சுடச்சுட

  
  football

  பிரேசில் அணிக்கு உண்மையான அக்னி பரீட்சை தொடங்கி உள்ளது. நாக் அவுட் சுற்று எனப்படும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அந்த அணி சிலியுடன் சனிக்கிழமை இரவு மோதுகிறது.

  லீக் சுற்றைப் பொருத்தவரை, ஒரு ஆட்டத்தில் சோர்வைக் கண்டாலும் அடுத்த ஆட்டத்தில் சுதாரித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட முடியும். ஆனால், நாக் அவுட் சுற்று என்பது வென்றால் மட்டுமே உலகக் கோப்பையில் வாழ்வு என்ற சூழல். அதனால், 4 கோல்களை அடித்து நட்சத்திரத்தைவிட பிரகாசமான ஒளியை உமிழ்ந்து வரும் நெய்மர், இந்த ஆட்டத்தில் எப்படி பலனளிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அந்நாட்டு ரசிகர்களின் கனவு தொடரும்.

  சிலியுடன் இதற்கு முன்னர், 4 முறை உலகக் கோப்பையில் பிரேசில் மோதியுள்ளது. அனைத்திலும் பிரேசிலே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக, 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆனால், "இதுவரை தொடர்ந்தகதை இம்முறை நிகழும் என்று பிரேசிலியர்கள் எண்ண வேண்டாம்' என்று சிலியின் நடுகள வீரர் வில்லியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  "தற்போதையை காலத்தில் கால்பந்து பெரும் மாறுதலடைந்து விட்டது. சிலியை இதற்கு முன்னர் பிரேசில் வீழ்த்தியது என்னவோ உண்மைதான். ஆனால், அதனை நாங்கள் கருத்தில்கொள்ளவில்லை. ஒவ்வொரு ஆட்டத்துக்கு ஒவ்வொரு கதை உண்டு. சிலி அணி தற்போது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. நிச்சயமாக அடுத்த சுற்றுக்கு நாங்கள் முன்னேறுவோம்' என்றும் வில்லியன் தெரிவித்துள்ளார்.

  இத்தொடரின் லீக் சுற்றில் பிரேசில் அணியைவிட, நடப்புச் சாம்பியனான ஸ்பெயினை வெளியில் அனுப்பிய சிலியின் செயல்பாடு பாராட்டும் வகையில் உள்ளதாக கால்பந்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.

  வரலாறு திரும்புமா? 1962ஆம் ஆண்டுக்குப் பின், உலகக் கோப்பை தொடரில் இதுவரை காலிறுதிச் சுற்றுக்கு சிலியினால் முன்னேற முடியவில்லை. இந்த வரலாற்றை மாற்றி அமைக்க சிலி வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்வர் என்பதில் மாற்றமில்லை.

  "சாதனையை ஏற்படுத்துவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதனால், பிரேசிலுக்கு உள்ள நெருக்கடியை எங்களுக்கு சாதகமாக்குவோம். அவர்கள் செய்யும் தவறை, நாங்கள் பயன்படுத்திக் கொள்வோமó' என சிலியின் ஷன்செஸ் தெரிவித்தார்.

  இவர் பார்சிலினோ கிளப் அணியில் விளையாடி வருகிறார். அதே அணியில் உள்ள நெய்மர், ஆல்வஸ் ஆகியோர் பிரேசிலைச் சேர்ந்தவர்கள். அதனால், அவர்களின் பலம், பலவீனத்தை ஷன்செஸ் நன்கு அறிந்து வைத்திருப்பார். ஆட்டத்தில் எந்த அணி வீரர்களின் திட்டம் அதிகம் செயலுக்கு வருகிறதோ அந்த அணி வெற்றி பெறும் என்பதால் இந்த ஆட்டத்தின் வியூகங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

   

  கொலம்பியா - உருகுவே

  காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உருகுவே அணியும், வலுவான கொலம்பியா அணியும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோதுகின்றன. உருகுவேயில் முன்கள வீரரான லூயிஸ் செüரஸ் இல்லாதது அணிக்கு பெரும் பலவீனம். குரூப் பிரிவில் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்த கொலம்பியா அணியின் மீது இம்முறை மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதனால், ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் தூண்டலை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவுக்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

   

  இந்திய சிறுவனுக்கு கெளரவம்

  கொலம்பியா-உருகுவே அணிகளுக்கு இடையேயான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் வீரர்களை மைதானத்துக்கு அழைத்து வரும் சிறுவர்களில் இந்தியாவைச் சேர்ந்த அபிராஜ் சிங் இடம் பிடித்துள்ளார்.

  இந்த வாய்ப்பைப் பெற்ற அபிராஜ் சிங் கூறுகையயில், "கால்பந்து ஆட்டத்தை நான் நேசிக்கிறேன். உலகின் சிறந்த அணி வீரர்களுடன் மைதானத்துக்குள் செல்வது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. நான் அதிர்ஷ்டசாலி. இந்த வாய்ப்பை அளித்த மெக்டொனால்டுக்கு நன்றி' என்றார்.உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்ற சர்வதேச அளவிலான 1400 சிறுவர்களில் ஒரே ஒரு இந்திய சிறுவர் அபிராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  இதற்கு முன் பிரேசில்-சிலி மோதிய உலகக் கோப்பை ஆட்டங்கள்

   

  1962- அரையிறுதி: பிரேசில் வெற்றி; 4-2

  1989- தகுதிச்சுற்று: பிரேசில் வெற்றி; 3-1

  1998- குரூப்-16: பிரேசில் வெற்றி; 4-1

  2010- குரூப்-16: பிரேசில் வெற்றி; 3-0

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai