சுடச்சுட

  

  உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், நெதர்லாந்து, மெக்ஸிகோ அணிகள் மோதவுள்ளன. ஃபோர்டெல்ஸாவில் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

  நடப்பு சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி இந்த உலகக் கோப்பையில் கால்பந்து உலகை தன் மீது திரும்பிப் பார்க்க வைத்தது நெதர்லாந்து அணி. ஸ்பெயினுக்கு எதிராக பறந்து தலையால் முட்டி கோல் அடித்த வேன் பெர்ஸி, இந்த உலகக் கோப்பையில் சிறந்த கோல் அடித்தவர் வரிசையில் இடம்பெற்றுள்ள ராபென் ஆகியோர் நெதர்லாந்து அணியின் முன்களத்துக்கு வலு சேர்க்கின்றனர்.

  லாங் ரேஞ்ச் பாஸ் மற்றும் தாக்குதல் ஆட்டம் அந்த அணியின் பலம்.

  மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் வேன் காலின் வழிகாட்டுதலின் கீழ் நெதர்லாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குரூப் சுற்றில் 3 ஆட்டங்களின் மூலம் 10 கோல்களை அடித்துள்ளது. இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த அணிகள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  பட்டம் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்படும் அணிகளில் நெதர்லாந்தை தவிர்த்து விட முடியாது. எனவே, மெக்ஸிகோ அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

  மெக்ஸிகோவும் சளைத்த அணி அல்ல. குரூப் ஏ சுற்றில் இடம்பெற்றிருந்த மெக்ஸிகோ அணி கேமரூன், குரோஷியாவை வீழ்த்தி பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது. மூன்று ஆட்டங்களிலும் சேர்த்து எதிரணிகளை ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க வாய்ப்பளித்துள்ளது.

  இதற்கு முழு முதல் காரணம் அந்த அணியின் கோல் கீப்பர் கிலெர்மோ ஒசாவ்.

  இதுவரையிலான ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட கோல் கீப்பர் என்ற பெருமையை ஒசாவ் பெற்றுள்ளார். நெதர்லாந்து முன்களத்துக்கும் அவர் சவால் அளிக்கலாம்.

  அவர் கூறுகையில், "நெதர்லாந்து அணி ஒரு கணினி போல விளையாடுகிறது. அந்த அணியில் திறமை மற்றும் விவேகம் நிறைந்த வீரர்கள் ஏராளமாக உள்ளனர். எனவே, ஆர்ஜென் ராபென் மீது மட்டும் தனியாக கவனம் செலுத்தப் போவதில்லை. ஒட்டுமொத்த வீரர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

  நெதர்லாந்து அணியை வீழ்த்தி விட்டால் அன்னிய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் முதன் முறையாக உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முன்னேற மெக்ஸிகோவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.

  கோஸ்டா ரிகா - கிரேக்கம் மோதல்: ரெசிஃபே நகரில் திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் கோஸ்டா ரிகா- கிரேக்கம் அணிகள் மோதவுள்ளன.

  குரூப் டி பிரிவில் இடம்பெற்றிருந்த கோஸ்டா ரிகா அணி உருகுவே, இத்தாலியை வீழ்த்தி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்து 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

  ஆனால், தட்டுத் தடுமாறி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது கிரேக்கம். மூன்று ஆட்டங்களில் 2 கோல்கள் மட்டுமே அடித்து இந்த சுற்றுக்குள் நுழைந்துள்ள கிரேக்கத்தை, இந்த உலகக் கோப்பையில் சிறந்த அணியாக உருவெடுத்துள்ள கோஸ்டா ரிகா அணி எளிதில் வீழ்த்த வாய்ப்புள்ளது.

   

  ஆட்டங்கள்

   

  ஜூன் 29: நெதர்லாந்து - மெக்ஸிகோ, இரவு 9.30

  ஜூன் 30: கிரேக்கம் - கோஸ்டா ரிகா, அதிகாலை 1.30

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai