சுடச்சுட

  

  இத்தாலி வீரரின் தோள்பட்டையைக் கடித்த செளரஸூக்கு 9 ஆட்டங்கள், நான்கு மாதம் தடை

  By dn  |   Published on : 26th June 2014 11:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  suar

  உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்று லீக் ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செலினியின் தோள்பட்டையைக் கடித்த உருகுவே வீரர் செளரஸூக்கு ஒன்பது சர்வதேச ஆட்டங்கள் மற்றும் நான்கு மாதங்கள் கால்பந்து விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  உலகக் கோப்பையில், கால்பந்தின் பெருமையைக் கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட செளரஸூக்கு தடை விதிக்க வேண்டும் என உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) ஒழுங்கு நடவடிக்கைக் குழு வியாழக்கிழமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

  'கோடிக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை மட்டுமல்ல வேறு எந்த களத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது' என, ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கிளாடியோ சல்சர் தெரிவித்தார்.

  செளரஸ் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனால், வரும் சனிக்கிழமை கொலம்பியா - உருகுவே அணிகள் மோதும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செளரஸ் பங்கேற்க முடியாது. அதோடு, உலகக் கோப்பை நடைபெறும் மைதானங்களில் அவர் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.67 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட தகவல் வியாழக்கிழமை சௌரஸூக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாக ஃபிஃபா அறிக்கை விடுத்துள்ளது.

  சம்பவ விவரம்: கடந்த செவ்வாய்க்கிழமை குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இத்தாலி - உருகுவே அணிகள் மோதிய ஆட்டத்தின்போதுதான் செளரஸ், செலினியின் தோள்பட்டையக் கடித்தார். ஆனால், இதை நடுவர் கவனிக்கவில்லை. எனவே, செளரஸூக்கு மஞ்சள் அட்டையோ, சிவப்பு அட்டையோ காண்பிக்கப்படவில்லை. ஆனால், ரீப்ளேயில் தோள்பட்டையைக் கடிப்பதும், செலினி கீழே விழுவதும் தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து சௌரஸூக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. சமூக இணையதளங்களில் அவரை விலங்கினங்களுடன் ஒப்பிட்டு சித்திரங்கள் தீட்டப்பட்டன. சில பத்திரிகைகள் கேலி செய்தும், விமர்சித்தும் படங்கள் வெளியிட்டன.

  தடையால் தடைபடும் ஆட்டங்கள்

  கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து அமலாகும் இந்த தடை அக்டோபர் மாத இறுதியில்தான் முடிவுக்கு வரும். அதுவரை அவர் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் ஆட்டங்கள் குறித்த விவரம்.

  *இந்த உலகக் கோப்பையில் உருகுவே அணி பங்கேற்கும் அனைத்து ஆட்டங்களிலும் (காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்று முன்னேறும் பட்சத்தில்) பங்கேற்க முடியாது.

  *அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கோபா அமெரிக்கா தொடரிலும் ஆட முடியாது.

  * தற்போது லிவர்புல் அணியில் உள்ள செளரஸ், சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதல் மூன்று ஆட்டங்களில் களமிறங்க முடியாது.

  * நான்கு மாதங்களுக்கு தடை நீடிப்பதால் இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியின் 9 ஆட்டங்களில் பங்கேற்க இயலாது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai