சுடச்சுட

  
  srinivasan

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக சீனிவாசன் முறைப்படி நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில், ஐசிசியில் இடம்பெற்றுள்ள 52 பேர் கொண்ட குழு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சீனிவாசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  ஐசிசியின் விதிமுறைகள் சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்டன. அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சர்வதேச கிரிகெட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமீபத்தில் ஐசிசியின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சில கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

  தீர்மானம் வெற்றி: இருப்பினும், சிங்கப்பூரில் கடந்த ஃபிப்ரவரியில் நடைபெற்ற ஐசிசியின் செயற்குழுக் கூட்டத்தில், திருத்தப்பட்ட விதிமுறைகளை அங்கீகரிப்பது தொடர்பான தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சீனிவாசன் ஐசிசி தலைவர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமானது.

  சூதாட்டச் சிக்கல்: இருப்பினும், ஆறாவது ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட விசாரணை முடியும் வரை பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஐசிசி தலைவர் பதவிக்கு பிசிசிஐ சார்பில் சீனிவாசன் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

  இதனால், சீனிவாசன் ஐசிசி தலைவர் ஆவதில் இருந்த சிக்கல் களையப்பட்டது.

  இந்த புதிய பொறுப்பு குறித்து சீனிவாசன் தெரிவித்ததாவது:

  ஐசிசியின் தலைவராக உறுதி செய்யப்பட்டது பெருமை அளிக்கிறது. களம் மற்றும் களத்துக்கு வெளியே கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். கிரிக்கெட்டின் மகத்துவம் குறையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மேலும் வளர்ச்சியடைய ஐசிசி முக்கிய பங்காற்றும். சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் சில வலுவான அணிகள் வர வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு அவரவர் நாட்டில் உள்ள திறமையான வீரர்களைக் கண்டறிந்து, இணைந்து பணியாற்ற வேண்டும்.

  ஆலன் ஐசக்குக்கு பாராட்டு: தற்போதைய ஐசிசி தலைவர் ஆலன் ஐசக்கின் பணி பாராட்டுக்குரியது. தனது இரண்டாண்டு பதவிக் காலத்தில் கிரிக்கெட்டின் மூன்று விதமான ஆட்டங்களும் சிறப்பாக நடைபெற பல வழிமுறைகளை வகுத்திருந்தார் என சீனிவாசன் தெரிவித்தார்.

  எந்தத் தவறும் செய்யவில்லை: ஐசிசி தலைவர் பதவிக்கு நீங்கள் பொருத்தமானவர்தானா? என்ற கேள்விக்கு "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதில் எனது மனசாட்சி தெளிவாக உள்ளது. அதனதன் வழியில் விசாரணைகள் நடக்கட்டும். ஒருநாள் முடிவு வெளியாகும்' என்று சீனிவாசன் பதிலளித்தார்.

   

  11-வது ஐசிசி பிரசிடென்ட்

  மெல்போர்னில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் மேலும் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ஐசிசியின் 11-வது பிரசிடென்டாக வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் முஸ்தஃபா கமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  "இது வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நாள். பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த நாளில்தான் வங்கதேசம் டெஸ்ட் ஆடும் அணியாக அங்கீகரிக்கப்பட்டது. இன்று வங்கதேசத்தைச் சேர்ந்த நான் ஐசிசி பிரசிடென்ட் பதவியைப் பெற்றுள்ளேன். அடுத்த 12 ஆண்டுகள் ஐசிசி வாரியம் மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்' என முஸ்தஃபா கமால் தெரிவித்தார்.

  அதோடு, ஐசிசியின் செயல் குழுவின் தலைவராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் வேலி எட்வர்ட்ஸூம், ஐசிசியின் நிர்வாக மற்றும் வர்த்தக விவகார கமிட்டி தலைவராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் கிளெஸ் கிளார்க்கும் செயல்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

   

  சீனிவாசனுக்கு பிசிசிஐ பாராட்டு

  ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீனிவாசனுக்கு பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது. "2014 முதல் 2016 வரையிலான காலத்துக்கு ஐசிசியின் தலைவராக ஒருமனதாக தேர்வாகியுள்ள சீனிவாசனுக்கு வாழ்த்துகள். அவரது தேர்வு இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை அளிக்கிறது. இந்தியா உலக கிரிக்கெட்டுக்கு தலைமை ஏற்கவுள்ளது.

  கிரிக்கெட் கடும் சவாலை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் சீனிவாசனை விடுத்து அந்த பதவிக்கு வேறு யாரும் பொருத்தமானவராக இருக்க மாட்டர்' என, பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் அறிக்கை விடுத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai