சுடச்சுட

  
  ron

  தாமஸ் முல்லர் ஹாட்ரிக் கோல் அடித்து கைகொடுக்க போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  கடந்த உலகக் கோப்பையில் "கோல்டன் பூட்' மற்றும் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்ற முல்லர் இம்முறையும் தனது ஹாட்ரிக் கோல்கள் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் கோல் இதுவே.

  பிரேசிலின் சால்வேடாரில் இந்த ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. போர்ச்சுகல் அணி முழுக்க முழுக்க கேப்டனும், உலகின் சிறந்த கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவையே பெரிதும் நம்பியிருந்தது. காயத்தால் அவதிப்பட்டதால் அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது இரண்டு நாள்களுக்கு முன்புவரை உறுதியில்லாமல் இருந்தது. ஆனால், அவர் தனது அணியின் முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். காயத்தைப் பொருட்படுத்தாது 90 நிமிடங்கள் களத்தில் இருந்தபோதிலும் அவரால் பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. வழக்கமாக பெனால்டி மற்றும் ஃப்ரீ கிக் வாய்ப்புகளை சிரமமின்றி அவர் கோலாக மாற்றுவார். ஆனால், இந்த ஆட்டத்தில் அவர் சோபிக்கவில்லை.

  காரணம் முதல்பாதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி முன்னிலையில் இருந்தது. இது மனரீதியாக போர்ச்சுகல் வீரர்களுக்கு நம்பிக்கையின்மையையும், ஜெர்மனி வீரர்களுக்கு புத்துணர்ச்சியையும் அளித்தது. அதோடு ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நம்பிக்கைக்குரிய பின்கள வீரர் பெபே சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஏற்கெனவே பலவீனமாக இருந்த போர்ச்சுகலின் பின்களம் மேலும் பலவீனமானது. இதை சரியாகப் பயன்படுத்திய முல்லர் மூன்று கோல்களை அடித்தார்.

  ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பெனால்டி கிக்கை கோலாக்கிய முல்லர் 45 மற்றும் 78-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். ஹம்மல்ஸ் தன் பங்குக்கு 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

  முன்பாதி ஆட்டத்தில் முன்னிலையில் இருந்த தெம்புடன் ஆடிய ஜெர்மனி பிற்பாதியில் கோல் ஏதும் விழ விடாமல் பார்த்துக் கொண்டது. இதனால் ஜெர்மனி சிரமமின்றி வெற்றி பெற்றது.

  துல்லிய பாஸ், துடிப்பான பின்களம் என ஜெர்மனிக்கு எல்லாமே சரியாக அமைந்தது என்றால், பெபேவுக்கு சிவப்பு அட்டை வழங்கியது உள்பட போர்ச்சுகலுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. பத்து பேருடன் ஆட வேண்டும், திறமையான வீரர்களும் இல்லை எனும்போது ரொனால்டோதான் என்ன செய்வார் என போர்ச்சுகலின் தோல்விக்கு அவரது ரசிகர்கள் காரணம் கற்பித்தனர்.

   

  ஆட்டங்கள்

  ஜூன் 17: இரவு 9.30 பெல்ஜியம் - அல்ஜீரியா

  ஜூன் 18: அதிகாலை 12.30 பிரேசில் - மெக்ஸிகோ

  அதிகாலை 3.30 ரஷியா - தென் கொரியா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai