Enable Javscript for better performance
இந்திய பாராலிம்பிக் கமிட்டி இடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    
    paralimpic

    கடந்த மாதம் காஜியாபாத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வீரர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யத் தவறியது, கூட்டமைப்புக்குள் நிலவும் அரசியல் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி இந்திய பாராலிம்பிக் கமிட்டியை (பி.சி.ஐ.) சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐ.பி.சி.) காலவரையின்றி இடைநீக்கம் செய்தது.

    தில்லியை அடுத்துள்ள காஜியாபாத்தில் கடந்த மாதம் 15-ஆவது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வீரர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என புகார் எழுந்தது. போட்டி நடைபெற்ற மைதானத்தில் போதிய உபகரணங்கள் இல்லை. வீரர்கள் தங்கிய அறைகள் சுகாதாரமாக இல்லை. இதனால் மாற்றுத் திறனாளி வீரர்கள் பெரிதும் அவதிப்பட்டனர் என பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலளிக்குமாறு மத்திய விளையாட்டு அமைச்சகம் பி.சி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், ஐ.பி.சி. முதன்மை செயல் அதிகாரி சேவியர் கான்ஸலெஸ் கடந் 15-ஆம் தேதி பி.சி.ஐ.க்கு கடிதம், மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், "கடந்த சில ஆண்டுகளாக பி.சி.ஐ.க்குள் குழப்பம் நிலவி வருகிறது. தனிநபரின் காழ்ப்புணர்ச்சியே இந்த பிரச்னைகளுக்குக் காரணம். தேசிய அமைப்புக்குள் பல்வேறு பிரிவுகள், பல்வேறு மனிதர்கள் இருப்பது சரியல்ல. இது வீரர்களுக்கு நேர்மறையான முடிவுகளைப் பெற்றுத் தராது. எனவே, பி.சிஐ. காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    பி.சி.ஐ. இடைநீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.

    ஐ.பி.சி.யின் இந்த நடவடிக்கையால் மாற்றுத் திறனாளி வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடையால், மே 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்திய ஓபன் பாரா போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியாது. இதுகுறித்து பி.சி.ஐ. பொதுச் செயலர் சந்திரசேகரன் கூறியதாவது:

    இந்த கடினமான முடிவு அதிர்ச்சியளிக்கிறது. காஜியாபாத்தில் நடைபெற்ற சம்பவம், உள் விவகாரத்தை மேற்கோள்காட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஐ.பி.சி. அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுப்போம்.

    குறைந்தபட்சம், வீரர்களை போட்டியில் பங்கேற்கவாவது அனுமதிக்க வேண்டும் என முறையிடுவோம்.

    இந்தத் தடை விரைவில் நீக்கப்படவில்லை எனில், இந்தியன் பாரா போட்டிகள் ரத்து செய்யப்படும் என்பது கவலை அளிக்கிறது. இந்திய வீரர்கள் பங்கேற்காதபோது, அந்தப் போட்டிகள் எப்படி நடைபெறும்? என்றார் சந்திரசேகரன்.

    தேசிய அளவிலான போட்டிகளில் குறைபாடு இருந்ததற்கு காரணமான பி.சி.ஐ. முதன்மை குழுவைச் சேர்ந்த ராஜேஷ் தாமர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவர் கூறுகையில், "ஐ.பி.சி.யின் இந்த முடிவால் வீரர்கள் பாதிக்கப்படுவர்.

    எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஐ.பி.சி.க்கு கடிதம் எழுதி பிரச்னைக்குத் தீர்வு காண முயல வேண்டும். நானும் விரைவில் ஐ.பி.சி. அதிகாரிகளை சந்தித்து தடையை நீக்க வலியுறுத்துவேன். பெங்களூரில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முறையற்ற வழியில் பி.சி.ஐ. தனது கணக்குகளை சமர்ப்பித்தது.

    இதுவும் ஐ.பி.சி.க்குத் தெரிந்திருக்கும். இந்தத் தடைக்கு இதுவும் ஒரு காரணம் என்றார் ராஜேஷ் குமார். இதற்கிடையே, மத்திய விளையாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை மீண்டும் பி.சி.ஐ. செயலர் சந்திரசேகர், ராஜேஷ் தாமருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai