சுடச்சுட

  
  ney

  ஒட்டுமொத்த தேசமும் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு ஆடிய நெய்மர், 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க, 4-1 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணியை வீழ்த்தியது பிரேசில். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (குரூப் -16) பிரேசில் அணி முன்னேறியது. சனிக்கிழமை நடைபெறவுள்ள நாக் அவுட் சுற்றில் பிரேசிலும், சிலியும் மோதவுள்ளன.

  குரூப் ஏ பிரிவில் பிரேசிலும், மெக்ஸிகோவும் இரண்டு ஆட்டங்கள் மற்றும் ஒரு டிராவின் மூலம் 7 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தன. இருப்பினும், அதிக கோல்கள் அடித்ததன் அடிப்படையில் பிரேசில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

  பிரேசில் - கேமரூன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிரேசிலியாவின் தேசிய மைதானத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. ஏற்கெனவே இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த கேமரூன் அணிக்கு இந்த ஆட்டம் முக்கியத்துவம் இல்லாததாகக் கருதப்பட்டது.

  கேமரூன் அணியின் பின்களம் பலவீனமாக இருந்ததை நெய்மர் தனக்கு சாதகமாக்கி முதல் பாதியிலேயே இரண்டு கோல்கள் அடித்து விட்டார். அதோடு, பிரேசில் அணியின் 100-வது உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்த உலகக் கோப்பையின் 100-வது கோலை அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார். கேமரூன் அணியின் மேடிப் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தாலும் இரண்டாவது பாதியில் அவர்களால் ஆதிக்கம் செலுத்தமுடியவில்லை. இதனால், பிரேசிலின் ஃப்ரெட் உலகக் கோப்பையில் தனது முதல் கோலை அடித்து அணியின் முன்னிலைக்கு வழி வகுத்தார். அவரைத் தொடர்ந்து மாற்று வீரராகக் களமிறங்கிய ஃபெர்னாண்டினோவும் தனது பங்குக்கு கோல் அடித்து பிரேசில் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். பிரேசிலின் இந்த வெற்றி அரை நூற்றாண்டுக்குப் பின் தங்கள் சொந்த மண்ணில் உலகக் கோப்பை வெல்ல கிடைத்திருக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

   

  இந்த உலகக் கோப்பையில் நெய்மர்...

   

  ஆட்டங்கள்: 3

  கோல்கள்: 4

  நிமிடம்: 249

  கோல் அடிக்க உதவி: 0

  மஞ்சள் அட்டை: 1

  இலக்கை நோக்கிய முயற்சி: 90.9%

   

  கோல் அடித்த விதம்

   

  பிரேசில்

  1.ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் பிரேசிலின் லூயிஸ் கஸ்டவோ கொடுத்த பாûஸ நெய்மர் சிரமமின்றி வலைக்குள் செலுத்தினார்.

  2.டேவிட் லூயிஸிடம் இருந்து பெற்ற பாûஸ கேமரூனின் பின்களத்தை உடைத்தெறிந்து கோலாக மாற்றினார் நெய்மர். (நிமிடம்: 34)

  3.டேவில் லூயிஸ் கொடுத்த கிராûஸ தலையால் முட்டி கோல் அடித்தார் ஃப்ரெட். (நிமிடம்:49)

  4. பிரேசில் வீரர்களின் துல்லிய பாஸ்களின் உதவியுடன் 84ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார் ஃபெர்னாண்டினோ.

   

  கேமரூன்

   

  1.பிரேசிலின் ஆல்வ்ஸிடம் இருந்து பந்தை சாதுர்யமாக ஏமாற்றிய கேமரூனின் நியோம், கோல் கம்பத்துக்கு அருகில் இருந்த ஜோயல் மேடிப்பிடம் கொடுக்க அதை அவர் அழகாக கோலாக்கினார். (நிமிடம்:26)

   

   

  நெய்மரை கீழே தள்ளி விட்ட நியோம்

   

  நெய்மரை எப்படியாவது கோல் அடிக்க விடாமல் தடுத்தாக வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் கேமரூன் வீரர்கள். முதல்பாதியின்போது கேமரூன் அணியின் ஆலன் நியோம், நெய்மரை வேண்டுமென்றே முதுகில் கை வைத்து கீழே தள்ளி விட்டார். இதில் நெய்மர் எல்லைக் கோட்டுக்கு அப்பால் சென்று விழுந்தார். அப்போது பந்தைப் பறிப்பது தொடர்பான எந்த மோதலும் நிகழவில்லை. இதனால் நெய்மர் ஆச்சரியமடைந்தார். பின் நடுவர் தலையிட்டு சூழலை சகஜமாக்கினார். இருப்பினும் நியோமுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. எழுந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய நெய்மரிடம், நியோம் சமாதானம் அடைய முயன்றார். நெய்மர் அவரது முகத்தைப் பார்க்க மறுத்து அந்த இடத்தைக் கடந்து சென்றார்.

   

  கோல்டன் பூட் விருதை நோக்கி...

   

  1.நெய்மர் (பிரேசில்) - 4 கோல்கள்

  2.தாமஸ் முல்லர் (ஜெர்மனி),

  ஆர்ஜென் ராபென் (நெதர்லாந்து),

  ராபின் வேன் பெர்ஸி (நெதர்லாந்து),

  எனெர் வேலன்சியா (ஈகுவேடார்),

  கரீம் பென்ஸிமா (ஃபிரான்ஸ்) - 3 கோல்கள்

   

  எங்கெங்கு நோக்கினும் மஞ்சள்

  ஆறாவது முறையாக உலகக் கோப்பை வெல்ல காத்திருக்கும் பிரேசில் அணிக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக ஆதரவு அளித்து வருகின்றனர். பிரேசில் - கேமரூன் மோதிய ஆட்டத்தைக் காண பிரேசிலியாவில் உள்ள தேசிய மைதானத்துக்கு 69,000 பேர் வந்திருந்தனர்.

  இதில் பெரும்பான்மையோர் பிரேசில் ரசிகர்களே. அவர்கள் அனைவரும் பிரேசிலின் சீருடையான மஞ்சள் உடையுடன் வந்திருந்தால் மைதானம் முழுவதுமே மஞ்சள் மயமாகக் காட்சியளித்தது.

   

  ஆஃப் சைடு...

   

  * இந்த உலகக் கோப்பையின் 100-வது கோலை அடித்தவர் பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர்.

  * ஜெர்மனிக்கு அடுத்தபடியாக பிரேசில் உலகக் கோப்பையில் 100 ஆட்டங்களில் பங்கேற்று, 217 கோல்களை அடித்துள்ளது.

  * 2014 உலகக் கோப்பையில் மாற்று வீரராகக் களமிறங்கியவர்கள் அடித்த கோல்களின் எண்ணிக்கை 21.

  * 10ஆம் எண் பனியன் அணிந்த வீரர்கள்தான் இம்முறை அதிக கோல்கள் (20) அடித்துள்ளனர்.

  * பிரேசில் அணிக்காக 53 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள நெய்மர் 32 கோல்களை அடித்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் 3 ஆட்டங்களின் மூலம் 4 கோல்களை அடித்து பீலேவின் சாதனையை சமன் செய்தார்.

   

   

  இதுதான் எங்களின் சிறந்த ஆட்டம். கோல்களின் கணக்கை வைத்து அப்படிச் சொல்லவில்லை. நாங்கள் விரும்பியபடி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்ததை வைத்து சொல்கிறேன். எங்கள் கனவு நனவாகும் தருணத்தை நோக்கி சரியான பாதையில் செல்கிறோம்.

  நெய்மர், பிரேசில்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai