Enable Javscript for better performance
கதையை மாற்றி எழுதினார் பொல்லார்டு- Dinamani

சுடச்சுட

    
    pollard

    சென்னைக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், மிடில் ஆர்டரில் பொல்லார்டு வெளுத்து வாங்க, அவருடன் ரோஹித் அரை சதம் அடித்து ஒத்துழைக்க, மும்பை 183 ரன்கள் குவித்தது.

    மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12-ஆவது லீக் ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பார்த்தீவ் படேலுடன், ஆரோன் ஃபின்ச்சுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட லென்டில் சிம்மன்ஸ் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.

    ஏற்கெனவே தொடக்கத்தில் தடுமாறி வருகிறோம் என்று புலம்பி வரும் மும்பை அணியினருக்கு இந்த ஆட்டமும் அதேபோல அமைந்துவிட்டது.

    படேல் (0), கோரி ஆன்டர்சன் (4), சிம்மன்ஸ் (5) ஆகியோர் சென்னை வீரர்களின் அசத்தலான ஃபீல்டிங்கால் தங்களது விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்து வெளியேறினர்.

    இதனால் 12 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தவித்தது. தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவுடன், ஹர்பஜன் சிங் ஜோடி சேர்ந்தார். கடந்த இரண்டு ஆட்டங்களில் டக் அவுட்டில் வெளியேறிய ரோஹித் இந்த முறை சுதாரித்துக் கொண்டார்.

    ரோஹித்தும், ஹர்பஜனும் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அவர்களால் ரன்குவிப்பில் துணிந்து பேட்டை சுழற்ற முடியவில்லை. முதலில் நிதானித்த ஹர்பஜன் போகப் போக பந்துகளை விளாச முயன்றார். அதில் ஒரு பந்து ஜடேஜாவிடம் சிக்கியது. இதனால் ஹர்பஜன் 24 ரன்களுடன் (21 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) பெவிலியன் திரும்பினார்.

    தொடர்ந்து பொல்லார்டு களமிறங்கினார். மறுமுனையில் ரோஹித் அரை சதத்தை நோக்கி முன்னேறினார். அவருக்கு பொல்லார்டு கைகொடுக்க, மிடில் ஆர்டரில் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    ரோஹித்-பொல்லார்டு அரைசதம்: குறிப்பாக ஜடேஜாவின் 14-ஆவது ஓவரில் பொல்லார்டு அதிரடியாக 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாச அந்த ஓவரில் மட்டும் மும்பை 26 ரன்கள் சேர்த்தது.

    15-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என தனது அரை சதத்தை பூர்த்தி செய்த நிறைவுடன் வெளியேறினார். இதன் பின் 7-ஆவது விக்கெட்டுக்கு அம்பாதி ராயுடு களமிறங்கினார்.

    தொடர்ந்து ஆடிய பொல்லார்டும் தனது அரை சதத்தை பதிவு செய்தார். பொல்லார்டை பின்பற்றி ராயுடுவும் வெளுத்து வாங்கினார். இதனால் கடைசி கட்டத்தில் ஸ்கோர் விறுவிறுவென எகிறியது. பிராவோ வீசிய இறுதி ஓவரில் ராயுடு 29 ரன்களுடனும் (16 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்), பொல்லார்டு 64 ரன்களுடனும் (30 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்ஸர்) ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 183 ரன்கள் எடுத்தது.

     

    ராஜஸ்தான் வெற்றி

     

    விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மோர்கன் 27 ரன்களும், நமன் ஓஜா 25 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து, 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்டம் கடைசி பந்து வரை நீடித்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்த தொடக்க வீரர் ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai