சுடச்சுட

  

  உலகக் கோப்பையில் பிரேசில் - மெக்ஸிகோ அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரேசில் அணியின் கோல் முயற்சிகளை தூணாக நின்று தடுத்த மெக்ஸிகோ கோல் கீப்பர் கிலெர்மோ ஒசாவ் ஒரே ஆட்டத்தில் பிரபலமடைந்தார்.

  முதன்முறையாக இந்த உலகக் கோப்பையில் கோல் கீப்பர் அட்டகாசமாகக் கோல்களைத் தடுத்து பத்திரிகைகளின் விளையாட்டுப் பக்கத்தை அலங்கரித்துள்ளார்.

  பிரேசிலின் ஃபோர்டெல்ஸாவில் 60,342 ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்ததால் குரூப் -16 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கியது. மெக்ஸிகோ அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேமரூனுக்கு எதிராக ஆடிய அதே வீரர்கள் களமிறங்கினார். ஆனால், பிரேசில் அணியில் ஹல்குக்கு பதிலாக ரமிர்ஸ் இடம்பெற்றார். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை ரமிர்ஸ் சரியாகப் பயன்படுத்த வில்லை.

  குரோஷியாவுக்கு எதிராக ஆடியதை விட பிரேசிலின் ஆட்டம் கொஞ்சம் மெருகேறியிருந்தது. இருப்பினும் 90 நிமிடங்கள் போராடியும் பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காரணம், பிரேசிலின் கோல் முயற்சிகளை தடுத்து சிம்ம சொப்பனமாக விளங்கினார் கிலெர்மோ.

  குறிப்பாக ஃப்ரீ கிக்கின்போது நெய்மர் தலையால் முட்டிய பந்தை அற்புதமாக பறந்து தடுத்தார். மற்றொருமுறை ஃப்ரீ கிக்கின்போது பந்தை மார்பில் வாங்கிய நெய்மர் கோல் கம்பத்துக்கு மிக அருகில் இருந்து இடது காலால் பந்தை ஓங்கி உதைத்தார், அதையும் கிலெர்மோ தடுத்தார்.

  நேரம் செல்லச் செல்ல எப்படியாவது கோல் அடித்து விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆடியது பிரேசில் அணி. இதனால் பிரேசில் அணியின் கேப்டனும், பின்கள வீரருமான தியாகோ சில்வா உள்ளிட்ட டிஃபண்டர்களும் முன்களத்தில் புகுந்து விளையாடினனர். 86-வது நிமிடத்தில் பிரேசிலுக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. நெய்மர் அடித்த பந்தை தியாகோ சில்வா கோல் கம்பத்துக்கு மிக அருகில் நின்று தலையால் முட்டி வலைக்குள் செலுத்த முயற்சித்தார். ஆனால் அதையும் கிலெர்மோ அட்டகாசமாகத் தடுத்தார்.

  தவிர, கார்னர் கிக் அடிக்கும் போது சிறிது முன்னேறி வந்து எதிரணியின் கோல் முயற்சிக்கு அணை போட்டார். இதனால் பிரேசில் அணியின் கோல் வாய்ப்புகள் அனைத்தும் "மிஸ்' ஆனது.

  அதேபோல மெக்ஸிகோவின் கோல் முயற்சிகளையும் பிரேசில் கோல் கீப்பர் ஜீசஸ் முறியடித்தார். முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது. பிரேசில் அடுத்த ஆட்டத்தில் கேமரூனையும், மெக்ஸிகோ அணி குரோஷியாவையும் எதிர்கொள்கிறது.

   

  எதிரும், புதிரும்

   

  நாங்கள் எதிர்பார்த்த முடிவு வரவில்லை. பல கோல் வாய்ப்புகளை இழந்து விட்டோம். இருப்பினும் எங்கள் ஆட்டத்தில் விமர்சனம் ஏதுமில்லை. குரோஷியாவுக்கு எதிராக ஆடியதை விட இந்தமுறை சிறப்பாகவே ஆடினோம். அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்னும் எங்களுக்கு வாய்ப்புள்ளது.

  லூயிஸ் ஃபெலிப் ஸ்காலரி, பிரேசில் பயிற்சியாளர்.

  எனக்கு நினைவு தெரிந்து உலகக் கோப்பையில் வேறு எந்த கோல் கீப்பரும் இதுபோல கோல்களைத் தடுக்கவில்லை. கிலெர்மோ கோல்களைத் தடுத்த விதம் அசாதாரணமானது.

  மிகல் ஹெரேரா, மெக்ஸிகோ பயிற்சியாளர்.

   

  போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆட்டத்தை தவறவிட்ட பீலே

   

  பிரேசில் - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சா பாலோவில் நடைபெற்றது. இப்போட்டியைக் காண பிரேசிலின் முன்னாள் வீரரான பீலே மைதானத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர் குறிப்பிட்ட நேரத்தில் மைதானத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டத்தை அவரால் பார்க்க இயலவில்லை. ஆனால், ஆட்ட நிகழ்வுகளை பீலே, காரில் இருந்தபடியே வானொலியில் கேட்டறிந்தார். பீலே கூறுகையில் "பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வானொலியில் கேட்கிறேன். இதற்கு முன் 1950-இல் கேட்டுள்ளேன்' என்றார். ஆட்ட முடிவு குறித்து அவரிடம் கேட்டதற்கு " பிரேசில் மோசமாகவும் ஆடவில்லை. வெற்றியும் பெறவில்லை. எளிதாக வெற்றிபெறும் ஆட்டங்கள் இல்லை என எங்களுக்குத் தெரியும். நாங்கள் இறுதிச் சுற்றுக்கு செல்ல வேண்டும் என கடவுள் நினைக்கிறார்' என்றார்.

   

  துளிகள்...

   

  *இந்த உலகக் கோப்பையில் வேறு எந்த கோல் கீப்பரையும் விட மெக்ஸிகோவின் கிலெர்மோ அதிக கோல்களை (5) தடுத்துள்ளார்.

  * உலகக் கோப்பையில் பிரேசில் கடைசியாக ஆடிய 25 ஆட்டங்களில் இந்த ஆட்டத்தில் மட்டுமே கோல் ஏதும் அடிக்கவில்லை.

  *இந்த உலகக் கோப்பையில் முதல் 15 ஆட்டங்களில் 47 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் 2010-இல் நடைபெற்ற உலகக் கோப்பையின்போது 26 ஆட்டங்களில்தான் 47 கோல்கள் அடிக்கப்பட்டன.

  *முதல் ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து பிரேசிலியர்களை நெகிழ வைத்த நெய்மர், ஆட்டம் தொடங்கும் முன் தேசிய கீதம் பாடி முடித்ததும் உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கினார். ஒட்டுமொத்த தேசமும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என கண் கலங்கினாரோ என்னவோ? இந்த ஆட்டத்தில் அவர் கோல் கணக்கில் வரவு ஏதும் வைக்கப்படவில்லை.

   

  ஆட்டங்கள்

   

  ஜூன் 19: இரவு 9.30 கொலம்பியா - ஐவரி கோஸ்ட்

  ஜூன் 20: அதிகாலை 12.30 இங்கிலாந்து - உருகுவே

  அதிகாலை 3.30 ஜப்பான் - கிரேக்கம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai