Enable Javscript for better performance
வாய்ப்பை பயன்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?- Dinamani

சுடச்சுட

  

  வாய்ப்பை பயன்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

  By dn  |   Published on : 27th March 2014 11:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  team

  இருபது ஓவர் உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெள்ளிக்கிழமை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது எளிதாகும்.

  சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்படும் அணிகளுள் ஒன்றான இந்திய அணிக்கு, தடுமாறிக் கொண்டிருக்கும் வங்கதேச அணி கடும் சவால் அளிக்காது. இருப்பினும், இருபது ஓவர் ஆட்டத்தில் தனி ஒரு நபர் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்ற வாய்ப்புள்ளது என்பதால் இந்திய அணி உஷாராகவே இருக்க வேண்டியுள்ளது.

  இதுவரையிலான ஆட்டங்களில் சுழற்பந்து வீச்சாளர்களால்தான் அநேக அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அணியும் அதற்கு விதிவிலக்கல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இருந்து அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது சுழல் கூட்டணி இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளது.

  குறிப்பாக, "பேட்ஸ்மேன் அடித்து ஆடுவதைப் பற்றிக் கவலையில்லை. ரன் கொடுப்பதைக் கட்டுப்படுத்துவதை விட விக்கெட் வீழ்த்துவதே என் நோக்கம்' என்ற ஃபார்முலாவின்படி செயல்படும் அமித் மிஸ்ரா, இரண்டு முறை ஆட்ட நாயகன் விருது பெற்று நம்பிக்கை அளிக்கிறார்.

  அஸ்வினும், ஜடேஜாவும் முடிந்தவரை எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பது நல்ல விஷயம்.

  வேகப்பந்து வீச்சுத் துறையில் முகமது சமி மற்றும் புவனேஸ்வர் குமார் தங்கள் பணியை செவ்வனே செய்கின்றனர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஸ்பெல்லில் அற்புதமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார், அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், டுவைன் ஸ்மித் ஆகிய இருவரையும் 16 பந்துகள் வரை ரன்கள் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியது கவனிக்கத்தக்கது.

  இந்தத் தொடர், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் மூவர் கூட்டணியை தோனி மாற்ற மாட்டார்.

  இந்திய அணியின் பேட்டிங் எப்போதும்போல வலுவாகவே உள்ளது. தோனி களமிறங்க வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு முன் வரிசை பேட்ஸ்மேன்கள் வெற்றியை எட்டி விடுகின்றனர். யுவராஜ் சிங் மட்டும் நெருக்கடியுடன் காணப்படுகிறார். அவரும் எழுச்சி பெறும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்பெறும்.

  போட்டி தங்கள் மண்ணில் நடக்கும் சாதக அம்சத்தை சரியாகப் பயன்படுத்தத் தவறி வருகிறது வங்கதேசம். தகுதிச் சுற்றில் ஹாங்காங்கிடம் தோல்வியடைந்ததில் இருந்தே அந்த அணிக்கு நேரம் சரியில்லை. பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை. ஃபீல்டிங்கும் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டங்களில் தொடக்க வீரர் தமிம் இக்பால் சிறப்பாக ஆடியுள்ளார் என்றாலும், கடந்த இரண்டு ஆட்டங்களும் அவர் பெரிதாக ரன் குவிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹுûஸன் காயம் காரணமாக வெளியேறியதால் மஷ்ரஃபே மொர்டஸா இடம்பெற்றுள்ளார். அவரும் காயத்தால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி விட்டால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் நெருக்கடியுடன் ஆட வேண்டிய அவசியம் இருக்காது.

   

  யுவராஜ் சிங் அற்புதமான வீரர். உலகக் கோப்பைப் போட்டிகள் உள்பட பல ஆட்டங்களில் அவர் இந்திய அணிக்கு வெற்றிதேடித் தந்துள்ளார். யுவராஜ் தன் ஃபார்மை மீட்பதற்கு ஒரு ஆட்டம் போதும். அநேகமாக வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் எழுச்சி பெறுவார். யுவராஜ் சிறந்த ஃபீல்டர். ஆனால், சிறந்த ஃபீல்டர்கள் கூட சில நேரங்களில் கேட்ச்களை "மிஸ்' செய்வர். இது ஒரு பிரச்னையே அல்ல. ஒரே ஆட்டத்தில் அவர் எழுச்சி பெற்று விடுவார். அதன்பின் எல்லாமே மாறி விடும்.

   

  ரோஹித் சர்மா, இந்திய பேட்ஸ்மேன்.

   

  ஐபிஎல் கேள்விகள் வேண்டாமே...

  இந்தியா - வங்கதேசம் மோதலை முன்னிட்டு வியாழக்கிழமை ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பேட்டி தொடங்கும் முன், இந்திய கிரிக்கெட் அணியின் ஊடக மேலாளர் பாபா, "இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங்கள்' என வேண்டுகோள் விடுத்தார். அப்போது இந்தியாவில் இருந்து சென்றிருந்த பத்திரிகையாளர்களில் ஒரு மூத்த நிருபர், "பாபா இந்த கருத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையின் சமீபத்திய நிலவரம் குறித்து பதிலளிக்கும் பொறுப்பு ரோஹித்துக்கு இல்லை என்பது பத்திரிகையாளர்களுக்குத் தெரியும்' என்றார்.

  இருப்பினும், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் இருவர், ஐபிஎல் சர்ச்சை கேள்வியை எழுப்பினர். இதை சாதுர்யமாகக் கையாண்ட ரோஹித், "இப்போதைக்கு தொடரை வென்று பட்டம் வெல்வதே எங்கள் இலக்கு' என பதிலளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai