Enable Javscript for better performance
டெஸ்ட்: கருப்பு வெள்ளை, ஒன்டே: கலர், டி-20: குறும்படம்- Dinamani

சுடச்சுட

  

  டெஸ்ட்: கருப்பு வெள்ளை, ஒன்டே: கலர், டி-20: குறும்படம்

  By தா.இரமேஷ்  |   Published on : 27th March 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  odi

  சந்திரனிடமிருந்து சூரியன் விடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. "டைம் இல்ல, நாலு நாலு ஓவர் வச்சுப்போம்' என சமரசம் ஏற்பட்டது. உள்ளூர் ஆட்டங்களில் டாஸ் வென்ற கேப்டன் பேட்டிங்கையே தேர்வு செய்வார் என்ற ஆகம விதிப்படி அவரது அணி முதலில் பேட் செய்தது. முதல் அணி பேட்டிங் முடிந்தாயிற்று. சூரியனும் மெல்ல மெல்ல மேற்கில் படுத்து விட்டது. அவசர அவசரமாக மற்றொரு அணி பேட் செய்தது. 3-வது ஓவர் முடிவதற்குள் இருட்டி விட்டது. பெüலர் ஓடி வருவது மட்டுமே பேட்ஸ்மேனுக்கு தெரிகிறது. பந்து தெரியவில்லை. கடைசியில் இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை டிராவில் முடிக்க சம்மதித்து, ஸ்டெம்பைப் பிடுங்கி விட்டு வீட்டுக்குத் திரும்பினர். அநேகமாக, பொட்டல் காட்டில் அந்தி சாயும் வேளைகளில் கிரிக்கெட் விளையாடியவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் பரிச்சயமாகி இருக்கலாம்.

  நேரம் வசப்படவில்லை எனில் கிடைத்த நேரத்தில் நமக்கேற்ப விதிகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்மவர்களின் இந்த ஓவர் குறைப்பு ஃபார்முலாதான், டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் ஆட்டமாகி, அதுவும் இன்று டி-20யாக சுருங்கியதற்கான முன்னோடியாக இருந்திருக்குமோ? இதுவும் நாளை 5-5 ஓவர் ஆட்டமாக மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய சமீபத்திய டி-20 ஆட்டம் 7 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது என்பது உள்பட பல ஆட்டங்களை அதற்கு உதாரணப்படுத்தலாம். சரி, அது கிடக்கட்டும்.

  கருப்பு வெள்ளை காலப் படத்துக்கும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருப்பதுபோல ஒரு பிரமை. கருப்பு வெள்ளை படங்கள் மலையேறிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் மீதான மவுசும் குறைந்து விட்டது. இல்லையே, இன்றும் டெஸ்ட் போட்டிகள் நடக்கத்தானே செய்கின்றன என சிலர் மறுக்கலாம். உண்மைதான், ஆனால், டி-20 ஆட்டத்தைக் காண கன்னத்தில் தேசியக் கொடியை வரைந்து டிக்கெட் கிடைக்காமல் மைதான வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள், அதே மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடக்கும்போது விரோதியுடன் கண் மோதுவதைத் தவிர்ப்பது போல நொடியில் கடந்து விடுகிறார்கள்தானே?

  கருப்பு வெள்ளை சினிமா காலத்தில்தான் டெஸ்ட் போட்டிகள் கோலோச்சின. பிராட்மேன் முதல் காவஸ்கர் வரை மெச்சப்பட்டனர். கருப்பு வெள்ளை சினிமா வண்ண உடை உடுத்துவதற்கும், கிரிக்கெட் தன் அடுத்த படைப்பை (ஒருநாள் ஆட்டம்) படைப்பதற்கும் சரியாகவே இருந்தது. (கால கட்டம் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். விஷயம் அதுவல்ல.) இரண்டாவது பிள்ளை பிறந்த பின் தனக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதாக முதல் பிள்ளை உணர்வதைப் போல ஒருநாள் ஆட்ட வரவுக்குப் பின், டெஸ்ட் போட்டி மீதான மோகம் குறைந்து விட்டது என்பதுதானே உண்மை.

  முடிவுக்காக 5 நாள்கள் காத்திருக்க வேண்டியதில்லை, வண்ண உடைகள், புதிய விதிமுறைகள், கொஞ்சம் அதிரடி என ஒருநாள் ஆட்டம் மெல்ல வளர்ந்த காலத்தில்தான் கிரிக்கெட் தன் ரசிகர்களை அதிவேகமாக அபிவிருத்தி செய்தது. இப்போது சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட பலர் பெயரெடுக்கத் தொடங்கி விட்டனர்.

  சொல்ல வந்த கருத்தை ரத்தினச் சுருக்கமாக 5 நிமிடத்தில் "ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக' சொல்லும் குறும்படங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தை டி-20 பிறப்புடன் ஒப்பிடலாம்தானே. வாழ்வின் பெரும்பகுதியை உதவி இயக்குநராக கழிப்பவர்கள் மத்தியில் யாரிடமும் "அசிஸ்டண்ட் டைரக்டராக' பணிபுரியாதவர்கள் "இதுதான் என் முதல் படம். யூ-டியுப்ல பாருங்க' என ஒரே ஒரு குறும்படத்தில் உலகின் கவனம் ஈர்ப்பதைப்போல ஒரே ஒரு டி-20 ஆட்டத்தில் அதிவிரைவில் ரன் குவித்து ரசிகர்களைக் கவர்ந்து விடுகின்றனர் சில வீரர்கள். இது தோனியும், கிறிஸ் கெய்லும் தூக்கி வைத்து கொண்டாடப்படும் கால கட்டம்.

  பொத்தாம் பொதுவாக கிரிக்கெட் என்றில்லாமல் டெஸ்ட், ஒன்டே, டி-20 என 3 வகை ஆட்டங்கள் பிறப்பதற்கான காரண கர்த்தா ரசிகர்களின் ரசனையன்றி வேறு என்னவாக இருக்க முடியும். இன்றும் ஹர்ஷா போக்லேவுடன் போட்டி போட்டுக் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை ஒரு பந்து விடாமல் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

  ஆஷஸ் தொடரின்போது பாக்ஸிங் டே(கிறிஸ்துமஸ் மறுநாள்) அன்று 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்தில் இருந்தனர். இதுபோன்றவர்களால்தான் டெஸ்ட் இன்னும் அழியாமல் உள்ளது.

  மதன் கார்க்கியின் ""அஸ்கு லஸ்கா'' பாடலை ரசிக்கும் அதே இளைஞன் கண்ணதாசனின் ராமனின் மோகனம் பாடலில் லயித்துக் கிடப்பது போலவே டெஸ்டையும், டி-20 ஆட்டத்தையும் ஒருசேர ரசிக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

  "இன்றைய டி-20 ஆட்டத்தில் என் ஆதர்ச நாயகன் குளூஸ்னரை மிஸ் செய்கிறேன்' என்று ஒரு ரசிகன் பெருமூச்சு விடுகிறார் என்றால், "திராவிட் மாதிரி டெஸ்ட் ஆட ஆளே இல்ல. டெஸ்ட் ஆடுறப்பதான் ஒரு பேட்ஸ்மேனோட முழுத் திறமையும் தெரியவரும். அந்த வகையில பாத்தா திராவிட் மன்னன்' என டெஸ்ட் போட்டிக்கு ஆள் சேர்க்கிறார் மற்றொருவர்.

  டி-20 என்பது துள்ளல் இசைப் பாடல்கள் போல; டெஸ்ட், ஒருநாள் ஆட்டம் மெலடி பாடல்கள் போல. எல்லா நேரத்திலும் எல்லா பாடல்களையும் கேட்டு விட முடியாது. துள்ளல் இசைப் பாடல்கள் சலிப்புத் தட்டும்போது மெலடி பாடல்களுக்குத் திரும்பித்தான் ஆக வேண்டும்.

  கிரிக்கெட் மீதான ரசனை தலைமுறைக்குத் தலைமுறை மாறுபடுவது குறித்து டுவிட்டரில் ஒருவர் தெரிவித்த கருத்து இது.

  அன்று நான் சச்சினின் ஸ்ட்ரெய்ட் டிரைவ் இன்று மகன் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ரசிக்கிறோம்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai