Enable Javscript for better performance
டேவிஸ் கோப்பையில் இந்தியாவின் பலத்தை நிரூபித்தார் சோம்தேவ்- Dinamani

சுடச்சுட

    

    டேவிஸ் கோப்பையில் இந்தியாவின் பலத்தை நிரூபித்தார் சோம்தேவ்

    By dn  |   Published on : 14th September 2014 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், செர்பியாவின் துசன் லஜோவிச்சை வீழ்த்தினார். இதன் மூலம் நான்கு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலை அடைந்தன.

    பெங்களூரில் மூன்று நாள்களாக நடைபெற்ற இப்போட்டியின் முதல்நாளில், ஒற்றையர் பிரிவில் சோம்தேவ், யூகி பாம்ப்ரி இருவரும் தோல்வியடைந்ததால், செர்பியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவில் அனுபவ வீரர்களான லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா இருவரும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடும் போராட்டத்துக்குப் பின் வெற்றி பெற்றனர். இது இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கையை அளித்தது.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரிவர்ஸ் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ், தரவரிசையில் 61-வது இடத்தில் உள்ள லஜோவிச்சை எதிர்கொண்டார். முதல் செட்டை லஜோவிச் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சோம்தேவ் எழுச்சி பெற்றார். அந்த செட்டில் எட்டு பிரேக் பாயின்ட்களை அவர் இழக்காமல் பாதுகாத்துக் கொண்டார். இது ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

    அடுத்து, 3-வது செட்டை லஜோவிச் கைப்பற்ற ஆட்டம் விறுவிறுப்பானது. அடுத்த இரண்டு செட்களிலும் இருவரும் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெங்களூரு ரசிகர்கள், களத்துக்கு வெளியே இருந்து கேப்டன் ஆனந்த் அமிர்தராஜ் மற்றும் இந்திய வீரர்கள் சோம்தேவுக்கு அவ்வப்போது உற்சாகம் அளித்தனர்.

    ஒருவழியாக மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் 1-6, 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சோம்தேவ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி போட்டியில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த மகிழ்ச்சியில் களத்துக்கு வெளியே இருந்த லியாண்டர் பயஸ், போபண்ணா, சாகேத் மைனேனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் சோம்தேவை தூக்கி வைத்து கொண்டாடினர். பிரெஞ்சு ஓபனின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய லஜோவிச்சும், தான் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தார். குறிப்பாக 3-வது செட்டில் அவரது "சர்வ்', பேக்ஹேண்ட் ஷாட்கள் அற்புதமாக இருந்தன. இருப்பினும் சோம்தேவ் அதை எளிதாக எதிர்கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai