சுடச்சுட

  

  தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஃபிரான்ஸின் ஏலிஸ் கார்னெட்டிடம் தோல்வியடைந்ததன் மூலம், ரஷியாவின் மரியா ஷரபோவாவுக்கு விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு கனிந்துள்ளது.

  லண்டனில் இந்த ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் கார்னெட்டிடம் 6-1, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் ஐந்து முறை விம்பிள்டன் பட்டம் வென்ற செரீனா தோல்வியடைந்தார்.

  இந்த சீசனில் மூன்றாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் செரீனா பட்டம் வெல்லாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனைத் தொடர்ந்து விம்பிள்டனிலும் செரீனா தொடக்கத்திலேயே வெளியேறி இருப்பது ஷரபோவாவுக்கு பட்டம் வெல்வதற்கு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது.

  பிரெஞ்சு ஓபனில் செரீனா இல்லாததை சாதகமாக்கி பட்டம் வென்றதைப் போல விம்பிள்டனிலும் ஷரபோவா சாதிக்க வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

  2004-இல் தனக்கு 17 வயது ஆனபோது செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஷரபோவா. அதன்பின் பத்து ஆண்டுகள் கழித்து தற்போது விம்பிள்டன் கோப்பையை கையில் ஏந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கேற்ப, ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற மற்றொரு முன்னணி வீராங்கனையான லீ நாவும் தொடக்கத்திலேயே தோல்வியடைந்தது ஷரபோவாவுக்கு மற்றுமொரு சாதக அம்சம்.

  திங்கள்கிழமை நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஷரபோவா, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொள்கிறார். இதில் சாதித்து முன்னேறும் பட்சத்தில் இந்த சீசனில் இரண்டாவது கிராண்ட்ஸ்லாமை வெல்ல ஷரபோவாவுக்கு வாய்ப்புள்ளது.

   

  மீண்டு வருவேன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தொடர்ந்து தோல்வியடைவது குறித்து செரீனா கூறுகையில் "ஆஸ்திரேலிய ஓபனில் என்னால் ஆட முடியவில்லை. பிரெஞ்சு ஓபனில் மோசமாக ஆடினேன். இங்கு (விம்பிள்டனில்) சிறப்பாக ஆடி வருவதாக நினைத்தேன். இந்த தொடருக்கு சிறந்த முறையில் தயாராகி இருந்தேன். ஆனால், எங்கோ தவறு நேர்ந்து விட்டது. என் ஆட்ட வீடியோக்களை ஆய்வு செய்து எங்கு தவறு நடந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சில சமயங்களில் கடினமாக முயற்சி செய்தும், அந்த நாள் நமக்கான நாளாக அமையாமல் போய் விடும். மற்றுமொரு நாள் சாதிக்கலாம். அதற்காக காத்திருக்கிறேன்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai