Enable Javscript for better performance
தீயணைப்பு வீரர் பயிற்சி, விளையாட்டுக்கு தமிழக அரசு ரூ.31.59 லட்சம் ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    தீயணைப்பு வீரர் பயிற்சி, விளையாட்டுக்கு தமிழக அரசு ரூ.31.59 லட்சம் ஒதுக்கீடு

    By dn  |   Published on : 28th January 2015 11:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீயணைப்புத் துறையில் கனரக ஓட்டுநர் பயிற்சி, விளையாட்டுக்கு தமிழக அரசு ரூ.31.59 லட்சம் ஒதுக்கியுள்ளது என ஏடிஜிபியும், தீயணைப்பு தடுப்பு, மீட்புத் துறை இயக்குநர் ரமேஷ் குடவாலா தெரிவித்தார்.

    மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற தென்மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கான குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து சிறப்பாக பணிபுரிந்த வீரர்களை தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டது. மேலும், தென்மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர்கள், உதவி அலுவலர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தேன்.

    பதவி உயர்வு, ஊதிய முரண்பாடுகள் குறித்து பலரும் மனு அளித்தனர். ஆனால், தீயணைப்புத் துறையில் பணியில் சேரும் போது அனைத்து விவரங்களையும் அறிந்தே சேருகின்றனர். மனுக்களை அரசு பரிந்துரைக்கு அனுப்பிவைப்பேன்.

    தீயணைப்புத் துறையில் கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தற்போதைய வீரர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக அரசு ரூ.23.59 லட்சம் ஒதுக்கியுள்ளது.

    தீயணைப்புத் துறையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த இதுவரை ரூ.60 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. தற்போது, அரசு ரூ.8 லட்சம் அளித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள தீயணைப்புத் துறை பயிற்சி மையம் மேம்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் புதிய பயிற்சி மையம் அமைக்கப்படும். அதன் பிறகே மதுரையில் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

    மதுரை அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையம் விரைவில் செயல்படுத்தப்படும். தீயணைப்பு வாகனங்கள் தாமதத்தை தவிர்க்க மாதம் இருமுறை தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    கூட்டத்தில், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு வீரர்கள் மனு அளித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் சரவணகுமார் (மதுரை), கருப்பையா (தேனி), பாலசுப்பிரமணி (தூத்துக்குடி) மற்றும் மதுரை நிலைய அலுவலர்கள் செழியன், சுரேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai