Enable Javscript for better performance
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிசிசிஐ கட்டுப்பட வேண்டும்: அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிசிசிஐ கட்டுப்பட வேண்டும்: அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் கருத்து

    By dn  |   Published on : 27th March 2014 11:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Srinivasan

    பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்; அவருக்குப் பதிலாக காவஸ்கரை தலைவராக நியமிக்கலாம்; சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை "சஸ்பெண்ட்' செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த பரிந்துரையை பிசிசிஐ முன்னாள் அதிகாரிகள் மட்டுமல்லாது தற்போதைய அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்களும் ஆதரித்துள்ளனர்.

    பிசிசிஐ துணைத் தலைவர் ரவி சாவந்த்: பிசிசிஐ தலைவராக இருப்பவரையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்குவதற்கு அனுமதி அளித்ததே முரண்பாடானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க சீனிவாசனை அனுமதித்ததுதான் முதல் தவறு. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. நீதிமன்றம் என்ன உத்தரவு அளிக்கிறதோ அதற்கு பிசிசிஐ கட்டுப்படும். அதைத் தவிர வேறு வழியில்லை. வெள்ளிக்கிழமை தீர்ப்பு வருவதால் அதற்குள் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    தலைவர் பதவியை நிரப்புவதற்கென பிசிசிஐ செயல் திட்டத்தில் சில விதிமுறைகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அந்த விதியுடன் பொருந்துமா அல்லது அந்த விதிமுறைக்கு அப்பாற்பட்டதாக இருக்குமா எனத் தெரியவில்லை.

     

    பிசிசிஐ முன்னாள் செயலர் நிரஞ்சன் ஷா: இது பிசிசிஐயின் மோசமான நாள். விஷயம் கைமீறிப் போய் விட்டது. இது கிரிக்கெட்டை வெகுவாக பாதிக்கும். கிரிக்கெட் மீதான களங்கத்தைத் துடைக்க வேண்டுமானால், உச்ச நீதிமன்றம் கண்காணிப்பது சரியாகவே இருக்கும். நீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் அதற்கு பிசிசிஐ கட்டுப்பட வேண்டும். பிசிசிஐ உடனடியாக துணிச்சலான முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

    இரு அணிகளை சஸ்பெண்ட் செய்து விட்டால் ஆறு அணிகளுடன் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்.

    பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா: உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்றம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் மீது தீர்ப்பு வந்த பின் விவாதம் நடத்தலாம். எதுவாக இருந்தாலும் தீர்ப்புக்குப் பின் கருத்துத் தெரிவிப்பதே உத்தமம்.

     

    முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே: முதலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரட்டும். நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பின்னர், சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டிய அடிப்படையில் நீதிமன்றத்தின் முடிவை ஏற்க வேண்டும்.

     

    முன்னாள் கேப்டன் திராவிட்: இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், பரிந்துரை குறித்து எதுவும் தெரியாது என்பதால் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. தீர்ப்புக்கு நாம் காத்திருக்க வேண்டும். சில நேரத்தில் வாழ்க்கையில் நடக்கக் கூடாத விஷயங்கள் நடந்து விடுகின்றன. ஆனால், நடந்த எல்லாமே தவறு என்று சொல்ல முடியாது.

     

    முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்: நீதிமன்றம்தான் முதன்மையானது. நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் இந்த கேள்வியை (சீனிவாசன் பதவி வில வேண்டுமா, ஒதுங்கி இருக்க வேண்டுமா?) சில சமயங்களில் "கூக்ளி' "பெüன்ஸர்' என பல வழிகளில் கேட்கிறீர்கள். நீதிமன்றத்தில் இருக்கும் இந்த விவகாரத்தில் வேறு எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.

     

    ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி: சூதாட்ட விவகாரம் முடியும் வரை ஐபிஎல் போட்டியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சசாங்க் மனோகர் தெரிவித்த கருத்தை ஏற்கிறேன். சூதாட்ட விவகாரம் காரணமாக ஐபிஎல் மீதான நம்பிக்கையை மக்கள் சிறிது சிறிதாக இழந்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai