஆரவாரத்துடன் முடிவுக்காக காத்திருக்கிறது. அதில் ஒரே ஒரு இருக்கை மட்டும் காலியாக இருக்கிறது. அதன் அருகில் இருந்தவர் ஆட்டத்தைப் பார்க்கிறார், பின் காலியாக இருக்கும் இருக்கையைப் பார்க்கிறார். ஆட்டத்தைப் பார்க்கிறார், காலியாக இருக்கும் இருக்கையைப் பார்க்கிறார்.

  சுற்றி இருக்கும் மற்ற ரசிகர்களுக்கு அவரது செயல் வேடிக்கையாக இருந்தது. இடைவேளையின்போது ஒரு ஆர்வக்கோளாறு அவரிடம் கேட்டே விட்டான் "ஏன் அந்த இருக்கையை வெறித்து வெறித்து பார்க்கிறீர்கள்' என்று. அதற்கு அவர் சொன்ன பதில், அது என் மனைவியின் இருக்கை. "அப்படி என்றால் உங்கள் மனைவியையும் அழைத்து வந்து பார்க்க வேண்டியதுதானே. இந்த ஆட்டத்துக்கு டிக்கெட் வாங்க நான் என்ன பாடுபட்டேன் தெரியுமா?' என்கிறான்.

  சில சமயங்களில் ஆதூரமாகக் கேட்கப்படும் கேள்விக்கு முன்னால் திக்பிரமை இழந்து நிற்பதைப் போல நின்ற அவர், "என்ன செய்வது நானும் படாதபாடு பட்டுதான் டிக்கெட் வாங்கினேன். ஆனால், விதி...  என் மனைவி 3 மணி நேரத்துக்கு முன்பு இறந்து விட்டாள். என் உறவினர்கள் அவளது இறுதிச் சடங்குக்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். நான் இங்கு வந்து விட்டேன். ஒவ்வொரு முறையும் நானும், அவளும்தான் உலகக் கோப்பையைப் பார்ப்போம். இன்று அவளுடன் சேர்ந்து இந்த ஆட்டத்தைப் பார்க்க முடியாதது வருத்தமே' என்றார். கேள்வி கேட்டவர் உள்ளிட்ட இந்த பதிலைக் கேட்ட சுற்றி இருந்த ரசிகர்கள் வாயை மூட சிறிது நேரம் ஆனது.

  2006 உலகக் கோப்பை முடிந்த மறுநாள் முன்னணி பத்திரிகையில் வெளியான பெட்டிச் செய்தியே மேற்சொன்ன தகவல். இது உண்மையா, பொய்யா என்பது அந்த கட்டுரையை எழுதியவருக்கே வெளிச்சம். ஐரோப்பியர்கள் கால்பந்தை எப்படியெல்லாம் நேசிக்கிறார்கள், கால்பந்து மீதான அவர்கள் பிரியத்துக்கும், வெறிக்கும் இடையிலான உணர்வை உணர்த்தவே இப்படி ஒரு இன்ட்ரோ கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

  கால்பந்தை நேசிப்பவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு பிடிக்கும் ஜுரம் ஜூலை 13-ம் தேதி நள்ளிரவுதான் குணமாகும். உலகக் கோப்பை பார்க்க டென் கிரிக்கெட், சோனி சிக்ஸ் இதில் எதற்கு சந்தா கட்டுவது என குழப்பமாக உள்ளது என ஃபேஸ்புக்கில் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதில் அளித்து விட்டனர். இதில் இருந்தே இந்தியர்களும் உலகக் கோப்பையை எதிர்நோக்கி இருப்பதை உணரலாம். தங்கள் அணி இடம்பெறவில்லை எனினும் இன்னும் ஒரு மாதத்துக்கு சோனி சிக்ஸ் டிவியே கதி என நள்ளிரவு தூக்கத்தை தியாகம் செய்து தேவுடு காப்பர் என்பதில் சந்தேகமில்லை.

  பாதயாத்திரை சென்றவர்கள் புண்ணிய ஸ்தலத்தை எட்டியதும் நிம்மதிப் பெருமூச்சு விடுவதைப் போல, "60 டேஸ் டு கோ...., இன்னும் 18 நாள்கள்' என கவுண்ட் டவுன் எழுதிய பத்திரிகைகள் இலக்கை நெருங்கிய திருப்தியில் இருக்கின்றன. எத்தனை எத்தனையோ பேர் எழுதித் தீர்த்தும் தீராமல் இருக்கும் காதலைப் போல, காமத்தைப் போல பக்கம், பக்கமாக உலகக் கோப்பையைப் பற்றி எழுதித் தீர்த்து விட்டன பத்திரிகைகள். இருந்தும், இரு சக்கர வாகனத்தில் அப்பாவின் பின்னால் அமர்ந்து காற்றில் ஓவியம் தீட்டும் குழந்தையின் கை விரலில் மிச்சமிருக்கும் பிகாசோவின் ஓவியம் போல, இன்னுமும் உலகக் கோப்பை குறித்து எழுத வேண்டியவை மிச்சமிருக்கலாம். அவற்றுடன் சேர்த்து இனி நடக்கும் ஆட்டத்தைப் பற்றியும் பத்திரிகைகள் எழுதித் தீர்க்கும்.

  கடந்தமுறை மெஸ்ஸி மீது பந்தயம் கட்டியது போல இப்போது கால்பந்தின் பிதாமகன் பீலேவின் ஆட்டத்தை ஒத்திருப்பதாக பாவிக்கப்படும் நெய்மரின் முதுகில் பெருஞ்சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. 22 வயது பாலகன் அந்த சுமையை எப்படி சுமக்கப் போகிறான் எனத் தெரியவில்லை.

  நெய்மர் ஜொலிப்பாரா? இந்தமுறையேனும் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தங்கள் நாட்டுக்காக அதிக கோல்களை அடிப்பார்களா? உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (15) அடித்த ரொனால்டோவின் சாதனையை ஜெர்மனியின் க்ளோஸ் (14 கோல்கள்) முறியடிப்பாரா? கோல்டன் பூட், கோல்டன் க்ளவ், கோல்டன் பால் விருதை வாங்கப் போவது யார்? 64 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் கோப்பை வென்று தன் மக்களின் வயிற்றில் பால் வார்க்குமா பிரேசில் அணி? 28 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வெல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கருதப்படும் ஆர்ஜெண்டினா, பிரேசிலின் முயற்சிக்கு அணை போடுமா? இல்லையெனில், "எங்களை மீறி எதுவும் நடக்காது' என நடப்பு சாம்பியன் ஸ்பெயினும், ஜெர்மனியும் சவால் விடுமா? வழக்கம் போல பீலேவின் கருத்து கணிப்பு பொய்க்குமா? ஸ்வீடன் ஆடாததால் இந்த உலகக் கோப்பையை தொலைக்காட்சியில் கூட பார்க்க மாட்டேன் என்று சொன்ன இப்ராஹிமோவிச் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? உலகக் கோப்பை பிரேசிலுக்கு வரமா, சாபமா? இந்த அணிதான் கோப்பை வெல்லும் என கங்கணம் கட்டி எழுதிய பத்திரிகைகளின் ஆருடம் பலிக்குமா? கோல் லைன் டெக்னாலஜி எந்தளவு கைகொடுக்கும்? என்பது உள்ளிட்ட ஏராளமான முடிச்சுகள் போடப்பட்டுள்ளன இந்த 2014 உலகக் கோப்பையைச் சுற்றிலும். அடுத்த ஒரு மாதத்துக்கு இந்த முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும். ஜூலை 13-ம் தேதி அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்படும்.

  அதுவரை இணைந்திருப்போம் உலகக் கோப்பையோடு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai