சுடச்சுட

  

  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே,மகளிர் பிரிவில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, சீனாவின் லீ நா வெற்றிபெற்றனர்.

  கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டி பிரிட்டன் தலைநகர் லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும் பெல்ஜியத்தின் டேவிட் காஃபினும் மோதினர். 122 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 105-வது இடத்தில் உள்ள காஃபினை 6-1, 6-4, 7-5 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார் முர்ரே.

  முர்ரேவுக்கு வரவேற்பு: கடந்த ஆண்டு இப்போட்டியில் முர்ரே பட்டம் வென்று 77 ஆண்டுகளுக்கு முன் விம்பிள்டனைக் கைப்பற்றிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். எனவே, இந்த ஆட்டம் தொடங்கும் முன் அவர் களத்துக்கு வந்தபோது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

  சமீபத்தில் முர்ரே தனது பயிற்சியாளராக முன்னாள் வீராங்கனையான அமீலி மெüரிஸ்மோவை நியமித்திருந்தார். முர்ரேவின் ஆட்டத்தை மெüரிஸ்மோ உன்னிப்பாகக் கவனித்தார்.

  அசரென்கா வெற்றி: மகளிர் ஒற்றையர் பிரிவினருக்கான முதல் சுற்றில் அசரென்காவும், குரோஷியாவின் மிர்ஜனா லூசிக் பரோனியும் மோதினர். இதில் அசரென்கா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

  இந்த ஆண்டு இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முக்கியமான போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் நம்பர் - 1 வீராங்கனையான அசரென்கா நீண்ட இடைவெளிக்குப் பின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

  கடந்த ஆண்டு விம்பிள்டன் முதல் சுற்றின்போது அசெரன்கா தவறி விழுந்து காயம் அடைந்தார். இதனால் அடுத்த சுற்றில் இருந்து விலகினார். இந்த விரக்தியில் அவர், "இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் எல்லாம் ஆபத்தானவை' எனத் தெரிவித்திருந்தார்.

  அடுத்த சுற்றில் அவர், செர்பியாவின் போஜனா ஜோவனோவ்ஸ்கியை எதிர்கொள்கிறார்.

  லீ நா முன்னேற்றம்: மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் நாயகியான சீனாவின் லீ நா, போலந்தின் பெüலா கனியாவைத் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai