Enable Javscript for better performance
சபாஷ் பயஸ்!- Dinamani

சுடச்சுட

    
    leander

    *நீண்ட நாள்களுக்குப் பிறகு டிடி ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ரேட்டிங் பாயிண்ட் கிடைத்திருக்கும். (நன்றி: பயஸ் - போபண்ணா)

    *பெங்களூரில் உள்ள கே.எஸ்.எல்.டி.ஏ. மைதானத்தில் இருந்து சனிக்கிழமை இரவு வெளியே வந்த ரசிகர்கள் நல்லதொரு சினிமா பார்த்த திருப்தியில் வீடு திரும்பியிருப்பர். (நன்றி: பயஸ் - போபண்ணா)

    *முதல் இரண்டு செட்களை இழந்தாலும் போராட்ட குணம் இருந்தால், வெற்றி வெகு தொலைவில் இல்லை என்பது இளம் வீரர்களுக்கு (சோம்தேவ், யூகி பாம்ப்ரி) விளங்கியிருக்கும். (நன்றி: பயஸ் - போபண்ணா)

     

    எதற்கு இத்தனை நன்றி?... டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த நன்றிக்கான அர்த்தம் விளங்கியிருக்கும். இந்த ஆட்டத்தில் செர்பியாவின் ஜிமோன்ஜிச், இலிஜா பசோஜச் ஜோடியை 1-6 6-7(4) 6-3 6-3 8-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரோஹன் போபண்ணா ஜோடி தோற்கடித்தது இப்போது பழைய செய்தி.

    இரட்டையர் பிரிவில் பெற்ற வெற்றிக்கு இருவருமே காரணம் என்றாலும் இந்த கட்டுரை ஓரவஞ்சனையாக லியாண்டர் பயஸ் என்ற ஒருவரின் புகழை மட்டுமே பாடப் போகிறது. (போபண்ணா ரசிகர்கள் மன்னிக்க).

    ஒருவகையில் போபண்ணாவையும் பாராட்டலாம். ஐந்தாவது செட்டில் முக்கியமான கட்டத்தில் தொடர்ந்து மூன்று ஏஸ் சர்வீஸ்களை வீசி வெற்றிக்கு வித்திட்டதற்காக மட்டுமல்ல, பின் நடப்பதை முன்பே கணித்ததால். அப்படி என்ன கணித்தார் என்று கேட்பவர்களுக்கு இதோ. "உடற்தகுதியுடன் இருந்தால் ரியோ ஒலிம்பிக்கில் பயஸ் உடன் ஜோடி சேர்வதில் எந்த ஆட்சேபமும் இல்லை' என வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார் போபண்ணா. இதே போபண்ணாதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் லண்டன் ஒலிம்பிக்கில் பயஸ் உடன் சேர்ந்து ஆட முடியாது என முரண்டு பிடித்தார். காலச் சக்கரத்தின் சுழற்சி, வேண்டாம் என்று ஒதுக்கியவரையே இப்போது வேண்டும் என கேட்க வைத்து விட்டது.

    சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், லியாண்டர் பயஸ் இவர்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒத்த வயதுடையவர்கள். சம காலத்தில் தத்தம் துறையில் ஜொலித்தவர்கள். சச்சின், திராவிட் இருவரும் காலில் "பேடு' கட்டுவதை நிறுத்தி நாளாகி விட்டது. ஆனால், 41 வயதிலும் "செட் பாயிண்ட்' வென்றதை உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து சக வீரருடன் மார்போடு மோதிக் கொண்டாடும் பயஸின் ஓய்வு குறித்து, இதுவரையிலும் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து நடக்கவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு கூட, எந்த தரப்பில் இருந்தும் ஆட்சேபம் வரவில்லை. அதுசரி, பழுதடைந்து பாதி வழியில் நிற்காத வரை வாகனத்தின் தேய்மானம் குறித்து யாருக்குத்தான் கவலை இருக்கும்.

    ஒரு தேர்ந்த படைப்பாளி, இதுவரையிலான படைப்புகளில் திருப்தி கொள்ளாது, அடுத்த படைப்புக்கு மெனக்கெடுவதைப் போலத்தான், எத்தனையோ கிராண்ட் ஸ்லாம்கள் வென்ற போதிலும், இது போதாது என அடுத்த வெற்றிக்கு அடி போட்டுக் கொண்டிருக்கிறார் பயஸ். அதனால்தான், தங்கள் வாய்ப்பைப் பறித்து விட்டார் என்ற எண்ணம் இளம் வீரர்களுக்கு வராத வகையில் பார்த்துக் கொண்டதோடு, வெற்றி தாகம் என்பது இப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.

    "சர்வைவல் ஆஃப் ஃபிட்னஸ்', சர்வைவல் ஆஃப் பெஸ்ட் இரண்டுக்கும் பயஸ் ஒரு அற்புதமான சாட்சி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai