Enable Javscript for better performance
சீனிவாசனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?- Dinamani

சுடச்சுட

    
    srinivasan

    பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து இன்னும் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதை சட்ட ரீதியாக அணுகுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

    ஐபிஎல் சூதாட்ட விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமெனில் சீனிவாசனை பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகச் சொல்ல வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் நீக்க வேண்டியது இருக்கும் என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. பிசிசிஐ துணைத் தலைவர்கள் சிவ்லால் யாதவ், ரவி சாவந்த், சிட்ரக் மித்ரா ஆகியோர் சீனிவாசன் உடனடியாக பதவி விலக வேண்டும் என வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தனர். தேவைப்பட்டால் தலைவர் பதவி சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சிவ்லால் குறிப்பிட்டார்.

    கிரிக் இன்ஃபோ இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் 90 சதவீதம் பேர் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, பதவி விலகுவதைத் தவிர வேறு சீனிவாசனுக்கு வேறு வழியில்லை. ஆனால், அவர் நீதிமன்ற உத்தரவு குறித்து தொடர்ந்து மெüனம் சாதித்து வருகிறார்

    சென்னையில் உள்ள சீனிவாசனை அவரது வழக்குரைஞர் ராமன் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்புக்குப் பின் நிருபர்களை சந்தித்த ராமன், "சீனிவாசன் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார். எனவேதான் அவரை சந்தித்துப் பேசினேன். இது மரியாதை நிமித்த சந்திப்பு' என்றார்.

    சூதாட்ட வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. எனவே நீதிமன்றம் தெரிவிக்கும் உத்தரவைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கையில் அவர் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தன் பயணத்தை பாதியில் முடித்து விட்டு நாடு திரும்பியுள்ளார். அவர் வியாழக்கிழமை சீனிவாசனை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

    ஒருவேளை சீனிவாசன் பதவி விலகினால், அடுத்த 15 நாள்களில் பிசிசிஐ செயலர் தலைமையில் சிறப்புக் கூட்டத்தை நடத்தி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஐபிஎல் போட்டியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

    ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் நிலவும் சமீபத்திய சூழல் குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் சஷாங்க் மனோகர் கூறியது:

    ஐபிஎல் போட்டியைச் சுற்றிலும் ஏற்கனவே களங்கம் படிந்துள்ளது. தற்போதைய நிலவரம் அதை மேலும் அதிகரித்துள்ளது. விளையாட்டின் நேர்மை நிலைநிறுத்தப்பட்டு, மக்களின் நம்பிக்கையைப் பெறும் வரையிலும் ஏழாவது ஐபிஎல் போட்டியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பது என் கருத்து. லாபம், வருமானம் முக்கியமல்ல என்பதை பிசிசிஐ உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    ஐபிஎல் சூதாட்ட விவகாரம் ஆரம்பித்தபோதே இதுகுறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தேன். ஆனால், நடக்கவில்லை. சூதாட்டம் குறித்து சிபிஐ முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என மனோகர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai