சுடச்சுட

  

  ரஹானே சதம் அடித்து பேட்டிங்கில் கைகொடுக்க, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் பந்து வீச்சில் அசத்த, இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் ஆட்டத்தில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒரு நாள் தொடரை வென்றது. 1-3 என டெஸ்ட் தொடரை இழந்ததற்கு, ஒரு நாள் தொடரை வென்று ஆறுதல் அடைந்துள்ளது.

  குல்கர்னிக்கு வாய்ப்பு: இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஆட்டம் பர்மிங்ஹாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய அணியில் தவல் குல்கர்னி இடம்பெற்றார். இது அவரது முதல் சர்வதேச ஒருநாள் ஆட்டம். இங்கிலாந்து அணியில் கேரி பேலன்ஸ், மொயீன் அலி, ஹரி கர்னி ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

  புவேனஷ்வர் அபாரம்: டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்த போதிலும், இந்திய பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். முந்தைய ஆட்டங்களைப் போல அல்லாமல், இந்த முறை இங்கிலாந்து தொடக்க ஜோடி அலெக்ஸ் ஹேல்ஸ், அலெஸ்டர் குக் இருவரும் 6, 9 ரன்களில் வெளியேறினர். 5 ஓவர்கள் முடிவதற்குள் இருவரையும் புவனேஷ்வர் குமார் அனுப்பி வைத்தார்.

  இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் அசத்தலாக பந்து வீசினார். அவர் 8 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்கள் வீசி, 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அத்துடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

  ரூட் - மோர்கன் பார்ட்னர்ஷிப்: கேரி பேலன்ஸ் 7 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 23 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கன், ஜோ ரூட் ஜோடி கை கொடுத்தது. 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 80 ரன்கள் எடுத்து உதவியது. மோர்கன் 32 ரன்களிலும், ஜோ ரூட் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து மீண்டும் தடுமாறியது.

  மொயீன் அலி விளாசல்: கடைசி நேரத்தில் மொயீன் அலி, இந்திய பந்து வீச்சை சமாளித்து ஆடினார். அவருக்கு ஜாஸ் பட்லர் உதவியாக இருந்தார். 50 பந்துகளில் 67 ரன்களை விளாசிய மொயீன் அலி, ஒரு நாள் அரங்கில் தனது 2-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். அவரை அஸ்வின் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

  மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பட்லர் 11, வோக்ஸ் 10, ஸ்டீவன் ஃபின் 2, கர்னி 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இங்கிலாந்து தரப்பில் 3 வீரர்கள் மட்டுமே 20 ரன்களைக் கடந்தனர். இதனால், இதனால் இங்கிலாந்து அணி (49.3 ஓவர்களில்) 206 ரன்களில் சுருண்டது.

  இந்தியா தரப்பில் முகமது ஷமி 3, புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  ஷிகர் தவன் எழுச்சி: அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு நீண்ட நாள்களுக்குப் பின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. இந்த சுற்றுப் பயணத்தில் ரன் குவிக்கத் தடுமாறி வந்த ஷிகர் தவன், இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற்றார். தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு அவர் "ஷாட்களைத்' தேர்ந்தெடுத்து ஆடினார்.

  அவருடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய ரஹானே, தன்னால் எந்த இடத்திலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை நிரூபித்தார். இருவரும், நிதானமாகவும் அதேநேரத்தில் மோசமான பந்துகளை ரன்களாக மாற்றவும் தவறவில்லை. இந்த ஜோடியைப் பிரிக்க இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

  விளாசல்: ஆண்டர்சன் வீசிய 5-வது ஓவரில் ரஹானே 4 பவுண்டரிகள் விளாசி தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றால், வோக்ஸ் வீசிய 10-வது ஓவரில் தவன் 3 பவுண்டரி விளாசி தானும் சளைத்தவர் இல்லை என நிரூபித்தார்.

  மொயீன் அலி வீசிய ஓவரில் சிக்ஸர், பவுண்டரி விளாசி அரைசதம் கடந்தார் ரஹானே. அதன்பின் இருவரும் விறுவிறுவென ரன்களைக் குவித்தனர். 28-வது ஓவரில் ரஹானே சதம் அடித்தார். இது ஒருநாள் அரங்கில் அவர் அடிக்கும் முதல் சதம். அவர் 96 பந்துகளில் இந்த மூன்றிலக்கத்தை எட்டினார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ரஹானே (106 ரன்கள்) விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

  மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஷிகர் தவன் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி 30.0 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

  தவன் 97 ரன்களுடனும் (87 பந்து), கோலி 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  சதம் அடித்த ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் இறுதி ஒரு தின ஆட்டம், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai