Enable Javscript for better performance
மியாமி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச், நிஷிகோரி உள்ளே; முர்ரே, ஃபெடரர் வெளியே- Dinamani

சுடச்சுட

    

    மியாமி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச், நிஷிகோரி உள்ளே; முர்ரே, ஃபெடரர் வெளியே

    By dn  |   Published on : 27th March 2014 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜப்பானின் நிஷிகோரியிடம் தோல்வியடைந்து வெளியேறினார். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை தோற்கடித்தார்.

    அமெரிக்காவின் மியாமி நகரில் வியாழக்கிழமை இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. நடப்பு சாம்பியன் முர்ரேவை 7-5, 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் செர்பிய வீரர் ஜோகோவிச். அதோடு, கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதிச் சுற்றில் முர்ரேவிடம் அடைந்த தோல்விக்குப் பழி தீர்த்துக் கொண்டார்.

    மற்றொரு ஆட்டத்தில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ஃபெடரரை 2 மணி நேரம் 9 நிமிட போராட்டத்துக்குப் பின் 3-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் நிஷிகோரி தோற்கடித்தார். அரையிறுதியில் நிஷிகோரியும், ஜோகோவிச்சும் மோதவுள்ளனர். இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் இறுதிச் சுற்றில் மோதிய இருவர் குறுகிய இடைவெளியில் மீண்டும் மோதவுள்ளனர்.

    மகளிர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான லீ நா, போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை 7-5, 7-5 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.

    போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, ஸ்லோவேகியாவின் டொமினிகோ சிபுல்கோவா மோதிய ஆட்டத்தில் 3-6, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் சிபுல்கோவா.

    அரையிறுதியில் லீ நாவும், சிபுல்கோவாவும் மோதவுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் இவர்கள் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai