சுடச்சுட

    

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ்: முதல்முறையாக பிரணாய் சாம்பியன்

    By dn  |   Published on : 14th September 2014 11:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pran

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் ப்ரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் அவர் இந்தோனேசியாவின் ஃபிர்மன் அப்துல் கோலிக்கை வீழ்த்தி, முதல்முறையாக பட்டம் வென்றுள்ளார்.

    பாலம்பாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரணாய், 43 நிமிட போராட்டத்துக்குப் பின் 21-11, 22-20 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்றார்.

    முதல் செட்டில் 6-2 என முன்னிலையில் இருந்த பிரணாய், கடைசிவரை முன்னிலையைத் தக்க வைத்து அந்த செட்டைக் கைப்பற்றினார். 2-வது செட்டில் ஃபிர்மன் 5-3 என முன்னிலையில் இருந்தார். பின்னர் பிரணாய் சுதாரித்து 6-6 என சமநிலை பெற்று, 9-7 என முன்னிலை பெற்றார். இறுதியில் இரண்டாவது செட்டும் பிரணாய் வசமானது.

    இதன் மூலம் 22 வயதான பிரணாய் பாட்மிண்டன் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த வாரம் வியட்நாம் கிராண்ட் ப்ரீ இறுதிச் சுற்றில் பிரணாய் தோல்வியடைந்திருந்தார்.

    இந்த வெற்றி குறித்து பிரணாய் கூறுகையில், "கிராண்ட் ப்ரீ வெல்வேன் என ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இந்த பட்டம் வென்றதில் மகிழ்ச்சி. வியத்நாமில் தோல்வியடைந்தது வருத்தமாக இருந்தது. உடல் ரீதியாக சோர்வாக இருந்தது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் வெற்றிபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். இறுதிச் சுற்றுக்கு முன் சிறிது பதற்றமும் இருந்தது' என்றார்.

    இந்திய அணியின் பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், "பிரணாய் கடந்த வாரம் வியத்நாம் கிராண்ட் ப்ரீ இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தற்போது இந்தோனேசிய ஓபனில் பட்டம் வென்றுள்ளார். இது அசாதாரணமானது. இந்திய பாட்மிண்டனில் தற்போது அதிக வீரர்கள் பட்டம் வெல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai