சுடச்சுட

  
  football

  உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் மரியோ பேலடெலி தலையால் முட்டி கோல் அடிக்க இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

  பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் நிறைந்த மனாஸ் நகரில் மிதமான வெப்பநிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆட்டம் நடைபெற்றது.

  திறமை என்று பார்த்தால் இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை. ஆனால், மனரீதியாக இங்கிலாந்தை விட இத்தாலி வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

  இங்கிலாந்து முழுக்க, முழுக்க இளமை, துடிப்பு, வேகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்றால் இத்தாலி விவேகத்துடன் செயல்பட்டது. குறிப்பாக, பிர்லோ பந்தைத் தடுப்பதாக முன்னேறிச் சென்று பந்தைத் தொடாமல் தனக்குப் பின்னால் நின்ற மார்சியோவுக்கு கோல் அடிக்க வாய்ப்பு ஏற்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

  ஐரோப்பிய சாம்பியன் கால்பந்து போட்டியின் காலிறுதியில் இத்தாலியிடம் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து பழி தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் சோகம் மீண்டும் தொடர்ந்தது.

  "இங்கிலாந்து திறமையாக ஆடியது. ஆனால் தோற்று விட்டது. இதுதான் கால்பந்து. கடந்த முறையுடன் ஒப்பிடும்போது தற்போது சிறப்பாகவே ஆடியுள்ளது. ரஹீம் ஸ்டெர்லிங் உள்ளிட்ட இளம் வீரர்களின் முயற்சிக்கு பாராட்டுகள்' என இங்கிலாந்து ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளது.

  முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி வரும் வியாழக்கிழமை சா பாலோ நகரில் நடைபெறும் ஆட்டத்தில் உருகுவேயை எதிர்கொள்கிறது. கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த உருகுவே, இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கும் எனத் தெரிகிறது.

  மருத்துவர் மயக்கம்: ஸ்டரிட்ஜ் 37-வது நிமிடத்தில் கோல் அடித்ததும் இங்கிலாந்து அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது இங்கிலாந்து அணியின் மருத்துவர் கேரி லிவின் கீழே விழுந்தார். உடனே அவர் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காலில் முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

   

  கோல்கள் விவரம்

   

  இத்தாலி

  1. கார்னரில் இருந்து சக வீரர் கொடுத்த பாûஸ இத்தாலி வீரர் பிர்லோ காலில் வாங்காமல் சாதுர்யமாக விலகி விட, அவருக்குப் பின்னால் இருந்த மார்சியோ பந்தை நிறுத்தி நிதானமாக கோலடித்தார். பந்து வலைக்குள் பாயும் முன் இங்கிலாந்தின் நான்கு வீரர்கள் மற்றும் கோல் கீப்பரைக் கடந்து சென்றது. (35-வது நிமிடம்).

  2. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கேனரிவா அடித்த பந்தை தலையால் முட்டி கோலடித்தார் இத்தாலியின் நட்சத்திர வீரர் மரியோ பேலடெலி.

  இங்கிலாந்து

  1. இங்கிலாந்து வீரர் ரூனி கொடுத்த பாûஸ டேனியல் ஸ்டரிட்ஜ் கோலாக மாற்றினார். (37-வது நிமிடம்)

   

  பந்தைத் தொடாமலே ஹீரோவான பிர்லோ!

  இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அனைவரின் எதிர்பார்ப்பும் ஒருங்கே குவிந்தது இத்தாலியின் ஆண்ட்ரூ பிர்லோ மீதுதான். நீண்ட தலைமுடி, தாடியுடன் தோற்றமளிக்கும் பிர்லோ பெரிதளவில் அலட்டிக்கொள்ளாதவர். ஆனால், தனது திறமையை ஆட்டத்தில் வெளிப்படுத்துபவர். 2006ஆம் ஆண்டு வரலாற்றை (இத்தாலி உலக சாம்பியன்) நிகழ்ந்த சாதனையை மீண்டும் நிகழ்த்த ஆயத்தமாக உள்ள பிர்லோ, புதிய யுத்தியைக் கையாண்டு இங்கிலாந்து வீரர்களை மட்டுமல்ல, பார்ப்பவர்களையும் ஏமாற்றினார். பந்தை அடிப்பது போல் பாசாங்கு செய்து விலகினார். இது, அவரைத் தொடர்ந்து வந்த க்ளேடியோ மார்சியோவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அதை கச்சிதமாகவும் மார்சியோ நிறைவேற்றினார். இது ஆட்டத்தின் முதல் கோலாகும்.

   

   

  எதிரும்... புதிரும்...

   

  இந்த ஆட்டத்தில் ரூனியின் செயல்பாடு மெச்சதகுந்த வகையில் இல்லை என்று பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், ரூனிக்கு ஆதரவாக இங்கிலாந்தின் பயற்சியாளர் ராய் ஹாட்ஜ்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

  "ரூனி இடதுபக்கம் சிறப்பாக விளையாடவில்லை என்று கூற முடியாது. அனைத்து இடங்களிலும் அவர் சிறப்பாக விளையாடக் கூடியவர். தனது ஆட்டத்திறன் மீது ரூனி திருப்தி அடைந்திருப்பார் என்று கருதுகிறேன். இந்த ஆட்டத்தின் கடைசி நேரத்தில் எங்களுக்கு கோல் கிடைக்காதது ஏமாற்றம்.

  இருப்பினும், இளம் வீரர்களான ரஹீம் ஸ்டெர்லிங், டேனியல் ஸ்டர்ரிட்ஜ், டேனி வெல்பேக் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். முதல் ஆட்டத்தில் தோற்றபோதும், தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளதாக நான் கருதுகிறேன். அடுத்த ஆட்டங்களில் அற்புதமானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்' என்று ஹாட்ஜ்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

   

  இந்த ஆட்டத்தில் எங்களது தந்திரங்களுக்கு உரிய சன்மானம் கிடைத்தது த்ரில்லாக இருந்தது. இங்கிலாந்தைப் போல எங்களிடம் ஆற்றல் மிகுந்த வீரர்கள் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இங்கிலாந்தின் ஆட்ட வியூகம் தற்போது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை "லாங் ரேஞ்ச் பாஸ்', "ஹெட்டர்' ஆகியவற்றை ஆட்டத்தில் அந்த அணி வெளிப்படுத்தியது. ஆனால், தற்போது குறைவான தூரத்தில் பந்தை பாஸ் செய்வதில் கூட அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இங்கிலாந்தின் இந்த மாற்றம் எங்களுக்குத் தெரியும்.

  இருப்பினும், தடுப்பு ஆட்டத்தில் நாங்கள் ஆளுமை செலுத்தினோம். அவர்கள் 4-2-3-1 என்ற விகிதத்தில் விளையாடுகின்றனர். உலகக் கோப்பையில் சிறந்த தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து அணியை நாங்கள் வீழ்த்தியதால் மிகவும் திருப்தி அடைந்துள்ளோம்.

  பிரண்டெலி, இத்தாலி பயிற்சியாளர்.

   

   

  மோசமான கார்னர் ஷாட்

  இங்கிலாந்தின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் வேயன் ரூனி, இந்த ஆட்டத்தில் அடித்த கார்னர், கோல் கம்பத்துக்கு அப்பால் சென்றது. இது, 84 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் மிக மோசமான கார்னர் ஷாட் என கூறப்படுகிறது.

   

  பாசமான இங்கிலாந்துக்காரர்கள்!

  இத்தாலி-இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை சுமார் 1.5 கோடி ரசிகர்கள் பிரிட்டனில் பார்த்துள்ளதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நேரப்படி இரவு 11 மணிக்குத் தொடங்கிய இந்த ஆட்டத்தை பிபிசி நிறுவனம் ஒளிபரப்பியது. ஆட்டத்தின் பின்பகுதியில் இங்கிலாந்து பின்னடைவைச் சந்தித்தவுடன் பலர் டிவியை ஆஃப் செய்து விட்டனர். எனினும், ஆட்டம் முழுவதும் பார்த்தவர்கள் சராசரியாக 1.15 கோடி பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரு நிகழ்ச்சியை அதிகம்பேர் பார்த்து ரசித்துள்ளது இதுவே முதன் முறையாகும்.

   

  ஆஃப் சைடு

  * இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலியின் ஆண்ட்ரு பிர்லோ 108 முறை பந்தை பாஸ் செய்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் இது அதிகபட்சமாகும்.

  * 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தற்போதுதான் தோற்றுள்ளது.

  * இத்தாலிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களில் இங்கிலாந்து இரண்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

  பெனால்டி

  உலகக் கோப்பையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கடைசியாக அடிக்கப்பட்ட 26 பெனால்டி ஷாட்களும் வலது காலால் அடிக்கப்பட்டவை. கடைசியாக, 2002ஆம் ஆண்டில் ரெகோபா என்பவர் இடதுகாலால் கோல் அடித்துள்ளார்.

   

  ஆட்டங்கள்...

  16ஆம் தேதி: ஜெர்மனி - போர்ச்சுகல் (இரவு 9.30)

  17ஆம் தேதி: ஈரான் - நைஜீரியா (அதிகாலை 12.30)

  கானா - அமெரிக்கா (அதிகாலை 3.30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai