சுடச்சுட

  
  ney

  ஆறாவது முறையாக உலகக் கோப்பை வெல்லும் கனவில் இருக்கும் பிரேசில் அணி அதற்கான முதல் அடியை கவனத்துடன் எடுத்து வைத்துள்ளது. 20வது உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் 3லி1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது பிரேசில். பிரேசிலின் இந்த வெற்றிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் 2 கோல்களை அடித்து பெரும்பங்கு வகித்தார். பீலே உள்ளிட்ட பிரேசிலியர்களின் நம்பிக்கையை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கணிப்பையும் நனவாக்கினார் நெய்மர்.

  அதோடு பிரேசிலின் மற்றொரு வீரரான ஆஸ்கரும் கடைசி நேரத்தில் அசத்தலாக கோல் அடித்து கவனம் ஈர்த்தார். பிரேசிலை வெற்றிபெறச் செய்து சா பாலோ மைதானத்தில் இருந்த 61,600 பேரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நெய்மர் மற்றும் ஆஸ்கரின் வயது 22. இவர்கள் இருவரும் முதல் ஆட்டத்தில் ஜொலித்து இந்த தொடர் முழுவதும் தங்கள் மீது எதிர்பார்ப்பு வைக்க வைத்துவிட்டனர்.

  தொடக்க விழா கோலாகலமாக முடிந்ததும் இரு அணிகளும் களமிறங்கின. பிரேசில் எளிதில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பின்படியே ஆடியது. முற்பாதி ஆட்டத்தில் பிரேசில் வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர் என்றாலும் பல கோல் வாய்ப்புகள் நழுவின. குறிப்பாக கார்னர் கிக் அடித்தபோது அதை தலையால் முட்டி கோல் அடிக்கத் தவறினர்.

  ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் குரோஷியா வீரர் அடித்த பந்தை தடுக்க முற்பட்ட பிரேசில் டிஃபண்டர் மார்சிலோ துரதிருஷ்டவசமாக சேம் சைடு கோல் அடித்தார். இந்த உலகக் கோப்பையின் முதல் கோலே சேம் சைடு கோல் என்பது குறிப்பிடத்தக்கது.

  பின்னர் 29வது நிமிடத்தில் 25 யார்டு தூரத்தில் இருந்து நெய்மர் அடித்த பந்து கோல் கம்பத்தின் நுனியில் பட்டு உள்ளே சென்றது. ஆட்டம் 1லி1 என சமநிலை ஆனது. தான் பங்கேற்ற முதல் உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்த உற்சாகத்தில் இருந்தார் நெய்மர். அவர் மட்டுமல்ல அரங்கமும்தான்.

  இரண்டாவது பாதியில் இரு வீரர்களுமே கோல் அடிக்க சற்றுத் தடுமாறினர். பின் 71லிவது நிமிடத்தில் குரோஷியா டிஃபண்டர் டீஜன் லாரென், பிரேசில் வீரர் ஃபிரெடை கீழே தள்ளினார். இதனால் பிரேசிலுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது.

  சிறிது பதற்றத்துடன் இருந்தாலும் நெய்மர் அந்த வாய்ப்பை கோலாக்கினார். இருப்பினும் குரோஷியா கோல் கீப்பர் கையில் பட்டுத்தான் பந்து உள்ளே சென்றது. 2லி1 என பிரேசில் முன்னிலை அடைந்ததும் பிரேசில் பயிற்சியாளர் லூயிஸ் ஃபெலிப் ஸ்காலரி உள்பட அனைவருமே உற்சாகமடைந்தனர். பின்னர், 90வது நிமிடத்தில் ஆஸ்கர் தனி ஆளாக ஒரு கோல் அடித்தார். இதனால் பிரேசில் 3லி1 என வெற்றி பெற்றது.

  பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிக்குப் பின் நெய்மர் கூறுகையில் "எங்கள் அணி வலுவாக இருப்பதாக நம்பினேன். நாங்கள் கூட்டாக ஒரு அணியாக இணைந்து செயல்பட்டோம். எங்களை தோற்கடிப்பது கடினம் என நம்பினேன். இதோ அதை நிரூபித்து விட்டோம். இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளேன்' என்றார்.

   

  நெய்மரின் முதல் கோல்

  தூரம்: 25.5 யார்டு

  காலில் இருந்து பந்து கோல் கம்பத்தை அடைந்த நேரம்: 1.1 வினாடி

  வேகம்: 47.5 மைல்/மணி

   

  சர்ச்சைக்குரிய பெனால்டி கிக்

  ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் குரோஷியாவின் டீஜன் லாரென், ஃபிரெடை கீழே தள்ளி விட்டதாக, நடுவர் நிஷிமுரா பிரேசிலுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இதை நெய்மர் கோலாக மாற்றினார். ஆனால், பிரேசிலுக்கு ஆதரவாக பெனால்டி வழங்கியதாக நடுவர் நிஷிமுரா மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  லாரென் பின்னால் இருந்து ஃபிரெடியை தடுக்க முயல்கிறார். ஃபிரெடி தடுமாறி விடுகிறார். ஆனால், இது பெனால்டி கொடுக்க வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் அல்ல என குரோஷியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர் சிலர்.

  "நிஷிமுரா தன் எல்லையை மீறி விட்டார். இந்த பெனால்டி நகைப்புக்குரியது' என குரோஷியா பயிற்சியாளர் நிகோ கோவக் தெரிவித்தார். ஆனால், பிரேசில் பயிற்சியாளர் ஃபெலிப் ஸ்காலரி நடுவரின் செயலை நியாயப்படுத்தி உள்ளார். "நான் 10 முறை பார்த்து விட்டேன். அது பெனால்டிதான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. நடுவர் சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறார்' என்றார் ஸ்காலரி.

  இருப்பினும், "நான் அவரைத் தொடவே இல்லை. ஆனால், நடுவர் பெனால்டி கொடுத்து விட்டார்' என லாரென் தன் செயலை நியாயப்படுத்தி உள்ளார். இதை ஆமோதித்துள்ள குரோஷியா பத்திரிகை ஒன்று "உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் நடுவர் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டார். அவர் குரோஷியாவின் இதயத்தை கத்திமூலம் கிழித்து விட்டார்' என வரிந்து கட்டி எழுதியுள்ளது.

   

  எதிரும்... புதிரும்...

   

  200 கோடி பேர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் அது பெனால்டி அல்ல என்று. நான் அவரை (ஃபிரெட்) தொடவே இல்லை.

  நடந்தது தவறல்ல. முறைகேடு.

   

  குரோஷியா டிஃபண்டர்  டீஜன் லாரன்.

   

  அங்கு பெனால்டி இருந்ததற்கான சாத்தியம் இருப்பதாகக் கருதுபவர்களை கைகளை உயர்த்தச் சொல்லுங்கள். நான் உயர்த்த மாட்டேன். ஏனெனில், அது பெனால்டியே அல்ல. இந்த நிலை தொடர்ந்தால் இந்த உலகக் கோப்பையில் 100 பெனால்டிகள் கொடுக்கப்படும்.

   

  நிகோ கோவக், குரோஷியா பயிற்சியாளர்.

   

   

  என்னை அணியில் இருந்து வெளியேற்றக் கூடிய தகுதியுடைய ஒரே நபர் பயிற்சியாளர் லூயிஸ் ஃபெலிப் ஸ்காலரி மட்டுமே. அவர் சொல்லும் கருத்துகள்தான் எனக்கு பெரிய விஷயமே தவிர நீங்கள் (ஊடகங்கள்) சொல்வது அல்ல.

   

  லி ஆஸ்கர், பிரேசில் வீரர்.

   

   

  அன்பரே.... உலகக் கோப்பையை ஒருவேளை பிரேசில் வென்று விட்டால் "நிஷிமுராதான் மிகவும் மதிப்பு மிக்க வீரர்' என்று ஒட்டு மொத்த உலகமும் சொல்லும்.

   

  லி ஜப்பானியர் ஒருவரின் டுவிட்டர் குரல்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai