Enable Javscript for better performance
அரையிறுதியில் பெர்டிச், முர்ரே, ஷரபோவா: நடால் ஏமாற்றம்- Dinamani

சுடச்சுட

  

  அரையிறுதியில் பெர்டிச், முர்ரே, ஷரபோவா: நடால் ஏமாற்றம்

  By dn  |   Published on : 28th January 2015 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shar

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் முன்னேறினர். 14 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்து வெளியேறினார்.

  மகளிர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா, கேத்ரினா மகரோவா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

  இந்த சீசனின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள நடால், போட்டித் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள தாமஸ் பெர்டிச்சை எதிர் கொண்டார்.

  2006ஆம் ஆண்டுக்குப் பின் இருவரும் மோதிய 17 ஆட்டங்களில் நடால் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், இந்த ஆட்டம் நடாலுக்கு எதிராக அமைந்தது. தொடக்கத்தில் இருந்தே நடால் மோசமாக ஆடியதால், நாள் பெர்டிச்சுக்கு சாதகமாக நகர்ந்தது. டை பிரேக்கர் வரை மூன்றாவது செட்டையும் தாமஸ் வசப்படுத்த நேர் செட்களில் அவர் வெற்றி பெற்றார்.

  முர்ரே முன்னேற்றம்: மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள ஆன்டி முர்ரே, தரவரிசையில் 53ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாûஸ எதிர் கொண்டார். கடந்த சீசனில் விம்பிள்டன் தொடரில் நடாலைத் தோற்கடித்த பின் டென்னிஸ் உலகை தன் பக்கம் ஈர்த்திருந்த கிர்ஜியாஸூக்கு, சொந்த மண் என்பதால் ரசிகர்கள் பேராதரவு அளித்தனர். தவிர, இந்த தொடரிலும் கிர்ஜியாஸ் முன்னணி வீரர்களைத் தோற்கடித்திருந்தார் என்பதால், ஆன்டி முர்ரே கவனமுடன் ஆடினார்.

  மூன்று முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள முர்ரே, 13 ஏஸ் சர்வ், தனது முதல் சர்வ் மூலம் 80 சதவீத புள்ளிகளைப் பெற்றதன் மூலம் நேர் செட்களில் வெற்றி பெற்றார். இருப்பினும், இரண்டு மணி நேரம் வரை கிர்ஜியாஸ், முர்ரேவுக்கு கடும் சவால் அளித்தார். அரையிறுதியில் முர்ரே, தாமஸ் பெர்டிச்சை எதிர் கொள்கிறார்.

  ஷரபோவா வெற்றி: மகளிர் பிரிவு காலிறுதியில் ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற ஷரபோவா, வளர்ந்து வரும் இளம் வீராங்கனையான கனடாவின் யூஜீனி பெளசார்டு ஆகியோர் மோதினர். 2008ஆம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலிய ஓபன் வெல்லக் காத்திருக்கும் ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

  ரஷியாவின் கேத்ரினா மகரோவா, ருமேனியாவின் சிமானோ ஹாலேப் ஆகியோர் மோதிய ஆட்டத்தில் மகரோவா வெற்றி பெற்றார். இதனால், அரையிறுதியில் ரஷியாவைச் சேர்ந்த ஷரபோவாவும், மகரோவாவும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இந்தமுறை ஷரபோவா கிராண்ட் ஸ்லாம் வெல்லும் பட்சத்தில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ûஸ பின்னுக்குத் தள்ளி, தரவரிசையில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

   

  செரீனா - வீனஸ் மோதல்?

  மகளிர் பிரிவு காலிறுதியில், புதன்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கடந்த முறை இத்தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய டொமினிகா சிபுல்கோவாவை எதிர் கொள்கிறார். செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்காவின் மேடிசன் கீûஸ சந்திக்கிறார்.

  இந்த ஆட்டங்களில் முறையே செரீனா, வீனஸ் வெற்றி பெற்றால், 2009 விம்பிள்டன் தொடருக்குப் பின் சகோதரிகள் இருவரும் மோதும் சூழல் உருவாகும்.

   

   

  கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் பௌசார்டு நம்பிக்கையுடனும், போராட்ட குணத்துடனும் நன்றாக ஆடி வருகிறார். அவர் அடித்த முதல் மூன்று பந்துகள் படு வேகமாக வந்தன. அவர் கடும் சவால் அளிப்பார் என்பதை உணர்ந்தேன். முடிந்தவரை சிறிது நேரம் ஆட்டத்தை அவரது கட்டுப்பாட்டில் இருந்து மீட்க முயற்சித்தேன். அதற்கு பலன் கிடைத்தது.

  ஷரபோவா, ரஷிய வீராங்கனை.

   

  எனது தொடக்கம் சிறப்பாக அமைந்தது. நடால் போன்ற வீரருக்கு எதிராக ஆடும்போது, வெற்றிக்கான கடைசி புள்ளியைப் பெறும் வரையிலும் போராட வேண்டும். அதற்கு தயாராகவே இருந்ததோடு, தெளிவான திட்டத்தையும் வகுத்திருந்தேன்.

  தாமஸ் பெர்டிச், செக் குடியரசு வீரர்.

   

  நிக் கிர்ஜியாஸ் ஆபத்தான வீரர் எனத் தெரியும். ஆட்டம் தொடங்குவதற்கு முன் லேசாக காற்று வீசிக் கொண்டிருந்தது. எனவே, முடிந்தவரை, தொடக்கத்திலேயே சிறப்பாக ஆட வேண்டும் என முடிவு செய்தேன். கிர்ஜியாஸ் ஷாட்கள் வேகமாக இருக்கும் என்பதால், முடிந்தவரை அவர் இருக்கும் இடத்தை விட்டு வெளியே பந்தை அடிக்க முயற்சித்தேன். இருப்பினும், காற்றின் வேகத்தால் சிலவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

  ஆன்டி முர்ரே, பிரிட்டன்.

   

  காலிறுதி வரை முன்னேறியதே பெருமை. இரண்டு வாரங்களுக்கு முன், இந்தத் தொடரில் பங்கேற்பது உறுதியில்லாமல் இருந்தது. இரு வாரங்களில் உடற் தகுதி பெற்று, இத் தொடரில் பங்கேற்றது மகிழ்ச்சி. வெற்றி பெற முயற்சித்தேன். முடியவில்லை. இருப்பினும், எனது ஆட்டத்தில் எனக்கு திருப்தியே.

  நிக் கிர்ஜியாஸ், ஆஸ்திரேலிய வீரர்.

   

   

  காலிறுதி முடிவுகள்
   

  ஆடவர்

  தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு) - ரஃபேல் நடால் (ஸ்பெயின்)

  6-2, 6-0, 7-6(5)

  ஆன்டி முர்ரே (பிரிட்டன்) - நிக் கிர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா)

  6-3, 7-6(5), 6-3

   

  மகளிர்

   

  மகரோவா (ரஷியா) - சிமானோ ஹாலேப் (ருமேனியா)

  6-4, 6-0

  ஷரபோவா (ரஷியா) - பெளச்சார்டு (கனடா)

  6-3, 6-2

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai