சுடச்சுட

  

  பிரேசிலில் நடைபெற்று வரும் 20-வது உலகக் கோப்பையில் இருந்து நடப்பு சாம்பியன் ஸ்பெயின் வெளியேறியது. சமீப காலமாக சர்வதேச கால்பந்தில் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த ஸ்பெயின், இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து முதலிரண்டு ஆட்டங்களில் மோசமாக தோல்வியடைந்தது. நெதர்லாந்தை அடுத்து சிலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினைத் தோற்கடித்து, இந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றியது.

  குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் சிலியை எதிர்கொண்டது. ரியோ டீ ஜெனீரோவில் புதன்கிழமை நள்ளிரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது ஸ்பெயின் அணி.

  ஸ்பெயின் நடப்பு சாம்பியன் என்றாலும், எளிதில் வீழ்த்தவல்ல அணிதான் என்பதை நெதர்லாந்து கண்டறிந்தது. அதை சிலியும் பின்பற்றிக் கொண்டது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அரணாக நின்ற ஸ்பெயினின் பின்களத்தை துல்லியமான பாஸ் மூலம் அற்புதமாகத் தகர்த்தனர் சிலியின் முன்கள வீரர்கள். தனக்கு கிடைத்த பாûஸ நொடியும் தாமதிக்காது கோல் அடித்தார் சிலியின் வர்கஸ்.

  பின்னர், 43-வது நிமிடத்தில் சிலி அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. கோல் கம்பத்தை நோக்கி அடிக்கப்பட்ட பந்தை பறந்து தடுத்தார் ஸ்பெயின் கோல் கீப்பர் கேசிலாஸ். ஆனால், பந்து அவர் கையில் பட்டு எகிறியது. கோல் கம்பத்துக்கு அருகிலேயே தேவுடு காத்த அரங்குஸ் பந்தை நிறுத்தி நிதானித்து வலைக்குள் செலுத்தினார்.

  இதனால் முதல் பாதியில் சிலி 2-0 என முன்னிலை வகிக்தது. மீதமுள்ள 45 நிமிடத்தில் 3 கோல்கள் அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற இக்கட்டான இலக்கை நோக்கி களம் புகுந்தது ஸ்பெயின். அதற்கேற்ப பந்தை நீண்ட நேரம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. கோல் கம்பத்துக்கு அருகில் இருந்தும் கோல் அடிக்க முனையாமல் பந்தைக் கடத்திக் கொண்டே இருந்து ஸ்பெயின் ரசிகர்களை எரிச்சலுக்குள்ளாக்கினார்.

  கடந்த முறை இறுதிச் சுற்றில் வெற்றிக்கான கோல் அடித்த நடுகள வீரர் இனீஸ்டா மட்டுமே இரண்டுமுறை கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார். மற்றொருமுறை டீகோ கோஸ்டா கோல் அடிக்க முயற்சித்தார். ஆனாலும் ஸ்பெயின் அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

  இதனால், ஆறு ஆண்டுகளாக (2008,2012 யூரோ கோப்பை சாம்பியன், 2010 உலக சாம்பியன்) சர்வதேச கால்பந்தில் கோலோச்சிய ஸ்பெயினின் ஆதிக்கம் இந்தமுறை முதல் சுற்றுடன் முடிவுக்கு வந்தது.

   

  ஆஃப் சைடு

   

  *2006 சாம்பியன் இத்தாலி 2010 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

  *1998 சாம்பியன் பிரான்ஸ் 2002 உலகக் கோப்பையின் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

  * 2008, 2012 யூரோ கோப்பை, 2014 உலகக் கோப்பை ஆகிய மூன்று தொடர்களில் ஸ்பெயின் அணி மொத்தம் 6 கோல்கள் மட்டுமே அடிக்க எதிரணிக்கு வாய்ப்பளித்தது. ஆனால், இந்த உலகக் கோப்பையில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே 7 கோல்களை வாங்கி விட்டது.

  *இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணிக்காக 126 நிமிடங்கள் விளையாடிய டீகோ கோஸ்டா ஒரு ஷாட் கூட இலக்கை நோக்கி அடிக்கவில்லை. இத்தனைக்கும் இவர் லா லிகா தொடரில் அதிக கோல்களை அடித்தவர்.

  *2006-ஆம் ஆண்டுக்குப் பின் ஸ்பெயின் அணி முதன்முறையாக தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.

  *தொடர்ந்து 8-வது முறையாக நெதர்லாந்து அணி குரூப்-16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  *குரோஷியாவின் இவிகா ஆலிக் உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்து சரியாக 4393 நாள்கள் (ஜூன் 2002) கழித்து தனது இரண்டாவது கோலை அடித்துள்ளார்.

   

  எதிரும் புதிரும்...

  உலக சாம்பியனை சிலி வெளியேற்றியது பெருமை அளிக்கிறது. சிறந்த எதிரிக்கு எதிரான மகத்தான வெற்றி இது. இதுதான் எங்கள் சிறந்த வெற்றியா எனத் தெரியாது. என்னைப் பொருத்தவரையில் அடுத்த ஆட்டம்தான் சிறந்த வெற்றி. இருந்தாலும், இந்த வெற்றியை எளிதில் மறக்க முடியாது.

   

  ஜார்ஜ் சம்போலி, சிலி பயிற்சியாளர்.

   

  வெற்றிக்காக போராடும் இளம் வீரர்கள் நிறைந்தது எங்கள் அணி. இந்த போட்டியில் இன்னும் நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது.

  இந்த உலகக் கோப்பையில் ஆச்சர்யம் அளிக்கும் அணியாக சிலி இருக்கும்.

   

  ஆர்டுரோ விடல், சிலி நடுகள வீரர்.

   

  கடினமான தருணங்களில் இணைந்து செயல்பட வேண்டும். இன்று எங்களுக்கான நாள் அல்ல. ஆனால் எங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. எங்கள் பயிற்சியாளர் வின்சென்ட் டெல் பாஸ்க்கை முழுமையாக மதிக்கிறோம். அவர் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவருடன் இருப்போம்.

   

  செர்ஜியா ரமோஸ், ஸ்பெயின் பின்கள வீரர்.

   

  இது எங்களுக்கு மோசமான நாள். வெற்றி பெற முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும் தோல்வி குறித்து இப்போதே ஆய்வு செய்யத் தேவையில்லை. சிலி, நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் எங்களுக்கு எதிராக கோல்களை அடித்து எங்களுக்கு மலையளவு இலக்கு நிர்ணயித்து விட்டது. முதல் பாதியில் தன்னம்பிக்கையின்றி செயல்பட்டு, இரண்டாவது பாதியில் எழுச்சி பெறுவது கடினம்.

   

  வின்சென்ட் டெல் போஸ்கே, ஸ்பெயின் பயிற்சியாளர்.

   

   

  தோல்விக்கான காரணங்கள்...

   

  *முக்கியமான ஆட்டத்தில் பின்கள வீரர் ஜெரார்டு பிக்கே, நடுகள வீரர் ஷேவியை களமிறக்காதது.

  *டிக்கி டாக்கா யுத்தியை மட்டுமே பெரிதும் நம்பி, தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடாதது.

  *ஸ்பெயின் அணியில் கோல் அடிக்கவல்ல திறமையான முன்கள வீரர்கள் இல்லாதது.

  *பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்கள வீரரான டீகோ கோஸ்டா மோசமாக ஆடியது.

  *ஆட்டத்தின் பெரும்பான்மையான நேரம் சிலி அணியில் கோல் எல்லையை ஆக்கிரமித்திருந்தபோதும், கோல் அடிக்காமல் தங்களுக்குள்ளேயே பாஸ் செய்து கொண்டே நேரத்தை வீணடித்தது.

  * அவுட் ஆஃப் ஃபார்ம் எனத் தெரிந்தும் கோல் கீப்பர் கேசிலாஸýக்கு ஓய்வளிக்காமல் வாய்ப்பளித்தது.

  * முதல் பாதியில் சிலி முன்னிலை பெற்றதும் மனம் மற்றும் உடல் ரீதியாக சோர்வடைந்தது.

   

  பத்திரிகைகள் கிழி கிழி...

   

  உலக சாம்பியன் ஸ்பெயின் எதிர்ப்பின்றி பணிந்ததை அந்நாட்டு பத்திரிகைகள் கடுமையா விமர்சித்துள்ளன. "என்றாவது ஒருநாள் தோல்வி வரும் எனத் தெரியும், ஆனால், இந்த வகையில் மோசமாக தோல்வியடைவோம் என எதிர்பார்க்கவில்லை' என்று பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.

  "மகத்தான சகாப்தத்தின் மோசமான முடிவு' என அதிகளவில் வாசகர்களைக் கொண்டுள்ள "மர்கா' பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. "திறமையான தலைமுறை முடிவுக்கு வந்து, புதிய தலைமுறை உருவாகும் நேரம் இது' என, அந்த பத்திரிகையின் கட்டுரையாளர் சான்டியாகோ செகுராலா குறிப்பிட்டுள்ளார்.

  மற்றொரு பத்திரிகை "உலகம் தோற்று விட்டது' என தலைப்பிட்டிருந்தது. அதேபோல மற்ற பத்திரிகைகளும் ஸ்பெயின் கோல் கீப்பரும், கேப்டனுமான கேசிலாஸ் மற்றும் பயிற்சியாளரை விமர்சித்துள்ளன.

   

  டிக்கி டாக்காவுக்கு குட்பை?

   

  நெதர்லாந்துக்கு எதிராக 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தபோதே ஸ்பெயின் அணியின் பிரத்யேக "டிக்கி டாக்கா' (குறுகிய இடைவெளியில் பாஸ் செய்து, பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது) யுத்தி முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், "இந்த யுத்தியில் நாங்கள் பல வெற்றிகளைக் குவித்துள்ளோம். அப்படி இருக்கையில் ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்ததற்காக ஆட்ட யுத்தியை மாற்ற மாட்டோம்' என ஸ்பெயின் நடுகள வீரர் டேவிட் சில்வா தெரிவித்திருந்தார்.

  தற்போது சிலி அணியிடமும் தோல்வியடைந்த பின் டிக்கி டாக்கா முற்றிலும் செயலிழந்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. இது உண்மைதானா, டிக்கி டாக்கா குறித்த சிறு பார்வை.

  மேலாளராக ஜோஹன் கிரயுப் இருந்த காலத்தில் இருந்து தற்போது வரையிலும் டிக்கி டாக்கா யுத்தியை ஸ்பெயின் அணி பின்பற்றி வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த யுத்தியை வைத்துதான் ஸ்பெயின் அணி 2008,2012-இல் யூரோ கோப்பை, 2010-இல் உலகக் கோப்பை வென்றது.

  ஸ்பெயின் அணியைப் போல பார்சிலோனா கிளப் அணியும் இந்த யுத்தியின்படி செயல்பட்டது. ஆனால், ஜோஸ் மொரினோ ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக இருந்தபோது பார்சிலோனாவின் டிக்கி டாக்கா யுத்தியை உடைத்தெறிந்தார். தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும் அட்லெடிகோ மாட்ரிட்டும், பேயர்ன் முனிச் அணியும் கூட இந்த யுத்தியைத் தகர்த்தெறிந்தது. "மெல்ல மெல்ல டிக்கி டாக்கா யுத்தி எடுபடாமல் போவதை ஸ்பெயின் பயிற்சியாளர் கவனிக்கவில்லை. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்த பின்பே சுதாரித்திருக்க வேண்டும், தொடர்ந்த ஆட்ட முறையில் மாற்றம் ஏற்படுத்தாததே ஸ்பெயினின் தோல்விக்கு காரணம்' என்கின்றனர் கால்பந்து நிபுணர்கள்.

   

  தோல்விக்கான காரணங்கள்...

   

  *முக்கியமான ஆட்டத்தில் பின்கள வீரர் ஜெரார்டு பிக்கே, நடுகள வீரர் ஷேவியை களமிறக்காதது.

  *டிக்கி டாக்கா யுத்தியை மட்டுமே பெரிதும் நம்பி, தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடாதது.

  *ஸ்பெயின் அணியில் கோல் அடிக்கவல்ல திறமையான முன்கள வீரர்கள் இல்லாதது.

  *பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்கள வீரரான டீகோ கோஸ்டா மோசமாக ஆடியது.

  *ஆட்டத்தின் பெரும்பான்மையான நேரம் சிலி அணியில் கோல் எல்லையை ஆக்கிரமித்திருந்தபோதும், கோல் அடிக்காமல் தங்களுக்குள்ளேயே பாஸ் செய்து கொண்டே நேரத்தை வீணடித்தது.

  * அவுட் ஆஃப் ஃபார்ம் எனத் தெரிந்தும் கோல் கீப்பர் கேசிலாஸýக்கு ஓய்வளிக்காமல் வாய்ப்பளித்தது.

  * முதல் பாதியில் சிலி முன்னிலை பெற்றதும் மனம் மற்றும் உடல் ரீதியாக சோர்வடைந்தது.

   

  டுவிட்டர் குரல்

   

  *இந்த உலகக் கோப்பையில் போராட்டம் இல்லாமல் சரணடைந்த ஒரே அணி ஸ்பெயின் அணியாகத்தான் இருக்கும்.

  * டீகோ கோஸ்டா மைண்ட் வாய்ஸ்: ஒழுங்கா பிரேசிலுக்கே விளையாடி இருக்கலாம்.

  * ஸ்பெயினும், தமிழக காங்கிரஸýம் ஒன்ணு! தொண்டர்கள் இல்லாமல் தலைவர்கள் மட்டுமே கொண்ட கட்சி. வீரர்கள் இல்லாமல் ஸ்டார்கள் மட்டுமே கொண்ட அணி.

  * என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே, தாய்க்குலமே.... இந்த பாடல் ஸ்பெயின் அணிக்கு அர்ப்பணம்.

   

  ஆட்டங்கள்

   

  ஜூன் 20: இத்தாலி - கோஸ்டா ரிகா (இரவு 9.30)

  ஜூன் 21: ஸ்விட்சர்லாந்து - பிரான்ஸ் (அதிகாலை 12.30)

  ஹோண்டுரஸ் - ஈகுவேடார் (அதிகாலை 3.30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai