சுடச்சுட

  
  tennis

  இவ்வாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபனை வென்ற சீனாவின் லீ நா, விம்பிள்டன் போட்டியில் 3ஆவது சுற்றிலேயே வெளியேறி பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.

  பிரிட்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் லீ நாவும், செக் குடியரசின் ஸலவோவா ஸ்டிரைகோவாவும் மோதினர். தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள லீ நாவுக்கு இந்த ஆட்டம் கடும் சவாலாக இருந்தது. முதல் செட்டை வெல்ல இருவரிடையேயும் கடும் போராட்டம் நிலவியது. டை பிரேக்கருக்குப் பின் அந்த செட்டை 7-6 (5) என்ற கணக்கில் ஸ்டிரைகோவா வென்றார்.

  இதனால், அடுத்த செட்டில் லீ நா சுதாரித்தார். ஒரு கட்டத்தில் முன்னணியில் இருந்த அவர் இறுதியில் அந்த செட்டையும் 7-6 (5) என்ற கணக்கில் இழந்து சோகத்துடன் வெளியேறினார்.

  வெற்றிக்குப் பின் ஸ்டிரைகோவா கூறுகையில், "ஒரு சிறந்த ஆட்டத்தை விளையாடியுள்ளேன். என்னால் முடியும் என்று நம்பினேன்' என்றார்.

  இவர் தனது அடுத்த சுற்றில் டென்மார்கின் வோஸ்னியாக்கியை எதிர்கொள்கிறார்.

  வோஸ்னியாக்கி தனது 3ஆவது சுற்றில் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் குரோஷியா வீராங்கனையை வீழ்த்தினார்.

  மற்றொரு ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலேப் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் சுரென்கோவை தோற்கடித்தார்.

  பெருமை சேர்த்த ஆண்டர்சன்!

  கடந்த 14 ஆண்டுகளில் விம்பிள்டன் 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை கெவின் ஆண்டர்சன் பெற்றார்.

  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இவர் இத்தாலியின் ஃபோக்னியுடன் மோதினார். இருவருமே பலமான வீரர்கள் என்பதால் ஆட்டம் 5 செட் வரை சென்றது. இறுதியில் 4-6, 6-4, 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஆண்டர்சன் வென்றார். தனது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஆண்டர்சன், 4ஆவது சுற்றில் நடப்புச் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை எதிர்கொள்கிறார்.

  ஜோகோவிச் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஃபிரான்ஸின் சைமனை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தின்போது ஜோகோவிச் கீழே விழுந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என்று அஞ்சப்படுகிறது. அதனால், 4ஆவது சுற்றில் அவரின் ஆட்டத்துக்கு பின்னடைவு ஏற்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  "கீழே விழுந்தபோது கடுமையான வலியை உணர்ந்தேன். இருப்பினும், இது மோசமான விளைவை ஏற்படுத்தாது என்று கருதுகிறேன். எனக்கு 2 நாள்கள் ஓய்வு உள்ளது. அதனால், சிறிது ஓய்வு எடுத்து அடுத்த சுற்றுக்கு புத்துணர்வுடன் திரும்புவேன்' என்று ஜோகோவிச் தெரிவித்தார்.

  இவர், தனது 4ஆவது சுற்றில் ஃபிரான்ஸின் சோங்கோவை எதிர்கொள்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai