Enable Javscript for better performance
உலகக் கோப்பை:  சுனில் நரைன் விலகல்?- Dinamani

சுடச்சுட

    

    மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

    சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் தொடரில் கொல்கத்தா அணி சார்பில் பங்கேற்றபோது அவரது பந்துவீச்சு மீது சந்தேகம் எழுந்தது. சோதனையின் முடிவில், அவர் பந்துவீச்சு முறையற்றதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

    இதனால், அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெறவில்லை. தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்திலும் அவர் பங்கேற்கவில்லை. என்றாலும், உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சுனில் நரைன் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து அவர் தனது பந்துவீச்சை திருத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். எனவே, உலகக் கோப்பையில் இருந்தும் சுனில் நரைன் விலக விரும்புவதாக, மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் சங்க தலைவர் தினாநாத் ராம்நரைன் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், ""சுனில் நரைன் உலகக் கோப்பையில் இருந்து விலக உள்ளார். தனது பந்து வீச்சைத் திருத்தும் அவரது கடின முயற்சிக்கு வாழ்த்துகள்'' என்றார்.

    ஆனால், சுனில் நரைனோ, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியமோ இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கெனவே, கீரன் பொல்லார்டு, டுவைன் பிராவோ ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாமல் உலகக் கோப்பையை சந்திக்க உள்ள அந்த அணிக்கு, மாயாஜால பந்துவீச்சாளரான சுனில் நரைன் இல்லாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai