சுடச்சுட

  

  தோனியின் விருப்பப்படி பேட்ஸ்மேன்களுக்கு திராவிட் அறிவுரை

  By dn  |   Published on : 29th June 2014 11:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dravid

  கேப்டன் தோனி கேட்டுக் கொண்டதன் பேரில், ராகுல் திராவிட் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பேட்ஸ்மென்களுடன் கலந்துரையாடி அறிவுரை வழங்குவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூலை 9-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பேட்ஸ்மேன்களில் முரளி விஜய், ஷிகர் தவன், புஜாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே இவர்களில் யாரும் இங்கிலாந்து ஆடுகளங்களில் இதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை.

  கடந்த 2011-ம் ஆண்டு சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. அப்போது திராவிட் மட்டுமே 3 சதங்கள் அடித்து ஆறுதல் அளித்தார். எனவே, திராவிட் தற்போதைய வீரர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என கேப்டன் தோனி விரும்பியதாகத் தெரிகிறது.

  இதுகுறித்து பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தது:

  பிசிசிஐ சார்பில் ராகுல் திராவிட்டுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இருப்பினும், இங்கிலாந்து மண்ணில் அவர் படைத்த சாதனையைக் கருத்தில் கொண்டு முதல் டெஸ்டுக்கு முன்னதாக வீரர்களுடன் திராவிட் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தோனியும், பயிற்சியாளர் ஃபிளட்சரும் விரும்பினர். நாட்டிங்ஹாமில் முதல் டெஸ்ட் தொடங்கும் முன் இந்திய அணியுடன் நேரத்தை செலவிடுவதற்கு திராவிட்டும் சம்மதம் தெரிவித்து விட்டார். அவர் வீரர்களுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார். இங்கிலாந்து மண்ணில் பல சாதனைகள் படைத்த திராவிட்டை விட வேறு யாரும் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிட முடியாது என சஞ்சய் படேல் தெரிவித்தார்.

  திராவிட் அடித்த 36 சதங்களில் ஆறு சதங்கள் இங்கிலாந்து மண்ணில் அடிக்கப்பட்டவை. அவர் இங்கிலாந்தில் 13 டெஸ்ட் போட்டிகளின் மூலம் 1,376 ரன்களைக் குவித்துள்ளார்.

  ஒலிம்பிக் வீரர்கள் தேடல் குழுவில் திராவிட்: 2016 மற்றும் 2020-இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லவல்ல திறமையான வீரர்களை அடையாளம் காணும் முயற்சியை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடங்கவுள்ளது. வீரர்கள் தேடலுக்கான பணியில் நிபுணர் குழு ஈடுபட உள்ளது. அதில் பிரபல விளையாட்டு வீரர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள் இடம்பெறுவர். அந்த குழுவில் திராவிட்டும் இடம்பெற வேண்டும் என விளையாட்டு அமைச்சகம் விரும்புவதாகவும், அதற்கு திராவிட் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai