சுடச்சுட

    

    விம்பிள்டன் : 2-வது சுற்றில் ஃபெடரர், நடால், செரீனா, ஷரபோவா

    By dn  |   Published on : 25th June 2014 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    wimbelton

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், நடால், வாவ்ரிங்கா முன்னேறினர். மகளிர் பிரிவில் செரீனா மற்றும் ஷரபோவா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    புல் தரையில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் தொடரான இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஃபெடரர், இத்தாலியைச் சேர்ந்த பாலோ லாரென்ஸியை எதிர்கொண்டார். எட்டாவது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள ஃபெடரர் 6-1, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

    நடால், வாவ்ரிங்கா முன்னேற்றம்:

    போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள நடால், ஸ்லோவேகியாவின் மார்டின் கிளிசனை 4-6, 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் நடால், செக் குடியரசின் லூகால் ரசாலை எதிர்கொள்கிறார். கடந்தமுறை ரசோலிடம் அடைந்த தோல்விக்கு நடால் பழி தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற வாவ்ரிங்கா, போர்ச்சுகலின் ஜாவோ செளசாவை 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

    ஷரபோவா வெற்றி: பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ரஷியாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா "வைல்டு கார்டு' மூலம் வாய்ப்பு பெற்ற பிரிட்டனைச் சேர்ந்த சமந்தா முர்ரேவை எதிர் கொண்டார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-1, 6-0 என ஷரபோவா எளிதில் வெற்றி பெற்றார்.

    தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா, சக வீராங்கனையான அனா டேடிஷ்விலியை 6-1, 6-2 என நேர் செட்டில் வீழ்த்தினார்.

    மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா ருமேனியாவின் ஆண்ட்ரியா மிதுவை வீழ்த்தினார்.

    சோம்தேவ் தோல்வி: இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள போலந்தின் ஜெர்ஸி ஜனோவிச்சை எதிர்கொண்டார். மூன்று மணி நேரம் போராடியும் சோம்தேவ் தோல்வியடைந்தார். ஐந்து செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 3-6, 6-3, 3-6 என சோம்தேவ் வெற்றி வாய்ப்பை இழந்தார். சோம்தேவ் கடைசியாக விளையாடிய 13 போட்டிகளில் 10-வது முறையாக முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். இந்த சீசனின் மூன்று கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் முதல் சுற்றிலேயே அவர் நடையைக் கட்டியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai