சுடச்சுட

  
  stuart

  ஸ்டுவர்ட் பின்னி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

  குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற புதிய சாதனையைப் படைத்தார் ஸ்டுவர்ட் பின்னி. இதற்கு முன் 1993-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கும்ப்ளே 12 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

  வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் மிர்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட் செய்தது. 5 ஓவர்கள் முடிந்திருந்தபோது மழை பெய்தது. 3 மணி நேரத்துக்குப் பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆட்டம் 41 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

  இந்திய அணி பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். கேப்டன் ரெய்னா மட்டுமே 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்களில் உத்தப்பா (14 ரன்கள்), உமேஷ் யாதவ் (17 ரன்கள்) மட்டுமே இரட்டை இலக்கத்தைக் கடந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

  இதனால் 25.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேசத்தின் டஸ்கின் அஹமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  அடுத்து களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்களை ஸ்டுவர்ட் பின்னியும், மொஹித் சர்மாவும் திணறடித்தனர். இதனால் வங்கதேசம் 17.4 ஓவர்களில் 58 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பின்னி 6 விக்கெட்டுகளையும், மொஹித் சர்மா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. அடுத்த ஆட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai